நற்செய்தி பணியாளர்களாக....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் என்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினுடைய வார்த்தைகளை தங்களது வாழ்வாக மாற்றிக் கொண்டு, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை சீடர்கள் பல்வேறு நாடுகளுக்கு அறிவிக்கச் சென்றார்கள்.
அவர்களை பின் தொடர்ந்து பலரும் நற்செய்தி அறிவிப்பு பணியாளர்களாக மாறினார்கள். அவர்களுள் ஒருவரான புனித சவேரியாரின் திருநாளை இன்று நாமும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். எல்லோருக்கும் எல்லாமுமாய் ஆனேன் என்ற பவுலடியாருடைய வார்த்தைகளுக்கேற்ப சவேரியார், சென்ற இடங்களில் எல்லாம் நற்செய்தி அறிவிக்கக் கூடியவராகவும், மக்களுக்கு ஏற்ற வகையில் தன்னை மாற்றிக் கொள்ளக் கூடியவருமாக இருந்தார். மக்களுக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார். அவரது வார்த்தைகளைக் கேட்டு இன்றும் பலரும் அவர் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.
நற்செய்தி அறிவிப்பவரின் பாதங்கள் எவ்வளவு அழகானவை என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப நற்செய்தி அறிவிக்கச் சென்ற புனித சவேரியாரின் உடலானது, அவரது உயிர் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், அவரது உடலானது இன்றும் அழியாமல் இருந்து வருகிறது.
அதனை பார்க்கும் போதெல்லாம் நமக்கு நம்பிக்கையும் வாழ்வும் பெற முடியும் என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பணியை செய்யக்கூடிய ஒவ்வொருவரும் அழியா வாழ்வைப் பெறுவார்கள் என்பது, அவர்களின் புகழும் அவர்கள் செய்த நல்ல செயல்களும் இம்மண்ணில் அவர்கள் மறைந்தாலும், அவர்களை பின் தொடரும் என்பதற்கு ஏற்ப சவேரியாருடைய புகழும் சவேரியாருடைய எண்ணங்களும் சிந்தனைகளும், ஆண்டவரை பற்றிய அவரது போதனைகளும் இன்றும் மக்களிடையே
பரவி வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இன்றைய நாளில் அவரை நினைவு கூருகின்ற நாம் நமது வாழ்வில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கக்கூடிய மனிதர்களாக இருக்க அழைக்கப்படுகின்றோம். இதுவே இன்றைய நாளில் இறைவன் நமக்கு தரும் செய்தியாக உள்ளது. ஆண்டவர் தருகின்ற செய்தியினை உணர்ந்து கொண்டவர்களாக, நற்செய்தி அறிவிக்கவும் அதனால் வரக்கூடிய இன்னல்களையும் துன்பங்களையும் ஏற்றுக் கொள்ளவும் நாம் உள்ளத்தில் உறுதி ஏற்போம்.
எல்லா நேரமும் நம்மோடு இருந்து நம்மை காக்கும் இறைவன், துன்பங்களுக்கு மத்தியில் நம்மை வழிநடத்தி, ஆண்டவரின் நற்செய்தியை அறிவிக்கக்கூடிய நல்ல பணியாளர்களாக நம்மை மாற்றுவார் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து பயணிப்போம், இறைவனது அருளை வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக