வியாழன், 19 ஜனவரி, 2023

உழைக்கும் மக்களின் உற்சாக விழா! (15-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தை கொண்டாடுகிறோம் பொங்கல் விழாவை நான்கு நாட்கள் கொண்டாடுவோம்.
முதல் நாள் போகி பண்டிகை, இரண்டாம் நாள் தைப்பொங்கல், மூன்றாம் நாள் மாட்டுப்பொங்கல், நான்காம் நாள் காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் கொண்டாடுகிறோம்.

போகிப் பண்டிகை என்பது நம்மிடம் இருக்கின்ற தீமைகளை களைந்து விட்டு, நம்மை நாமே தூய்மைப்படுத்திக் கொள்வதற்கான ஒரு அழைப்பு தான் போகி பண்டிகை நாளில் தரப்படுகிறது. 

இரண்டாம் நாள் ஆகிய இன்று நாம் கொண்டாடுகின்ற தைப்பொங்கல் என்பது  நமக்கு வலியுறுத்துவது, நாம் இந்த உலகத்தில் இன்புற்று வாழ வேண்டுமானால், இயற்கை அவசியம். நமக்காக இந்த இயற்கை கடவுளால் உண்டாக்கப்பட்டது. கடவுளால் உண்டாக்கப்பட்ட இந்த இயற்கையிடமிருந்து நல்லவைகளை கற்றுக் கொண்டு,  அதன் படி நமது வாழ்வை நெறிப்படுத்த வேண்டும். உதாரணமாக, சூரியன் நல்லோர் தீயோர் எனப் பாராமல், எல்லோர் மீதும் தன் ஒளிக் கீற்றை வீசுவது போல நாமும் நம்மை நமது குடும்பம் என்ற வட்டத்திற்குள் சுருக்கி விடாமல், அனைவரோடும் இணைந்து நம்மால் முடிந்த நன்மைகளை ஒருவர் மற்றவருக்கு செய்யக்கூடிய நல்ல மனிதர்களாக வாழ வேண்டும் என்பதை, இரண்டாம் நாள் நமக்கு வலியுறுத்துகிறது. 
    மூன்றாம் நாள் மாட்டுப்பொங்கல். அனுதினமும் பரபரப்பாக பல பணிகளுக்கு மத்தியில் ஓடிக் கொண்டிருக்கக் கூடிய நாம் ஒவ்வொருவரையுமே ஆறறிவு பெற்ற மனிதர்களாக இருந்தாலும், ஐந்தறிவு கொண்டது என்று நாம் சொல்லக்கூடிய அந்த உயிரினங்களின் மீது அக்கறை காட்டக் கூடியவர்களாகவும், நமது உழைப்புக்கு பயன்படுகின்ற பொருள்களை மதிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதை மூன்றாம் நாள் நமக்கு வலியுறுத்துகிறது. 

      நான்காம் நாள் காணும் பொங்கல். கடவுள் மனிதனை இந்த உலகில் படைத்ததன் நோக்கமே, ஒருவர் மற்றவரோடு இணைந்து வாழ வேண்டும் என்பதுதான். நாகரிக வளர்ச்சி என்ற பெயரில், அதிலும் குறிப்பாக நான்கு சுவற்றுக்கு உள்ளாக முடங்கி போகின்ற நாம் வெளிவந்து எல்லோரோடும் இணைந்து பல மனிதர்களைக் கண்டு உறவுகளை இன்னும் அதிகரித்துக் கொண்டே நமது வாழ்வை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அந்த நாள் நமக்கு உணர்த்துகிறது. 
     இந்த நான்கு நாட்களும் நான்கு விதமான சிந்தனைகளை தந்தாலும், ஆண்டவர் இயேசுவின் வார்த்தையும் இதைத்தான் நமக்கு வலியுறுத்துகிறது. ஒவ்வொரு நாளும் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை சீர்தூக்கி பார்த்து, நம்மிடம் இருக்கின்ற தீமைகளை எல்லாம் அகற்றிவிட்டு, இறைவனின் படைத்த இந்த இயற்கையிடம் காணப்பட்ட நற்பண்பை நமது நற்பண்புகளாக வைத்துக்கொண்டு, இந்த சமூகத்தில் அனைத்து உயிர்களையும் மதிக்க கூடிய மனிதர்களாக மற்ற உறவுகளோடு இணைந்து வாழவே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். இதை உணர்த்துவதற்காகவே ஆண்டவரே இந்த உலகில் தோன்றினார். 33 ஆண்டுகாலம் இந்த மண்ணில் வாழ்ந்தாலும், மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை நமக்கு சொல்லிக் காண்பித்து சென்றிருக்கிறார். இந்த இயேசுவை பின்பற்றக் கூடியவர்களாக நாம் இருக்கிறோம். 

     அன்று யோவான் இந்த இயேசு கிறிஸ்துவை நமக்கு சுட்டிக் காட்டினார். இன்று நாம் இயேசுவை சுட்டிக் காட்டுவதற்கான ஒரே வழி நமது சொல்லும் செயலும் கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வாக அமைய வேண்டும். ஒவ்வொரு நாளும் இறை வார்த்தையை இதயத்திலிருத்தி, நம்மை நாமே சீர்படுத்திக் கொண்டு நமது சொல்லாலும் செயலாலும் ஆண்டவர் இயேசுவை அடுத்தவருக்கு சுட்டிக்காட்டுகின்ற மனிதர்களாக நாளும் வளர்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...