வெள்ளி, 17 டிசம்பர், 2021

கடவுள் நம்மோடு....நாம் யாரோடு ?(18.12.2021)

கடவுள் நம்மோடு....நாம் யாரோடு ?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தாவீதின் வழி மரபாக கருதப்பட்ட யோசேப்புக்கு இயேசுவின் பிறப்பு குறித்து இருந்த அச்சத்தை போக்கும் வண்ணமாக வானதூதர்கள் கனவில் தோன்றி அவருக்கு ஆண்டவரின் திட்டத்தை வெளிப்படுத்தி மரியாவை ஏற்றுக்கொள்ள தயக்கம் வேண்டாம் என தெளிவு படுத்துகிறார்கள். இதையே இன்றைய நாளில் நாம் வாசிக்க கேட்போம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இம்மானுவேல் என்றால் கடவுள் நம்மோடு என்ற அர்த்தமானது கற்பிக்கப்படுகிறது. இந்த வார்த்தைகளின் அடிப்படையில் ஆண்டவரின் பிறப்பை ஆவலோடு எதிர்நோக்கி கொண்டிருக்கின்ற உங்களோடு என் சிந்தனைகளை பகிர ஆசைப்படுகிறேன்.

ஆபிரகாம் லிங்கன் வாழ்வில் மிகப்பெரிய பதவியாக கருதப்படுகின்ற அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்க கூடிய நிகழ்வில் அவரது நண்பர் அவரிடத்தில் கூறினாராம்.  கடவுள் உன்னோடு இருக்கிறார் எனவே தான் ஒவ்வொரு நாளும் உனது புகழானது மேலோங்கிக் கொண்டே செல்கிறது என அவரை பாராட்டினாராம். 
அவர் சொன்னதைக் கேட்டு சிறிது நேர மௌனத்திற்கு பிறகு ஆபிரகாம் லிங்கன் தன் நண்பரிடம் கூறினாராம். கடவுள் என்னோடு இருக்கிறார் என்பதில் எனக்கு எந்தவித ஐயமும் இல்லை. ஆனால் அந்த கடவுளோடு நான் இருக்கின்றேனா? என்பது தான் எனக்குள் இருக்கின்ற மிகப் பெரிய கேள்வி என கூறினாராம்.  

ஆபிரகாம் லிங்கனின் அதே கேள்வியை இன்று நாமும் நமக்குள்ளாக எழுப்பி பார்க்க அழைக்கப்படுகின்றோம். இம்மானுவேல் என்றால் கடவுள் நம்மோடு என்பது அர்த்தம்.

நாம் எப்படிப்பட்ட மனிதர்களாக இருந்தாலும் கடவுள் நம்மோடு இருக்கிறார். நம்மை வழிநடத்துகிறார். நமக்கு தேவையானதை தேவையான நேரங்களில் நல்ல மனிதர்கள் மூலமாக தந்து கொண்டிருக்கிறார். ஆனால் நாம் எல்லா நேரங்களிலும் இந்த கடவுளோடு இருக்கின்றோமா? என்ற கேள்வியை நமக்குள் எழுப்பி பார்ப்போம்.

 பல நேரங்களில் மனம் போன போக்கில் நகர கூடியவர்களாக, தேவையின் போதும், துன்பத்தின் போதும் மட்டுமே கடவுளை தேடக் கூடியவர்களாக நம்மில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஒரு கவிஞன் அழகாக எழுதினார். கடவுள் எங்கே இருக்கிறார் என்றால் கூப்பிடும் தூரத்தில் என்பார்கள் கூப்பிடும் தூரத்தில் இருப்பதனால் தான் பலர் அவரை தங்கள் மகிழ்வில் கூப்பிடுவது இல்லை என்று ...

இன்பமும் துன்பமும் கலந்த மனித வாழ்வில் எல்லா நேரங்களிலும் நாம் ஆண்டவரோடு இருக்கின்றோமா? என நமக்குள்ளாக கேள்வியை எழுப்பி ஆண்டவரின் பிறப்புக்கு நம்மை தயார்படுத்திக் கொண்டிருக்கின்ற இந்த நாட்களில் ஆண்டவரோடு எப்போதும் நாம் இணைந்திருப்பதற்கான முயற்சியில் ஈடுபட அருள் வேண்டியவர்களாக இணைந்து  ஜெபிப்போம்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...