திங்கள், 20 டிசம்பர், 2021

சந்திப்புகளை குறித்துச் சிந்திக்க ...(21.12.2021)

சந்திப்புகளை குறித்துச் சிந்திக்க ...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் சந்திப்புகளை குறித்துச் சிந்திக்க அழைப்புத் தருகின்றன. இன்றைய முதல் வாசகத்தில் தலைவியானவள் தலைவனின் வருகைக்காகக் காத்திருக்கிறாள்.  அந்த தலைவனின் வருகை அவளுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது எனக் குறிப்பிடப்படுகிறது.  அதிலும் குறிப்பாக எதிர்பாராத நேரத்தில் வரக்கூடிய தலைவனின் வருகை,  அவளது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது என இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது.    நற்செய்தி வாசகத்திலும் அன்னை மரியா எலிசபெத்தம்மாளை சந்தித்ததைக் குறித்து வாசிக்க கேட்டோம்.  முதிர்ந்த வயதில் எலிசபெத்தம்மாள் கருவுற்றிருக்கிறார் என்ற செய்தியை அறிந்ததும் அன்னை மரியா விரைந்து சென்று அவரை பாதுகாத்து பராமரிக்கும் பணியில் தன்னை இணைத்துக் கொள்கிறார். மரியாவின் சந்திப்பு எலிசபெத்தம்மாளுக்கு மகிழ்ச்சியை தந்தது.  அவருக்கு மட்டுமல்ல அவரது வயிற்றில் இருந்த குழந்தைக்கும் மகிழ்ச்சியை தந்தது.

இவ்வடிப்படையில் அனுதினமும் நாம் நமது வாழ்வில் சிந்திக்கின்ற மனிதர்களைப்  பற்றி சிந்திக்க அழைக்கப்படுகின்றோம். அனுதினமும் நாம் கடந்து செல்லக்கூடிய மனிதர்களை இன்றைய நாளில் நிமிர்ந்து பார்ப்போம்.  நமது சந்திப்பு அவர்களது உள்ளத்தில் மகிழ்ச்சியை உருவாக்கியிருக்கிறதா என்ற கேள்வியை நாம் நமது உள்ளத்தில் எழுப்பி பார்ப்போம். 


பல நேரங்களில் இருவர் அல்லது மூவர் இணைந்தால், நம்மை குறித்தும் நமது  வளர்ச்சி குறித்தும் பேசுவதை விட, பல நேரங்களில் நாம் மூன்றாம் நபரைப் பற்றி பேசக் கூடியவர்களாகவே இருக்கின்றோம்.  ஆனால் திருவிவிலியம்  கூறுகின்றது,  நாம் நற்பேறு பெற்றவர்களாக  விளங்க வேண்டுமாயின் பொல்லாரின் சொல்படி நடவாதவராகவும், இகழ்வாரின் குழுவினில்  அமராதவராகவும் இருக்க வேண்டும் என திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். 

நற்பேறு பெற்றவர் யார்? – அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்.

         திருப்பாடல்கள் 1:1


எனவே இவ்வார்த்தைகளின் அடிப்படையில் நாம் நமது வாழ்வை அமைத்துக் கொண்டவர்களாக,  நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்கின்ற மனிதர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியவர்களாக இருக்க  இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது. நம்மை சந்திக்க வரும் ஆண்டவரின் வருகைக்கு நம்மை நாம் தயாரித்துக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் ஆண்டவரின் சந்திப்பு நமக்கு மகிழ்ச்சியைத் தருவது போல தினமும் நாம் சந்திக்கும் மனிதர்களின் வாழ்வில் நமது சந்திப்பு மகிழ்ச்சியை உருவாக்குவதற்கான அருளை வேண்டி இணைந்து தொடர்ந்து இன்றைய நாளில் செபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...