நலமான பணிகளை முன்னெடுக்க...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் வார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
முதிர்ந்த வயதிலும் ஆண்டவரின் பணியினை செய்து கொண்டிருந்த அன்னாவின் வாழ்வு இன்று நமது வாழ்வை திருப்பி பார்க்க அழைப்பு தருகிறது. வயதாக துவங்குகிறது என அறிகின்ற போதே நம்மை நாம் சுருக்கிக்கொண்டு அடுத்தவரோடு கொண்டுள்ள உறவில் இருந்து சற்று விலகியவர்களாக, நமக்கு நாமே சொல்லிக் கொண்டு, நாம் முதிர்ந்தவர்கள்; நம்மால் முடியாது என சொல்லிக் கொள்ளக் கூடியவர்களாக மாறிப் போகின்ற நமது வாழ்வில், முதிர்ந்த வயதிலும் ஆண்டவரின் திருப் பணியினை அயராது செய்து கொண்டிருந்த அன்னாவின் வாழ்வு, நமது வாழ்வில் நாமும் முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதை எடுத்துரைக்கக் கூடிய ஒன்றாக அமைகிறது.
அப்துல்கலாம் அவர்கள் கூறுவார், நீ முடியாது என சொல்லுகின்ற ஒன்றை எங்கோ யாரோ ஒருவர் செய்து கொண்டுதான் இருக்கிறார். யாரோ ஒருவரால் முடிகிறது என்றால், அது ஏன் உன்னால் இயலாது என்று.
நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் நாமும் நம்பிக்கையோடு இருந்தால், இதில் எந்த வயதினராக இருந்தாலும் இறைவனது பணியான இறையாட்சியின் மதிப்பீடுகளை நமது வாழ்வில் வெளிப்படுத்த முடியும். இத்தகைய முயற்சியில் ஈடுபடுவதற்கு வயது ஒரு காரணமல்ல. இத்தகைய முயற்சியில் ஈடுபடுவதற்கு நமது பொருளாதாரம் ஒரு காரணம் அல்ல. இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு நேரம் என்பது ஒரு காரணம் அல்ல. எல்லா சூழ்நிலையிலும் நாமும் அன்னாவைப் போல இறைவனது பணியினை செய்யக்கூடியவர்களாக, இறையாட்சியின் மதிப்பீடுகளை வாழ்வாக்கக் கூடியவர்களாக இருக்க இன்றைய நாள் அழைப்பு தருகிறது. இறைவனின் அழைப்பை உணர்ந்து கொண்டு, நம்பிக்கையோடு பல நலமான பணிகளை முன்னெடுக்க இறையருள் வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக