இறைவனது ஆட்சியை இம்மண்ணில் நிலைநாட்ட...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
"நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்" என்பதற்கு ஏற்ப, கடவுள் அனைத்தையும் மாற்ற வல்லவர். இன்றைய முதல் வாசகத்தில் கூட, பிற இனத்து இறைவாக்கினனாக கருதப் பட்ட பிலயாமை இஸ்ரயேல் மக்களைச் சபிப்பதற்காக அழைக்கப்பட்டிருந்த சூழலில், சபிப்பதற்காக வந்த பிற இனத்து இறைவாக்கினராகிய பிலயாம், சாபத்தை வழங்குவதற்கு பதிலாக இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகளை வழங்கக்கூடிய நபராக கடவுளால் மாற்றப்படுகிறார். கடவுள் அனைத்தையும் மாற்ற வல்லவர். சாபங்களையும் ஆசியாக மாற்ற வல்லவர். தன்னை நோக்கி தனது பணியை கேள்விக்கு உட்படுத்தியவர்களை தன் கேள்வியால் மௌனம் கொள்ள வைத்தவர் கடவுள். இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் கூட ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பார்த்து எந்த அதிகாரத்தைக் கொண்டு நீர் இவற்றை எல்லாம் செய்கிறீர் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
தன்னிடம் கேள்வி எழுப்பியவர்களிடம் திருமுழுக்கு யோவானின் அதிகாரம் யாரிடம் இருந்து வந்தது என்ற கேள்வியை எழுப்புகிறார். இயேசுவின் கேள்விக்கு அவர்களால் பதில் சொல்ல இயலவில்லை. எனவே இயேசுவும் அவர்களிடத்தில் என் கேள்விக்கு பதில் சொல்ல இயலாத உங்களிடத்தில் நானும் பதில் சொல்ல விரும்பவில்லை என்று கூறியவராய் நகருகிறார். ஆனால் இயேசுவினிடத்தில் இருந்து வெளிப்பட்ட இந்த அதிகாரம் எங்கிருந்து வந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அன்றைய காலத்தில் வாழ்ந்த பரிசேயர்களும் அதை நன்கு அறிந்திருக்கக் கூடும். இருந்தாலும் அக்கேள்வியை எழுப்பினார்கள். அவர்கள் அக்கேள்வியை எழுப்பியதற்கான மூலகாரணம், ஆண்டவர் இயேசு கிறிஸ்து, ஆலயத்தில் வியாபாரம் செய்து கொண்டிருந்தவர்களை, "என் தந்தையின் இல்லத்தை வியாபாரக் கூடம் ஆக்காதீர்கள்" என்று கூறியவராய் சாட்டையை சுழற்றக்கூடிய ஒரு மனிதராக செயல்பட்டார் என்பதால். இயேசுவின் இத்தகைய செயல் தான் அவர்களை எந்த அதிகாரத்தைக் கொண்டு நீர் இதை செய்கிறீர்? என்ற கேள்வியை எழுப்ப தூண்டியது. இயேசுவின் அதிகாரம் என்பது இறைவனிடத்தில் இருந்து வந்ததாகும்.
ஆண்டவரே உமது இல்லத்தின் மீதான எனது ஆர்வம் என்னை பற்றி எரியச் செய்கிறது
திருப்பாடல்கள் 69:9
என்ற விவிலிய வார்த்தைகளுக்கு ஏற்ப இன்றைய நாளில் ஆண்டவர் இயேசுவின் அதிகார போதனை நமக்கு கற்பிக்கின்றன வாழ்க்கை பாடத்தை குறித்து நாம் அறிந்துகொள்ள அழைக்கப்படுகின்றோம்.
ஆண்டவர் இயேசுவின் பிறப்பை ஆவலோடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கக்கூடிய நம் ஒவ்வொருவரிடத்திலும் இயேசுவினிடத்தில் காணப்பட்ட அதிகார போதனையானது நம்மிலும் வெளிப்பட வேண்டும் என்பது அவசியமான ஒன்றாகும்.
ஆண்டவர் இயேசுவின் அதிகாரம் என்பது அநீதிக்கு எதிரானதாக இருந்தது.
எங்கு நீதி மறுக்கப்பட்டதோ,
எங்கு கடவுளுக்குரிய மகத்துவமானது குறைக்கப்படக் கூடிய செயல்கள் அரங்கேறத் தொடங்குகிறதோ. அந்த இடங்களில் எல்லாம் இயேசுவின் அதிகார போதனையானது வெளிப்பட்டது என்பதை நாம் அறிவோம்.
நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் ஆண்டவர் இயேசுவின் பணியினை செய்யக் கூடியவர்களாக நம்மிடத்திலும் இந்த அதிகார போதனைகள் அவ்வப்போது இடம்பெற வேண்டியது அவசியமாகிறது.
இயேசுவைப்போல எங்கெல்லாம் அநீதிகள் தலை தூக்குகிறதோ அந்த இடங்களில் அநீதிக்கு எதிரான அதிகார போதனையை நிகழ்த்தக்கூடிய மனிதர்களாக செயல்பட வேண்டியது ஆண்டவர் இயேசுவின் சீடர்களாகிய நமது ஒவ்வொருவரின் கடமையாக இருக்கிறது. இதனையே இன்றைய வாசகங்கள் வெளிப்படுத்துகின்றன. அதிகார போதனையை குறித்து வியந்து போவதை விட, நாமும் அவரின் பிள்ளைகள், அவரது மக்கள், அவரது போதனைகளின் படி வாழ அழைக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்தவர்களாய்.... நமது வாழ்வில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் போல, அநீதிகளுக்கு எதிராகவும் ஆண்டவருக்கு எதிராகவும் செயல்படுகின்ற தருணங்களில் எல்லாம் இயேசுவை போன்ற அதிகார போதனை மிக்க மனிதர்களாக செயல்பட்டு இறைவனது ஆட்சியை இம்மண்ணில் நிலைநாட்டக்கூடியவர்களாக வாழ்ந்திட இறைவனது அருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக