இறைவனது திட்டத்திற்கு செவி கொடு... (8.12.2021)
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்று தாய்த் திருஅவையாக இணைந்து அமலோற்பவ அன்னையின் திருநாளை நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய நாளில் அமலோற்பவ மரியாவின் பெயரை தாங்கியிருக்கக் கூடிய ஒவ்வொரு சகோதர சகோதரிக்கும் வாழ்த்துக்களையும் ஜெபங்களையும் உரித்தாக்குகிறேன்.
அதேசமயம் அமலோற்பவ அன்னையை பாதுகாவலியாக கொண்டிருக்கக்கூடிய திருச்சி மறைமாவட்டத்தைச் சார்ந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் ஜெபங்களையும் உரித்தாக்கி மகிழ்கிறேன். மேலும் அமலோற்பவ அன்னையின் சார்பாக இயங்குகின்ற அனைத்து கன்னியர் மடங்களுக்கும் வாழ்த்துக்களையும் ஜெபங்களையும் உரித்தாக்குகின்றேன். ஆண்டவர் இயேசுவின் பிறப்பை முன்னறிவிக்கப்படுகின்ற நிகழ்வை இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம்.
அன்னைமரியா ஆண்டவர் இயேசு இந்த மண்ணில் மனிதனாக பிறப்பதற்கு கடவுளின் வார்த்தைக்கு இணங்கியவராய் தன் இசைவை தெரிவித்தவர். அன்னையின் அந்த இசைவு தான் ஆண்டவர் இயேசு இந்த மண்ணில் பிறப்பதற்கு வழிவகுத்தது. பல நேரங்களில் நாம் கடவுளின் திட்டத்திற்கு இசைந்து போகக் கூடியவர்களாக இல்லாது, நமது விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் வாழும் மனிதர்களாக இருக்கின்றோம். கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப நாம் இந்த சமூகத்தில் வாழ்கின்ற போது அன்னை மரியாவை போல பலவிதமான இன்னல்களை சந்திக்க நேரிடலாம். இன்னல்களை சந்திக்கின்ற போதெல்லாம், இறைவன் நம்மை காப்பார், அவர் நம்மை வழிநடத்துவார் என்ற நம்பிக்கையோடு நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை ஆவலோடு எதிர்நோக்குகின்ற நாம் இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் மனிதனாக இருந்த போது நாம் எப்படி வாழவேண்டும் என்பதை நமக்கு கற்பித்தார். அவர் கற்பித்தவைகளை நமது வாழ்வாக மாற்றவும், நமது சொல்லிலும் செயலிலும் அதை வெளிக்காட்டக் கூடியவர்களாக நாம் இருக்கவுமே இறைவன் அழைப்பு தருகிறார்.
இறைவன் தருகின்ற இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு நாம் செயல்படும்போது அன்னை மரியாவைப் போல பலவிதமான துன்பங்களையும் இன்னல்களையும் சந்திக்க நேரிடும். சந்திக்கின்ற போதெல்லாம் அன்னை மரியாவின் துன்பத்தை நாம் நினைவு கூர்வோம். அன்னை மரியாவை பாதுகாத்த இறைவன் நம்மையும் பாதுகாப்பார். துன்பங்களுக்கு மத்தியிலும் ஆண்டவரின் திட்டத்திற்கு இசைவு கொடுக்கக் கூடியவர்களாக, ஆண்டவரின் திட்டத்திற்கு ஏற்ப நடக்கக் கூடியவர்களாக நாம் செயல்பட வேண்டும் என்பதை இந்த அமலோற்பவ அன்னையின் திருவிழாவானது நமக்கு உணர்த்துகிறது. அன்னைமரியா மாசுமறுவற்றவர், பாவம் இல்லாதவர், எனவே தான் அவர் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகம் எடுத்துக்கொள்ளப்பட்டார். நாமும் கடவுளின் திட்டத்திற்கு செவிகொடுத்து அவரது விருப்பத்திற்கு ஏற்ப இச்சமூகத்தில் நடக்கின்ற போது இறைவன் அதற்கேற்றபடி நாம் நடக்கின்ற போது இறைவன் நம்மையும் பாதுகாத்து வழிநடத்தக் கூடியவராக இருக்கிறார். இறைவனது திட்டத்தை நாம் கண்டுகொள்ளவும் அன்னை மரியாவை போல இறைவனது திட்டத்திற்கு செவி கொடுக்கவும் இறையருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக