சிறியவரா? பெரியவரா? நம் கையில் தான்...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்து திருமுழுக்கு யோவானை குறித்து இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக நம்மோடு உரையாடுகிறார்.
மனிதராய் பிறந்தோருள் மிகவும் உயர்ந்தவராக கருதப்படுபவர் இந்த திருமுழுக்கு யோவான் என இயேசு திருமுழுக்கு யோவானைப் பற்றி பேசுகிறார்.
நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நம்மை குறித்து இறைவன் எத்தகைய வார்த்தைகளை உதிர்ப்பார் என்பதை சிந்திக்க இன்று நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். திருமுழுக்கு யோவானை விட உயர்ந்தவர் எவரும் இல்லை என்று ஆண்டவர் இயேசு கூறினாலும், திருமுழுக்கு யோவானை விட உயர்ந்தவராக நாம் மாறுவதற்கான வழிகளை அவர் நமக்கு கற்பிக்கின்றார். விண்ணரசில் மிகச் சிறியோர் திருமுழுக்கு யோவானை விட மிகப் பெரியவர் எனக் குறிப்பிடுகிறார். விண்ணரசில் மிகச் சிறியவர் என்பதை நாம் எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம்? என சந்திக்கின்ற பொழுது விண்ணரசு என்பது இறைவனது அரசை குறிக்கின்றது. இறைவனது அரசு என்பது இவ்வுலக வாழ்வில் நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற ஒரு அரசாக அமைய வேண்டும். இவ்வாறு இறைவனது அரசியல் பொறாமை போட்டி என்ற பாகுபாடு இல்லை. இறைவனது அரசில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இல்லை. இறைவனது அரசில் விரும்புபவர் விரும்பத்தகாதவர் என்ற பாகுபாடு இல்லை. அனைவரையும் ஒன்று எனக் கருதி அனைவரும் தன்னைப் போல ஒருவர் மற்றவரை நேசிக்கக் கூடியவராக இருப்பது விண்ணரசுக்கு உகந்த ஒரு வாழ்வாக அமையும். ஆண்டவரின் பார்வையில் நாம் அனைவருமே சமமானவர்கள் தான். இவர் உயர்ந்தவர் இவர் தாழ்ந்தவர் என்பதல்ல. கடவுள் இவருக்கு நன்மை செய்வார், இவருக்கு தீமை செய்வார் என்பது அல்ல. கடவுள் அனைவரையும் ஒன்று என கருதுகிறார். அப்படிப்பட்ட இறைவனது அரசில் நாம் அனைவரையும் ஒன்று என கருதி ஒருவர் மற்றவர் நலனில் அக்கறை காட்டக் கூடிய, நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும் என்பதுதான், இறைவன் இன்றைய நாளில் நமக்குத் தருகின்ற சிந்தனை. இதனை உணர்ந்து கொண்டவர்களாக, விண்ணரசுக்கு ஏற்ற வகையில் நமது செயல்களை அமைத்துக் கொள்வோமாயின், நாமும் திருமுழுக்கு யோவானை விட பெரியவராக கருதப்படுவோம். சிறியவராக இருந்தாலும் சரி, அல்லது வயது முதிர்ந்த ஒரு முதியவராக, மூதாட்டியாக இருந்தாலும் சரி, ஆண்டவரது இறையாட்சியின் விழுமியங்களை வாழ்வாக்கிக்கொண்டு பயணிக்கின்ற பொழுது, நாம் விண்ணரசில் மிகப் பெரியவராக கருதப்படுவோம்.
சிறியவர் ஆவதும் பெரியவர் ஆவதும் நம் கையில் இருக்கிறது. ஆண்டவர் நாம் பெரியவர் ஆவதற்கான வழிகளையும் கற்பிக்கின்றார், திருமுழுக்கு யோவானை பற்றியும் எடுத்துரைக்கின்றார்.
எனவே நாம் வாழுகின்ற இந்த உலகத்தில், நம் ஆண்டவர் இயேசுவின் விண்ணரசில் பெரியவராகக் கூடியவர்களாக நாம் மாறிட இறைவனது அருளை இணைந்து வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக