திங்கள், 13 டிசம்பர், 2021

நாம் எப்படி?..... உங்கள் பதில் உங்களை அடையாளப்படுத்தும் ...(14.12.2021)

நாம் எப்படி?..... உங்கள் பதில் உங்களை அடையாளப்படுத்தும் ...

முடியாது என்பார்கள் ஆனால் முயற்சிப்பார்கள்
முடியும் என்பார்கள் ஆனால் துரும்பைக் கூட நகர்த்த மாட்டார்கள்...

நாம் எப்படி?....   இதுவே இன்றைய கேள்வி.... உங்கள் பதில்களை கொண்டே இன்றைய நற்செய்தி வாசகத்தில் இடம்பெறுகின்ற மூத்தவரா... அல்லது இளையவரா... நீங்கள் என்பதை நாம் கண்டுகொள்ளலாம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஒரு தந்தை தன் மூத்த மகனிடம் போய், ‘மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்’ என்றார். அவர் மறுமொழியாக, ‘நான் போக விரும்பவில்லை’ என்றார். ஆனால், பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார்.

ஆனால் அதே தந்தை அடுத்த மகனிடமும் போய் மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்’ என்றார். அவர் மறுமொழியாக, ‘நான் போகிறேன் ஐயா!’ என்றார்; ஆனால், போகவில்லை.

என்பதை எடுத்துக்கூறி இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?” என்று கேட்டார். அவர்கள் “மூத்தவரே” என்று விடையளித்தனர்.

இந்த ஒரு நிகழ்வை நாம் நமது வாழ்வை ஒப்பிட்டுப் பார்க்க என்று அழைக்கப்படுகிறோம் ... ஆண்டவர் இயேசுவின் பிறப்பை ஆவலோடு எதிர்நோக்குகின்ற நாம் எப்படி வாழவேண்டும் என்பதை ஆண்டவர் இயேசுகிறிஸ்து இறைவார்த்தையின் வாயிலாக ஒவ்வொரு முறையும் நமக்கு கற்பிக்கின்றார்.

கற்பிக்கின்ற ஆண்டவருக்கு நாம் தரும் பதில் எது?  மூத்த மகன் என்பதிலா...? அல்லது இளைய மகனின் பதிலா...?
இறைவார்த்தையின் படி வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டு ஆனால் இறை வார்த்தையின்படி  வாழாத மக்களாக நாம் இருக்கிறோமா? அல்லது  இறைவார்த்தையின் படி வாழக் கூடியவர்களாக நாம் இருக்கிறோமா?...

சொல்லும் பலர் சொல்லுக்கு ஏற்ப வாழ்வதில்லை ...
கவனிக்கும் பலர் கவனித்தவைகளை வாழ்வாக்குவதில்லை ...
இதுவே இன்றைய எதார்த்தம்...

ஆனால் நான் ஆண்டவரின் வார்த்தைகளை வாழ்வாக்க கூடியவர்களாக வாழ வேண்டும் என்பதைத்தான் இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன...

அன்றைய காலகட்டத்தில் கடவுளின் திட்டப்படி அவரது சொல்லின் படி வாழ்கிறேன் என சொல்லிக்கொண்டு வாழாத பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர்களையும் சுட்டிக்காட்டும் வண்ணம் இயேசுவை இந்த உவமையை பயன்படுத்தினார். 
 
இன்று அதே உவமையை நாம் நமது வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி பார்த்து ஆண்டவரின் வார்த்தைகளின் படி நமது வாழ்வு அமைந்து இருக்கிறதா? என்ற கேள்விக்கு நமது செயல்களால் பதில் தரக்கூடிய மக்களாக வாழ இறைவன் அழைப்பு தருகின்றார். இறைவார்த்தை என்பது இறையாட்சியின் மதிப்பீடுகளை வெளிப்படுத்துவதாகும். இந்த இறையாட்சியின் மதிப்பீடுகளை செயலில் காட்ட கூடியவர்களாக வாழ வேண்டும் என்பதே இன்றைய நாளில் நமக்கு தரப்படுகின்ற செய்தியாகும்.

இன்று நாம் நினைவு கூறுகின்ற சிலுவை அருளப்பர் வாழ்வும் இதே கருத்தை நமக்கு அறிவுறுத்துகின்றது.

 ஒருசமயம் (சிலுவை) அருளப்பர் காட்டு வழியாகப் போய்க்கொண்டிருந்தார். அப்போது ஒரு கொள்ளைக்கூட்டமானது அவரைச் சூழ்ந்துகொண்டு, அவரிடமிருந்த பணத்தை எல்லாம் எடுத்துத் தருமாறு கேட்டது. அருளப்பரும் எதுவும் பேசாமல் தன்னிடம் இருந்த பணத்தையெல்லாம் அந்த கொள்ளைக்கூட்டத் தலைவனிடம் எடுத்துக்கொடுத்தார். பின் வழி நடந்தார்.

சிறுதுதூரம் நடந்தபிறகு, அவர் தன்னுடைய கையை அங்கிக்குள் விட்டுப் பார்த்தபோது, அங்கிப் பையின் ஓரத்தில் ஒருசில நாணயங்கள் கிடப்பதைக் கண்டார். உடனே அவர் வேகவேகமாகப் போய்கொண்டிருந்த கொள்ளைக் கூட்டத்தை சத்தம் போட்டு அழைத்தார். அவருடைய சத்தத்தைக் கேட்டு அவர்கள் திரும்பி வந்தார்கள். அவர்களிடத்தில் அவர், “என்னிடம் இருந்த எல்லாப் பணத்தையும் உங்களிடத்தில் கொடுக்கவில்லை, ஒரு சில நாணயங்களும் என்னிடத்தில் இருக்கின்றது. அதனை தெரியாமல் உங்களிடத்தில் கொடுக்க மறந்துவிட்டேன். இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு தன்னிடம் இருந்த நாணயத்தை அவர்களிடத்தில் கொடுத்தார். அருளப்பர் நடந்துகொண்ட விதத்தைப் பார்த்து அவர்கள் திகைத்துப் போய் நின்றார்கள். அவருடைய நேர்மை அவர்களை ஏதோ செய்தது. எனவே, அவர்கள் தங்களுடைய குற்றத்தை உணர்ந்து, அவரிடம் மன்னிப்புக் கேட்டதோடு மட்டுமல்லாமல், அவர்கள் அவரிடமிருந்து கவர்ந்து சென்ற மொத்த பணத்தையும் அவரிடத்தில் கொடுத்துவிட்டு, அங்கிருந்து மறைந்தனர்.

தன்னுடைய வாழ்வில் உண்மை, தாழ்ச்சி, பொறுமை, இரக்கம் போன்ற நற்குணங்களைக் கொண்டவர் இந்த சிலுவை அருளப்பர். இவரைப்போலவே இறைவார்த்தையின் படி இறையாட்சியின் விழும்மியங்களான உண்மை நேர்மை தாழ்ச்சி பொறுமை மன்னிப்பு சகோதரத்துவம் ஆகிய பண்புகளோடு நாம் இச்சமூகத்தில் தொடர்ந்து பயணிக்க அழைக்கப்படுகிறோம்.

இறைவார்த்தையின் படி வாழ்கிறோம் என சொல்பவர்களாக மட்டுமல்ல.... அல்லது சொல்லிவிட்டு  செல்பவர்களாக மட்டுமல்ல... அதனை செயலால் வெளிக்காட்டக்கூடிய மக்களாகிட  இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்றவர்களாய் வாழ்வோம். அத்தகைய வாழ்வால் பிறக்கவிருக்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை உள்ளத்திலும் இல்லத்திலும் பிறக்க வழி வகை செய்ய இறைவனது அருளை இணைந்து வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...