செவ்வாய், 14 டிசம்பர், 2021

தயக்கமின்றி வழி நடக்க...(15.12.2021)

தயக்கமின்றி வழி நடக்க...

இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு நல்ல குரு தான் அறிந்த அனைத்தையும் தன்னிடம் பயிற்சி பெறும் மாணவருக்கு கற்பிப்பார். அவ்வகையில் நல்ல குருவாக திருமுழுக்கு யோவான் செயல்படுவதை இன்று நாம் அறிந்து கொள்ள முடிகிறது.  யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்ற மாத்திரமே இதோ கடவுளின் செம்மறி எனச் சுட்டிக்காட்டிய திருமுழுக்கு யோவான் இன்று தன் சீடர்களிடம் இவர்தான் வரவிருக்கின்றவரா?அல்லது வேறு யாருக்கும் காத்திருக்க வேண்டுமா? என கேட்டு வாருங்கள் என சொல்லி தன் சீடர்களை அனுப்புகிறார். இயேசுவை மெசியா என அறிந்திருந்த நிலையிலும் திருமுழுக்கு யோவானின் இச்செயல் தான் அறிந்தி மெசியாவை தன் சீடர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு நிகழ்ந்ததாகும்.

இச்செயல் வழியாக மெசியாவை பற்றி கற்பித்தவர் மெசியாவின் வருகைக்கு அனைவரையும் ஆயத்தப் படுத்தியவர் இப்போது  தன் சீடர்களுக்கு அனுபவ கல்விக்கு வழிவகுத்து கொடுக்கிறார்.

இயேசுவைச் சந்தித்த யோவானின் சீடர்களுக்கு இயேசு தருகின்ற பதில் நீங்கள் கண்டதையும் கேட்டதையும் அறிவியுங்கள் என்பதாகும்.

அவர்கள் கண்டது....

கால் ஊனமுற்றோர் நடப்பதும்... தொழுநோயாளர் நலம் பெறுவதும்...
 காதுகேளாதோர் கேட்பதும்.... 
இறந்தவர் உயிருடன் எழுப்பப்படுவதும் ஆகும். 

அதுபோலவே அவர்கள் கேட்பது...

 ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுவதாகும்...

இவைகள் மெசியாவின் காலத்தில் நிறைவேறும் என முன்னறிவிக்கப்பட்டவைகளாகும். இதைக் கண்ணால் கண்டு காதால் கேட்டு அனுபவத்தின் வாயிலாக உணர்ந்து கொண்ட திருமுழுக்கு யோவானின் சீடர்களுக்கு இயேசு தருகின்ற இறுதிச் செய்தி தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர் என்பதாகும் ...

இன்று ஆண்டவர் இயேசுவின் பிறப்பை ஆவலோடு எதிர்நோக்குகின்ற நமக்கும் இறைவன் தருகின்ற செய்தி இதுவாகத்தான் உள்ளது. தயக்கமின்றி ஆண்டவரை ஏற்றுக் கொள்ளக் கூடிய மக்களாக நாம் மாறிட வேண்டும்.

இந்த மாற்றம் என்பது வார்த்தைகளில் அல்ல நமது செயல்களில் இயேசுவைப் போல சமூகத்தில் துயரத்தில் வாடுவோரையும், தேவையில் இருப்போரையும், ஏழைகளையும் தேடக்கூடிய ஒரு வாழ்வாக அமைய வேண்டும். அவ்வாறு அமைகின்ற போது தயக்கம் ஏதுமின்றி நாம் ஆண்டவரை ஏற்றுக் கொண்டவர்களாக இச்சமூகத்தில் பயணம் செய்ய இயலும்...  இத்தகையை இரக்கச் செயல்களால் ஆண்டவருக்கு இதயத்தில் இடமளித்து தயக்கமின்றி அவரை பின்பற்றக் கூடியவர்களாக மாறிட இறைவனது அருளை இணைந்து வேண்டுவோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...