வெள்ளி, 31 டிசம்பர், 2021

மலர்ந்தது ஆசீர்வாதத்தின் ஆண்டு...(01.01.2021)

மலர்ந்தது ஆசீர்வாதத்தின் ஆண்டு...


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!


வருடத்தின் முதல் நாளாகிய இன்றைய தினத்தினை  திருஅவை அன்னை மரியாவை,  கடவுளின் தாய் மரியாவை நினைவு கூர அழைப்பு தருகிறது.

 ஏன் இத்தகைய ஒரு அழைப்பு? என சிந்திக்கின்ற போது ...... பிறந்துள்ள இந்த புதிய ஆண்டு நமக்கு ஆசிகளின் ஆண்டாக கருதப்படுகிறது.

இழந்துபோன ஆசிகளை நாம் பெற்றுக் கொள்வதற்கான ஒரு ஆண்டாகவே இந்த புதிய ஆண்டு பார்க்கப்படுகிறது....

     இறைவன் படைத்த இந்த அழகிய உலகத்தில் பொதுநல சிந்தனையோடு வாழவேண்டிய மனிதன்,   சுயநலத்தோடு வாழ துவங்குகிறான்....  

இறைவன் படைத்த இந்த அழகிய உலகத்தை அடுத்தவரின் நலனுக்கு என அக்கறையோடு பேணிக் காப்பதற்கு பதிலாக, தன் நலனை மட்டும் முன்னிறுத்தி மற்றவரின் நலனை கருத்தில் கூட  கொள்ளாத நிலையை மனிதன் உருவாக்கி கொண்டான் ....

 அதனால் மனிதன் சந்தித்த விளைவுகள் ஏராளம்..... கடந்த வருடத்தை சிந்திக்கின்ற போது, இக்கட்டான கொடிய நோய் காரணமாக, என்ன செய்வது எனத் தெரியாது, மனித வாழ்வே மாற்றம் பெற்றிருக்கிறது.

      ஓடியாடித் திரிந்த மனிதன் வீட்டுக்குள் முடங்கிப் போன சூழல் உருவாகியுள்ளது.  கொரோனாத் தாக்கம் குறைந்ததாக கூறினாலும்,  அந்த தாக்கம் ஏற்படுத்திய அச்சம் இன்னும் மனதில் இருந்து அகலவில்லை.

        நிகழுகின்ற இந்த இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இறைவன் தந்துள்ள இந்த புதிய ஆண்டு நமக்கு ஆசிகளை வழங்கும் ஆண்டாக உள்ளது.... 

கடவுள் நம்மை அன்பு செய்கிறார் என்பதன் அடிப்படையே நமது தாய்.  

ஒரு தாயின் வழியாகவே ஒரு சமூகம் உதயமாகிறது. நம்மை இவ்வுலகத்திற்கு ஒரு தாய் தான் அறிமுகப்படுத்துகிறார்.   தாயிடமிருந்தே ஒரு குழந்தை பலவற்றை கற்றுக் கொள்கிறது.  தன் தாயிடம் காணப்படுகின்ற தன்னம்பிக்கையானது குழந்தைகள் உள்ளத்தில் வேரூன்றுகிறது. 

      ஒரு தாய், தன் வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதுகாப்போடு இந்த உலகத்திற்கு கொண்டு வருவதற்காக, தன் இன்ப துன்பங்களை தியாகம் செய்து, நமக்காக தன் ஆசாபாசங்களை குறைத்துக்கொண்டு நமக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவள்.  

நாம் பிறப்பதற்கு முன்பாகவே நமக்கான உணவை இறைவன் இந்த தாய்மார்கள் வழியாக ஏற்பாடு செய்திருக்கிறார்.  இந்த தாய்மார்களும் இறைவனின்  திட்டத்திற்குச் செவி கொடுத்தவர்களாய், அவர் கொடுக்கும் விலை மதிப்பில்லா பரிசாகிய குழந்தைகளை நல்ல முறையில் பாதுகாப்போடு இச்சமூகத்திற்கு கொண்டு வருகிறார்கள்.  இந்த தாய்மார்கள் தான் நமது வாழ்வின் ஆசியாக விளங்குகிறார்கள்.

        இயேசுவின் வாழ்விலும் இந்த தாய் தான் ஆசியாக விளங்கினார்.  எனவே தான்,  தனது இன்னுயிரை தியாகம் செய்வதற்கு முன்பாக தன்னிடமிருந்த ஒரே சொத்தான தன் தாயை, யோவானை நோக்கி, "இதோ உன் தாய்!" என்று கூறி, இந்த அகிலத்தின் தாயாக மாற்றிவிட்டு இயேசு தன் இன்னுயிரைத் தியாகம் செய்தார். இயேசு கொடுத்த ஆசிகளுள் தலை சிறந்தது இந்த தாயன்பு.  

      பொதுவாக கூறுவார்கள்,  கடவுள் இந்த பூமிக்கு வர முடியவில்லை. எனவே தான் தாயை அனுப்பி வைக்கிறார் என்று.  தாய்மார்கள் தான் நம்முடைய ஆசியாக இருக்கிறார்கள்.

 ஒரு குடும்பத்தில் உணவு சூடாக இருந்தால் கணவர் சாப்பிடுவார். சுவையாக இருந்தால் பிள்ளைகள் சாப்பிடுவார்கள். ஆனால், உணவு மீதம் இருந்தால் மட்டுமே சாப்பிடக்கூடிய தாய்மார்கள் இன்றும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.  நமது நலனை முன்னிறுத்தி  தியாகங்களை மேற்கொள்வார்களுள் தாய்க்கு இணை வேறு யாருமில்லை .  இந்த தாய்மார்கள் தான் நமக்கு இவ்வுலகில் கிடைத்த மிகப் பெரிய ஆசீர்வாதம். 
        இந்த ஆசீர்வாதத்தினை நாம் உணர்ந்து கொள்ளவே, 
இந்த ஆசீர்வாதத்தை தருகின்ற இந்த ஆண்டில் நாம் ஒவ்வொருவரும் கடவுளின் தாய் ஆம் அன்னை மரியா வழியாக நமது தாய்மார்களை  நினைவு கூர அழைக்கப்படுகிறோம்.  


புதுவருடம் பிறந்தால் பெற்றோரிடம் சென்று சிலுவை அடையாளம் பெறுவது,  ஆசிகளைப் பெறுவது நமது  வழக்கமாக இருந்த  ஒன்று. இன்று அவை மறைந்து கொண்டிருக்கிறது. அவைகளை  புதுப்பித்துக் கொள்ளும் நேரம் இது.  நமது குடும்பத்தில் நாம் பெரியவர்களிடமும், பெற்றவர்களிடமும் சென்று, அவர்களிடம் இருந்து ஆசிகளை பெற்றுக்கொள்வோம்.  அந்த ஆசிகள் மூலமாக நாம் இந்த சமூகத்தில் மற்றவருக்கு ஆசிகளை வழங்கக்கூடிய வகையில், நமது வாழ்வை நேரிய முறையில் நல்ல வாழ்வாக அமைத்துக் கொண்டு பயணிக்க, இந்த நாள் அழைப்பு தருகிறது.  

பிறந்திருக்கின்ற இந்த ஆண்டிலே,  நாம் கடவுளின் ஆசிகளை பெற்றவர்களாக வாழ இறையருள் வேண்டி இணைவோம் இன்றைய நாள் திருப்பலியில்.

1 கருத்து:

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...