வெள்ளி, 10 டிசம்பர், 2021

கற்பித்தபடி வாழ்வோம்...(11.12.2021)

கற்பித்தபடி வாழ்வோம்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய இறைவார்த்தை அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
                  ஒரு வயதான மூதாட்டி ஒருவர் தினமும் கல்லறைக்குச் சென்று ஒரு கல்லறைக்கு அருகில் அமர்ந்து, அந்தக் கல்லறையை பார்த்து  பேசிக் கொண்டிருப்பாராம். இதனை வாடிக்கையாக அவர் செய்வதை கவனித்த இளைஞர்கள் சிலர் அவர் என்னதான் செய்கிறார் தினமும் என பார்ப்பதற்காக அவரை பின் தொடர்ந்தார்கள். அவ்வாறு அவர்கள் பின்தொடர்ந்த வேலையில் அன்றைய நாளில் அந்த மூதாட்டி இவ்வாறு பேசிக் கொண்டிருந்தார்.   "நீங்கள் என்னோடு வாழ்ந்த காலத்தில் நான் உங்களோடு சரியாக பேசவில்லை. உங்களுக்கு சரியாக உணவு கொடுத்து உங்களை கவனித்துக் கொள்ளவில்லை. இவ்வாறாக  அந்த பெண்மணி கல்லறையில் பேசிவிட்டு  அழுதுவிட்டுச் சென்றாராம்.  

          மனிதர்களில் பலர் இருக்கும்போது மகிழ்வதை விட இல்லாதபோது அதை எண்ணியே வருந்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.  இன்றும்  எலியா மக்களிடையே வாழ்ந்த போது அவர் சொல்லியவற்றை கேட்டு அதன்படி தங்கள் வாழ்வை மாற்றிக் கொண்டு பயணம் செய்யாத மக்கள், மீண்டும் எலியா வருவார் என்ற நம்பிக்கையோடு அமர்ந்திருக்கிறார்கள். இத்தகைய செயலை இயேசு சாடக் கூடியவராக இருக்கிறார்.  ஏற்கனவே அவர் வந்தார். அவர் நாம் எப்படி வாழவேண்டும் என்பதை கற்பித்தார். அதன்படி வாழாமல் இருந்துவிட்டு, இனி அவர் வருவார், வரும்போது சொல்வார், சொல்லும்போது அதற்கேற்றபடி வாழ்வோம் என எண்ணிக்கொண்டு பயணிப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை என்பதை ஆண்டவர் இயேசு வெளிப்படுத்துகிறார்.  நாமும் அனுதினமும் திருப்பலியில் பங்கெடுக்கிறோம், இறைவார்த்தையை வாசிக்கிறோம், பல மனிதர்கள் வழியாக ஆண்டவரின் வார்த்தைகளை கேட்கிறோம், இறையாட்சியின் விழுமியங்களையும் காது கொடுத்து கேட்கிறோம்.  நாம் கேட்பதை எல்லாம் நமது வாழ்வாக்குகிறோமா என்ற கேள்வியை இன்று நாம் எழுப்பி பார்க்க அழைக்கப்படுகிறோம்.  நாம் வாழ்வாக மாற்றாமல், ஆண்டவர் இயேசு பிறந்து, உள்ளத்தில் வந்து நின்று அனைத்தையும் மாற்றுவார் என்று எண்ணிக் கொண்டே
பயணிப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை.  ஆண்டவர் இயேசு இந்த உலகத்திற்கு வந்த போது அவர் இந்த மண்ணில் மனிதனாக வாழ்ந்த போது எதையெல்லாம் கற்பித்தாரோ, அதையெல்லாம் வாழ்வாக மாற்றிக்கொண்டு,  இச்சமூகத்தில் பயணிக்கின்ற போது தான் ஆண்டவர் இயேசுவின் பிறப்பானது ஒரு அர்த்தமுள்ள பிறப்பாக நம்மிடையே  இருக்கும்.  அவ்வாறு நாம் பயணம் செய்யாது,  நம் விருப்பம் போல இருந்துவிட்டு, ஆண்டவர் பிறந்தால் அனைத்தும் சரியாகிவிடும் என்ற எண்ணத்தோடு மட்டுமே பயணிப்போம் என்றால் அது வாடிக்கையான ஒரு நிகழ்வாகத் தான் இருக்கும் என்பதை இன்றைய வாசகங்கள் வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைப்பு தரப்படுகிறது.  ஆண்டவரின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்குகின்ற நாம், பிறக்கவிருக்கும் பாலன் இயேசுவை, நமது  உள்ளத்திலும் இல்லத்திலும் பிறக்க வைக்க, நமது செயல்களை,  அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து நாம் எவ்வாறு வாழ வேண்டும் என கற்பித்தாரோ, அவைகளின் படி அமைத்துக் கொள்ளக் கூடியவர்களாக  நாம் மாறுவோம். அதன் வழியில் ஆண்டவரை நமது உள்ளத்திலும் இல்லத்திலும் பிறக்க வைக்க இறைவனின் அருளை வேண்டி இணைவோம் இந்த திருப்பலியில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...