இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
ஆண்டவர் இயேசு நம்மோடு இருக்கின்ற போது, எதை குறித்தும் அஞ்ச வேண்டியதில்லை என்பதை இன்றைய இறை வார்த்தைகள் நமக்கு வலியுறுத்துகின்றன. கடவுள் நமக்கு துணையாக இருக்கின்றார்; அந்த கடவுளின் துணையை கொண்டு ஒவ்வொரு நாளும் நமக்கென்று கொடுக்கப்பட்ட கடமைகளையும் பொறுப்புகளையும் நாம் சரிவர செய்கின்ற நபர்களாக இருப்பதற்கான அழைப்பு இன்று நமக்கு தரப்படுகிறது. எவரும் பழைய துணியில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. பழைய தோற்பையில் புதிய மதுவை ஊற்றி வைப்பதும் இல்லை. அவ்வாறு செய்கிற போது அது வீணாகும் என்பதை இன்றைய இறைவார்த்தை வழியாக இறைவன் வலியுறுத்துகின்றார்.
இன்றைக்கு உரிய கடமைகளை இன்றைய நாளில் நாம் செய்கின்ற போது நாளைய தினத்தை குறித்த கவலை இல்லாத மனிதர்களாக இருக்க முடியும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம். கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற ஆழமான நம்பிக்கையோடு அந்தந்த நாளுக்குரிய கடமைகளை சரிவர செய்கின்ற நபர்களாக நீங்களும் நானும் வளர்வதற்கான ஆற்றலை இன்றைய இறைவார்த்தை வழியாக இறைவன் நமக்கு தருகின்றார். இந்த இறைவனின் வார்த்தைகளை இதயத்தில் இருத்தியவர்களாய் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு நாளும் நமது கடமைகளை கடவுளின் துணையோடு செய்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக