அன்பு செய்து வாழ ...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்று திருவருகைக் காலத்தின் நான்காவது ஞாயிறை சிறப்பிக்கின்றோம். இந்த நல்ல நாளில் அன்பு எனும் மெழுகு திரியை ஏற்றி, இந்த வாரம் முழுவதும் அன்பை குறித்து சிந்திக்க இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.
ஒரு காட்டுக்குள் இரு காகங்கள் இருந்தன. அந்த காகங்கள் காட்டு ராஜாவின் முன்பாக கோலாகலமாக திருமணம் செய்துகொண்டன. ஆரம்ப காலத்தில் இல்லறமாம் நல்லறம் இனிதே நகர்ந்தது. காலச்சக்கரம் சுழலச் சுழல கணவன் மனைவி மீது காட்டிய அன்பும் குறையத் தொடங்கியது. ஆண் காகம் தாமதமாக வீட்டுக்கு வரத் தொடங்கியது. ஒருநாள் சோகத்தோடு, வீட்டுக்குள் நுழையாமல் ஒரு மரக்கிளையில் ஆண் காகம் அமர்ந்திருந்தது. அதன் பக்கத்தில் போய் பெண் காகம் அமர்ந்தது.
ஏன் உங்கள் முகத்தில் சோகம் தலைவிரித்தாடுகிறது? கொஞ்ச நாளாகவே நீங்கள் என்னோடு பேசுவதே இல்லை. என்ன காரணம்? என்று கேட்டது பெண் காகம்.
ஆண் காகம் ஒன்றும் சொல்லாமல் எழுந்து பறந்தது. பெண் காகமும் விடுவது போல் இல்லை. கணவன் பின்னால் பறந்தது. ஆண் காகமோ, கொஞ்சம் என்னை தனியா விடுகிறாயா? ஏன் என் பின்னாலேயே சுத்துற? பேசாம வீட்டுக்குப் போ! மனசு சரியானதும் நானே வீட்டுக்கு வந்து விடுவேன் என்றது.
உடனே பெண் காகம் சொன்னது, நீங்கள் சொன்னதெல்லாம் சரி. ஆனால் கடைசியில் சொன்னது தான் பொய். மனசு சரியில்லை என்று சொல்கிறீர்களே! உங்கள் மனசு என்கிட்ட அல்லவா இருக்கிறது. அது நல்லா தானே இருக்கு. நம்ம கல்யாணம் பண்ண அன்றைக்கு, மாலைய மட்டுமா மாத்திக்கிட்டோம்! மனசையும் தானே மாத்திக்கிட்டோம்! என் மனசு உங்ககிட்ட இருக்கு. என்ன நீங்க அதிகமா அன்பு செய்றதே இல்ல! அதனாலதான் உங்க கிட்ட இருக்கிற என் மனசு சரியில்ல. வீட்டுக்கு வாங்க. என்னை அன்பு செஞ்சா எல்லாம் சரியாகிவிடும் என்றது.
ஆம்! அன்புக்குரியவர்களே!
அன்பே அனைத்திற்கும் ஆணிவேராய் அமைந்துள்ளது. இந்த உலகம் இயங்குவது அன்பால் தான். அன்பு மட்டுமே இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் மனிதனாக பிறந்ததும் அன்பின் அடிப்படையில் தான்.
அந்த அன்பின் அடிப்படையில் தான் அவர் நமக்காக தனது இன்னுயிரையும் தியாகம் செய்தார்.
இன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருக்கக்கூடிய நமது உள்ளங்களிலும் இந்த அன்புத் தீயானது பற்றி எரிய வேண்டும் என்பதே இன்றைய நாளின் மையச் செய்தியாக அமைந்திருக்கிறது.
இன்றைய நாளில் வாசிக்கப்பட்ட வாசகங்கள் அனைத்தும் அதையே நமக்கு வெளிப்படுத்துகின்றன. இஸ்ரயேல் மக்கள் பலவிதமான தவறான வழிகளில் சென்றாலும், பலமுறை கடவுளை விட்டு பிரிந்திருந்த நிலையில் இருந்தாலும், கடவுள் அவர்களைத் தேடிச் சென்று அன்பு செய்யக் கூடியவராக இருந்தார். அவர் எப்போதும் இஸ்ரயேல் மக்களை கைவிட்டு விடக் கூடிய நபராக இல்லை. பல நேரங்களில் இந்த இஸ்ரயேல் மக்கள் வணங்காக் கழுத்துடைய மக்களாக ஆண்டவரின் கட்டளைகளை புறக்கணித்து ஆண்டவரோடு செய்த உடன்படிக்கையை விட்டு விலகிய போதும் கூட, ஆண்டவர் அவர்களை தேடிச்செல்லக் கூடியவராக இருந்தார். அது அவரின் அன்பின் வெளிப்பாடாகும். இதையே இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. இந்த நம் கடவுள், நம்மீது கொண்ட அன்பின் அடிப்படையில் தான் இந்த உலகிற்கு வந்தார்.
இன்றைய நாளில் நாம் வாசிக்கக் கேட்ட நற்செய்தி வாசகத்தில் கூட ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைத் தன் வயிற்றில் சுமந்திருந்த அன்னை மரியா, அன்பின் அடிப்படையில் தனது உறவினராக கருதப்பட்ட, கருவுற்று இருக்கக்கூடிய எலிசபெத்தம்மாளை சென்று சந்தித்து, அவருக்கு பணிவிடை செய்யக்கூடிய ஒரு நபராக இருப்பதை நாம் வாசிக்கக் கேட்டோம்.
அன்பு மட்டுமே அனைத்தையும் தியாகம் செய்ய தூண்டும். இந்த உலகத்தில் நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் வெறுக்கும் நபர்கள் பலர் இருந்தாலும், அன்பு செய்யக் கூடிய மனிதர்களாக நாம் இருக்க வேண்டும். அடுத்தவரை வெறுக்கத் துவங்கினால் அன்பு செய்ய நேரம் இருக்காது. நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்யவும் அன்பால் இந்த சமூகத்தை ஆளவும் இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.
அன்னை மரியா அடுத்தவர் மீது கொண்டிருந்த அன்பைப் போல, நாம் வாழுகின்ற சமூகத்தில், நாமும் ஒருவர் மற்றவர் மீது அன்பு கொண்ட மக்களாக வாழ இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது .
ஆனால் பல நேரங்களில் நாம் பிறரால் அன்பு செய்யப்பட வேண்டும் என விரும்புகிறோம். பிறரால் நாம் அன்பு செய்யப்பட வேண்டும் என விரும்புகிற போது நாம் பிறரை அன்பு செய்ய வேண்டும் என்பதையும் நாம் நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிய வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
அன்பின் அடிப்படையாக விளங்குவதே குடும்பங்கள். நமது குடும்பங்களில் அன்பானது மேலோங்கிக் காணப்பட வேண்டும். "நான்"
என்ற ஆணவத்தை அழித்து, "நாம்" என்ற உணர்வோடு ஒருவர் மற்றவர் நலனில் அக்கறை கொள்ளக் கூடியவர்களாக, ஒருவர் மற்றவர் மீது அன்பு காட்டக் கூடிய மக்களாக வாழ இந்த நாள் நமக்கு அழைப்புத் தருகிறது.
திருமணத்தில் உருவாகக் கூடிய குடும்ப உறவு என்பதும் கூட வெறுமனே ஒரு சடங்கு அல்ல. அது வாழ்க்கைப் பாடம். இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாய் இருப்பேன் என நாம் கொடுக்கக்கூடிய வாக்குறுதிகள், வெறும் வாக்குறுதிகள் அல்ல, வாழ்க்கைக்கான உறுதிகள். அந்த உறுதியோடு எப்போதும் இன்பத்தோடு ஒருவர் மற்றவரை அன்பு செய்து வாழ இன்றைய நாளில் ஆண்டவர் இயேசு நமக்கு அழைப்பு தருகின்றார்.
நம்மீது கொண்ட அன்பின் காரணமாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து சிறு குழந்தையாகப் பிறந்து நம்மைத் தேடி உலகிற்கு வந்தார். இன்று நாமும் இந்த உலகத்தில் கடவுளால் படைக்கப்பட்ட ஒவ்வொருவருமே அன்பு செய்யத் தகுந்தவர்கள் என்பதை உணர்ந்தவர்களாக, அடுத்தவரை அன்பு செய்ய, தேடிச் செல்ல கூடிய மக்களாக இருக்க, இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.
அன்பை விதைக்கவும், அன்பை சுவைக்கவும், இந்த நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்போம். ஒருவர் மற்றவரை அன்பு செய்து வாழ இந்த நாளில் இறைவனது அருளை வேண்டி தொடர்ந்து இத்திருப்பலியில் இணைவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக