திங்கள், 27 டிசம்பர், 2021

மாசில்லா குழந்தைகளின் விழா...(28.12.2021)


மாசில்லா குழந்தைகளின் விழாl...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய நாள் மாசில்லா குழந்தைகளின் விழாவினை கொண்டாட நமக்கு அழைப்பு தருகிறது.  அன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து பிறந்தார் என்ற  செய்தியை அறிந்து அவரை கண்டு வணங்க வந்த ஞானிகள் வழி தெரியாத நிலையில் ஏரோது அரசனிடம் சென்று வழி கேட்டார்கள்.  அவர்கள் கூறியதை கவனத்தோடு கேட்ட அரசன் இயேசுவின் பிறப்பைக் குறித்து அஞ்சினான். எனவே தாங்கள் வணங்க வந்திருக்கும் இயேசுவைப் பற்றி தகவல் தந்தால் தானும் சென்று அவரை  வணங்குவேன் எனக் கூறி,  நயவஞ்சகமாக இயேசுவை சிறுவயதிலேயே தீர்த்துக் கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டான். 

ஆனால் இந்த ஏரோதின் உள்ளத்தை இறைவனின் தூதர்கள் ஞானிகளுக்கு வெளிப்படுத்தி, ஞானிகளின் வழியை மாற்றினார்கள். ஞானிகளால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த ஏரோது அரசன்,  இரண்டு வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைகள் அனைத்தையும் கொலை செய்ய ஆணையிட்டார்.  அதன் விளைவாக பல குழந்தைகள் அன்று கொல்லப்பட்டனர்.  அக்குழந்தைகளைத் தான் அந்த மாசில்லாத குழந்தைகளைத் தான் இன்று நாம் நினைவுகூர திருஅவை நமக்கு அழைப்பு விடுக்கிறது.
இயேசுவுக்காக அன்று இரத்தம் சிந்தியவர்களுள் முதன்மையானவர்கள் இந்த மாசில்லா குழந்தைகள்.


               பல இடங்களில், பல நேரங்களில் நமது அறியாமையாலும்,  நமது அலட்சியத்தாலும் பல குழந்தைகள் இறப்பை  சந்தித்துக்கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில், இறைவனின் படைப்பாக கருதப்படுகின்ற, இறைவனின் பரிசாக கருதப்படுகின்ற இந்த குழந்தைகளை பாதுகாத்து வளர்ப்பதில் மிகுந்த அக்கறையோடும் கவனத்தோடும் செயல்பட வேண்டியவர்களாக இருக்க அழைக்கப்படுகின்றோம். 

சிறுவயதில் சிறு குழந்தைகளின் உள்ளத்தில், நஞ்சை விதைக்கக் கூடியவர்களாக நாம் இல்லாது, அன்பையும் சகோதரத்துவத்தையும் வளர்க்கக்கூடிய மனிதர்களாக, நாம் இருப்பதற்கு திருஅவை நமக்கு அழைப்பு தருகிறது. 

         ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காக, உயிரை தியாகம் செய்த சிறு குழந்தைகளை, நினைவு கூறுகின்ற இந்த நல்ல நாளில், நாம் நமது வாழ்வில் நமது குழந்தைகளை, எப்படி வளர்கிறோம்  என்பதை குறித்து சிந்திக்க இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.

        ஒரு குழந்தைக்கு கொடுக்கும் முறையான கல்வி என்பது, ஏட்டில் இருப்பதை இதயத்திற்கு கொண்டு செல்வது அல்ல மாறாக, அதன் உள்ளத்தில் இருப்பதை வெளிக்கொண்டு வருவதே இயல்பான கல்வி, ஒரு முறையான கல்வி. இத்தகைய கல்வியை நாம் நமது குழந்தைகளுக்கு வழங்கக் கூடியவர்களாக இருக்க, கடமைப்பட்டிருக்கிறோம். 

            ஒரு குழந்தையின் முதல் பள்ளிக்கூடம் தாயின் மடி என்பார்கள். தாயிடமிருந்தே தனது குடும்பத்திடம் இருந்தே ஒரு குழந்தை தனது வாழ்வுக்குத் தேவையான 60 சதவீதமான அறிவைப் பெற்றுக் கொள்கிறது என ஆய்வுகளின் அறிக்கைகள் கூறுகின்றன.

         நாம் வாழுகின்ற சமூகத்தில், நாம் நமது குழந்தைகளை, அவர்களிடம் இயல்பாக இருக்கின்ற திறமைகளை வெளிக்கொண்டு வரக்கூடியவர்களாக இதற்கு அழைக்கப்படுகிறோம். 

                   உதாரணமாக நாம் சிறு குழந்தைகளை உற்று நோக்குவோமாயின், சிறு குழந்தைகள் விளையாட்டு பொம்மையை கையில் வைத்துக் கொள்வார்கள். அந்த குழந்தைக்கு தலை சீவுவார்கள், குளிப்பாட்டுவார்கள், அழகிய ஆடைகளை அணிவிப்பார்கள், உணவு ஊட்டுவார்கள். இவையெல்லாம் அந்த குழந்தைகள் இயல்பாக செய்பவை‌. இதை யாரும் சொல்லிக் கொடுத்து செய்வது அல்ல. மாறாக, அந்தக் குழந்தைக்கு தாய் தந்தையரால் இத்தகைய பாசமும் இத்தகைய உணர்வுகளும் வழங்கப்படுகின்றன. 

                  தான் பெற்றுக் கொண்டதை, தனக்குள் இருக்கின்ற அந்த அன்பு உறவைத் தான், சிறு குழந்தைகள் விளையாட்டாக தங்கள் வாழ்வில் வெளிப்படுத்துகிறார்கள். ஒரு முறையான கல்வி என்பதும் குழந்தைகளுக்கு உள்ளே இருப்பதை வெளிக்கொண்டு வரக் கூடியதாக இருக்க வேண்டும்.  

         நமது குழந்தைகளை அன்போடும் பண்போடும் பராமரிக்கவும், நல்வழியில் வழி நடத்திச் செல்லவும் இந்த நாள் நமக்கு அழைப்புத் தருகிறது. 

    எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே!
அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னையின் வளர்ப்பினிலே!

       என்ற கவிஞரின் வார்த்தைகளுக்கு ஏற்ப, நாம் நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ள குழந்தைகளை நல்வழியில் வளர்க்க கூடியவர்களாக வாழுவோம். அவ்வாறு வாழுகின்ற பொழுது, நம்மைப் பார்த்து வளரக்கூடிய நமது குழந்தைகள், ஒரு எடுத்துக்காட்டான சாட்சிய வாழ்வு வாழக் கூடியவர்களாக மாறுவார்கள். 
         எனவே மாசிலா குழந்தைகளை நினைவு கூருகின்ற இந்த தருணத்தில், 
நமது குடும்பங்களில் நாமறிந்த நமக்குத் தெரிந்த, அனைத்து குடும்பங்களிலும் இருக்கக்கூடிய சிறுவர்களை, நினைத்து பார்த்து,  அவர்களுக்காக இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். வளர்கின்ற போது இறைவன் அவர்களை அறிவிலும் ஞானத்திலும், சிறந்து விளங்கச் செய்ய வேண்டுமாய் இந்த திருப்பலியில் தொடர்ந்து, இணைந்து ஜெபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...