இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
உங்கள் அனைவருக்கும் பாலன் இயேசுவின் பிறப்பின் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி இறைவார்த்தையை உங்களோடு பகிர்ந்து கொள்வதில்
மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இயேசு மீண்டும் பிறப்பதற்காக உலகத்திற்கு வந்தார் என்ற அடிப்படையில் ஒரு கற்பனைக் கதையினை உங்களோடு பகிர விரும்புகிறேன்.
இயேசு மீண்டும் இவ்வுலகத்தில் பிறப்பதற்காக வருகிறார். இரவு மணி பதினொன்று முப்பது இருக்கும். பட்டினத்தில் அதாவது நம்முடைய நகரத்தில் ஒரு பணக்காரனின் வீட்டு கதவை இயேசு தட்ட, ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த பணக்காரன், நாகரீக உடையில் நின்ற இயேசுவை உள்ளே வரவேற்க மறுத்து, நீ ஏமாற்றுபவன் இன்னும் சிறிது நேரம் நீ இங்கேயே நின்றால், காவல்நிலையத்தில் அறிவித்து விடுவேன் என்றான்.
இயேசு அடுத்த தெருவிற்கு சென்றார். அது ஒரு நடுத்தரக் குடும்பம் வீட்டுத் தலைவன் கதவை திறந்து, நீ இயேசு தானா? எங்களை ஆசீர்வதிக்க வந்தாயா? அடையாள அட்டை இருக்கிறதா? என்றான். இல்லை என்றதும் இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான்.
இயேசு பட்டினத்தை விட்டுவிட்டு கிராமத்திற்கு சென்றார். ஒரு குடிசைக்குள் நுழைந்தார். அந்த குடிசைக்கு கதவே இல்லை. உள்ளே இருந்த ஏழை கிழவனும் கிழவியும் உள்ளே வந்தவரை அன்போடு வரவேற்று, போர்த்திக்கொள்ள போர்வையும், சூடான கஞ்சியையும் குடிக்கக் கொடுத்தார்கள். கஞ்சி நிறைந்த பாத்திரத்தை கையில் வைத்துக்கொண்டு இயேசு, இவ்வளவு அன்பாக வரவேற்கிறார்களே! நான் யார் தெரியுமா? என்றார்.
அதற்கு கிழவரோ, தெரியும் என்றார். இயேசுவின் பிறப்பு விழாவில் கலந்து கொள்ள மூவரும் கோயிலுக்குள் நுழையும் நேரம் வந்தது.
இயேசு கிழவரைப் பார்த்து இப்படி என் மீது பாசத்தை பொழிந்த உங்களுக்கு நன்றி! ஆம்! என்னை தெரியும் என்று சொன்னீர்களே! நான் யார்? என்றார். கிழவரோ! நீ தான் இயேசு என்றார். இயேசுவுக்கு இன்பம் கலந்த அதிர்ச்சி. எப்படி தெரியும்? என்றார். நீ கடவுளாக இல்லையென்றால் ஏழையின் வீட்டிற்குள் புகுந்து இருக்க மாட்டாய்! என்றார் அந்த கிழவர்.
ஒரு குழந்தையின் பிறப்பு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. ஆனால் இன்று பிறக்கவிருக்கும் நம் பாலன் இயேசுவின் பிறப்பு இந்த அகிலத்திற்கே மகிழ்ச்சியைக் கொண்டு வரக்கூடிய ஒன்றாகிறது.
பிறக்க உள்ள பாலன் இயேசு நமது வாழ்வில் நாம் இழந்துபோனவைகளை எல்லாம் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளக்கூடிய வகையில் புது பிறப்பாக இன்று அமைகின்றார்.
இவரது பிறப்பு நமது வாழ்வில் கொடிய நோயின் தாக்கத்தினால் நலிவுற்ற நமது நம்பிக்கையை புதுப்பிக்க கூடியதாகவும்.
மறைந்து போன நமது மனித நேயப் பண்புகளை மலரச் செய்ய கூடியதாகவும்.
இழந்துபோன அமைதியை மீண்டும் நமது குடும்பங்களில் கொண்டுவரக் கூடியதாகவும்.
தனித்து விடப்பட்ட நமது வாழ்வில் நம்மைத் தேடி வரும் இறைவனின் அன்பின் ஆற்றலை நமக்குள் விதைக்க கூடியதாகவும் உள்ளது.
நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்".
(எசேக்கியேல் 36:26) என்ற ஆண்டவரின் வார்த்தைகளுக்கு ஏற்ப பிறக்க உள்ள பாலன் இயேசு நமக்கு புதிய இதயத்தையும் புதிய ஆவியையும் தருகின்றார்... பிறக்க உள்ள இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நமது உள்ளத்திலும் இல்லத்திலும் ஏற்றுக் கொண்டவர்களாய் நமது வாழ்வில் நாம் இழந்து போன
நம்பிக்கையையும்
அன்பையும்
அமைதியையும்
இரக்கச் செயல்கள் மூலம் உருவாகும் மகிழ்வையும் ...
மீண்டுமாய் புதுப்பித்துக்கொண்டு நம்மைத் தேடி வருகின்ற இறைவனை நமது உள்ளத்திலும் இல்லத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மக்களாக வாழ இந்த கல்வாரி பலியில் பக்தியோடு இணைவோம். பாலன் இயேசுவை இதயத்தில் ஏற்போம்.
இனிய கிறிஸ்து பிறப்பு விழா நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅருட்சகோதரர் சகாயம் அவர்களின் பணிகள் சிறக்க ஜெபிக்கிறோம்! 🎉🎉🎉🎉🎉