மனம் இருந்தால் மார்க்கம் பிறக்கும்.
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாளில் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
3 கிராமத்து சிறுவர்கள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசினை பெற்றார்கள். இதை அறிந்த முதல்வர் அவர்களை ஊக்குவிக்கும் வண்ணமாக அவர்களுக்கு ஏதாவது பரிசு தர விரும்பினார். அவர்களை அழைத்து அவர்களோடு உரையாடினார்.
முதலாவது சிறுவன் தனது தந்தைக்கு ஒரு வேலை வாய்ப்பு வேண்டும் எனக் கேட்டான். அவனுக்கு அது கொடுக்கப்பட்டது.
இரண்டாம் சிறுவன் தனது ஊருக்கு தெருவிளக்குகள் வேண்டுமெனக் கேட்டான். அவனது ஊருக்கும் மின்விளக்குகள் தெருக்களில் ஊன்றப்பட்டன.
முன்றாவது சிறுவனோ அவனது வீட்டிற்கு மாநில முதல்வர் வருகை புரிய வேண்டும், அவனோடு நிலவொளியில் உணவருந்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டான். அதற்கான ஏற்பாடுகள் துவங்கப்பட்டன. அவனது ஊருக்கு முதல்வர் செல்வதற்கான சாலை முதலில் அமைக்கப்பட்டது. தெருக்களில் தேவையான மின் விளக்குகள் போடப்பட்டன. மக்களுக்கு தேவையான குடிநீர் குழாய் வசதி செய்து தரப்பட்டது. முதல்வரும் உணவருந்த இருந்த அந்த சிறுவனின் வீடு சிறிய குடிசை வீடாக இருந்ததால் அவனது வீடு முதல்வர் வந்து தங்கும் வகையில் கட்டப்பட்டது. இதனை கண்ட கிராம மக்கள் அனைவரும் இணைந்து அங்கு சிறுவனின் தந்தையை கிராமத்து பஞ்சாயத்து தலைவராக உயர்த்தினர்.
இன்றைய முதல் வாசகத்தில் பாலை நிலமும் அக்களிக்கும். பொட்டல் நிலமும் பூத்துக் குலுங்கும். அங்கே நெடுஞ்சாலை ஒன்று இருக்கும். அது தூய வழி எனப் பெயர் பெறும். அந்த நெடுஞ்சாலையில் ஆண்டவரால் விடுவிக்கப்பட்டவர் திரும்பி வருவார்கள், மகிழ்ந்து பாடிக் கொண்டே வருவார்கள். அவர்களின் துயரம் மறைந்து போகும். அவர்களின் முகம் என்றுமுள மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும் என்ற செய்தியானது சொல்லப்படுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்திலும் ஆண்டவர் இயேசுவின் மூலமாக தனது வாழ்வில் விடுதலை பெற ஏக்கம் கொண்டிருந்த முடக்குவாதமுற்றவர் தன் மீது அக்கறை கொண்டிருந்த சில நல்லெண்ணம் கொண்ட மனிதர்களின் உதவியால் இன்று விடுதலை பெறுவதை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கிறது.
மனதில் உறுதி இருந்தால் செல்லும் பாதைக்கான வழி நிச்சயம் பிறக்கும்.
மனதில் துணிவு இருந்தால் மேற் கொண்ட காரியத்தில் நிச்சயம் வெற்றி கிட்டும்.
எனவே நாமும் ஆண்டவரை அணுகிச் செல்கின்ற இன்றைய நாளில், ஆண்டவருக்கும் நமக்கும் இடையிலான உறவின் பாதை அன்பின் பாதையாக அமைந்திடவும், தூய ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்ட தூய்மையின் பாதையாக அமைந்திடவும், எல்லோருக்கும் நமது உளம் நிறைந்த ஆர்வத்தால் தரக்கூடிய மகிழ்வின்
பாதையாக அமைந்திடவும் இறையருள் வேண்டி இணைந்து ஜெபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக