ஞாயிறு, 26 டிசம்பர், 2021

வார்த்தையான இறைவன் ...(27.12.2021)

வார்த்தையான இறைவன் ...

ஆதியில் வார்த்தை இருந்தது அவ்வார்த்தை கடவுளோடு இருந்தது அவ்வார்த்தை கடவுளையும் இருந்தது ...

வார்த்தையான இறைவன் என்று நாம் நமது வாழ்வில் பயன்படுத்தும் வார்த்தைகளை குறித்து சிந்திக்க அழைப்பு தருகிறார்.

வார்த்தைகள் வழியாக கடவுளோடு இணைந்திருப்பவர் கடவுளின் மாண்பை காண்பர்!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

      ஒருமுறை சகோதரி ஒருவரின் வாழ்வில் மிகப்பெரிய போராட்டம் நிகழ்ந்தது. அவரின் ஆசிரியப் பணியில் அவரது உயர் அதிகாரிகளால் அவருக்கு மிகுந்த மன உளைச்சல் கொடுக்கப்பட்டது. அதனால் தன்னுடைய பணியிலும் கவனம் செலுத்த முடியாமல், தன்னுடைய உடல் நலனிலும் அக்கறை செலுத்த முடியாமல், தனது வாழ்வு எங்கே சென்று கொண்டிருக்கிறது என தெரியாமல்
 அனுதினமும் கண்ணீரும் கவலையுமாக பள்ளியிலும், பள்ளிக்கு செல்லும் வழியிலும், ஆலயத்திலும் தனது இல்லத்திலும் எந்நேரமும் "கடவுளே! என்னை காப்பாற்று" என்று இறைவனோடு பேசிக்கொண்டே இருந்தார். 

          எத்தனையோ நாட்கள் பேசியும் அவரது அதிகாரியின் தொந்தரவு குறைந்தபாடில்லை. கடவுளே! நீ எங்கே இருக்கிறாய்? நான் உன்னோடு பேசிக்கொண்டே இருக்கிறேன். உனது உதவியை கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.  நீ என்னை காப்பாற்ற மாட்டாயா? என்று தொடர்ந்து ஆண்டவரை உள்ளத்தில் நினைத்து தனது கண்ணீரில் கரைத்து ஒவ்வொருநாளும் இறை சிந்தனையில் தன்னை இணைத்தவளாய், தனது அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்ட தனது வாழ்க்கை படகை செலுத்திக் கொண்டிருந்தார். 

               இன்னும் சில நாட்கள் உருண்டோடின. அந்த சகோதரியின் பிரச்சனைகள் குறைந்தபாடில்லை. என்ன நடக்கப்போகிறதோ? என்னும் அச்சம் அவளின் உள்ளத்தைச் சூழ்ந்தது. ஆயினும் தன் கடமைகளை நிறைவேற்ற கருத்தாய் இருந்தாள். மனம் சோர்ந்த போது ஆண்டவரைத் தேடினாள். விண்ணப்பங்களும் ஜெபமாலைகளும் அவளின் அன்றாட ஜெபங்கள் ஆயின.‌ இறைவா! நான் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும், அது உனது பாதத்திலே இருக்கட்டும் என்று மன்றாடினாள்.

                   என்ன ஒரு ஆச்சரியம்! ஓரிரு வாரங்கள் கடந்த பின் அவளுக்கு பணிமாற்றம் கிடைத்தது.  புதிய இடத்தில் தனது ஆசிரியப் பணியை அமைதியான மனதோடு இறைவனை உணர்ந்த நன்றிப் பெருக்கோடு தனது பணியை தொடர்ந்தார்.  ஆயினும் தனது பழைய அதிகாரியின் தந்திரமான துன்புறுத்தலில் இருந்து இறைவன் தன்னை முற்றிலுமாக விடுவிக்க வேண்டுமென ஜெபித்துக் கொண்டிருந்தார்.  ஆணவமும் அதிகாரமும் அகங்காரமும் நிறைந்த அந்த மேலதிகாரியின் வார்த்தைகளும் சிந்தனைகளும் அவளது உள்ளத்தை அவ்வப்போது கலக்கமுறச் செய்தன.  ஆயினும் அந்த நேரத்தில் எல்லாம் இறைவனின் நாமத்தை விடாது பற்றிக் கொண்டாள்.

ஆம் அன்புக்குரியவர்களே!

 அந்த சகோதரி தனது இக்கட்டிலும், இன்னல்களிலும், இடையூறுகளிலும் ஆண்டவரை இறுகப் பற்றிக் கொண்டார்.  ஆண்டவரது இரக்கமும் கருணையும் அந்த சகோதரியை தொடர்ந்து வழிநடத்தியது.  இதையே இன்றைய முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும் நமக்கு எடுத்துரைக்கின்றன.

வார்த்தையான இறைவன் தொடக்கத்திலிருந்து இவ்வுலகை வழி நடத்தி வருகிறார். வாக்காகி,  மனு உருவான இறைவன் ஒவ்வொருவருக்கும் தன்னை வெளிப்படுத்துகிறார். அதனைக் கண்டு கொள்பவர்கள் வெகு சிலரே. 

              எனவே இன்றைய நாளில் தந்தையோடு இருப்பதும் வெளிப்படுத்தப்பட்டதுமான நிலை வாழ்வாகிய ஆண்டவர் இயேசுவின் அன்பின் வல்லமையையும் ஞானத்தையும் நமது வாழ்வில் கண்டுகொள்வோம். வாக்கான இறைவனின் வார்த்தைகளில் நம்மையும் இணைத்துக் கொள்வோம். வாக்கான இறைவனைக் கண்டு கொண்டு அதனை அப்படியே விட்டு விட்டுச் செல்லாமல், நமது வார்த்தைகளிலும் வாழ்க்கையிலும் அவரைப் பிரதிபலிக்க அருள்வேண்டி இணைவோம் இந்த தெய்வீக திருப்பலியில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...