வெள்ளி, 29 ஜனவரி, 2021

இழந்தாலும் இழந்து விடாதே...(30.1.2021)

இழந்தாலும் இழந்து விடாதே...
இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


ஒருவர் ஒரு பெரிய கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சைக்கிளில் சென்றார். சைக்கிளை பூட்டி வைக்க மறந்து விட்டு சைக்கிளை கடைக்கு வெளியே நிறுத்திவிட்டு தேவையான பொருள்களை வாங்கி விட்டு வெகு நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தார். பூட்டப் படாத சைக்கிள் திருடு போகாமல் வைத்த இடத்திலேயே இருந்தது. அதைக் கண்டு வியப்படைந்த அவர் கடவுளுக்கு நன்றி சொன்னார். அடுத்த கணமே அருகாமையில் இருந்து கோவிலுக்கு சென்றார். கோவிலுக்கு வெளியே சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு கோவிலுக்குள் சென்று மூன்று முறை வலம் வந்து, பின் கையிலிருந்த ஒரு தேங்காயை உடைத்து விட்டு, வெளியே வந்து பார்த்தால் சைக்கிள் திருடு போய்விட்டது. அவர் கடைக்கு சென்றபோது அவருக்கு கடவுள் மேல் நம்பிக்கை இருந்தது, புட்டின் மீது நம்பிக்கை இல்லை. சைக்கிளும் பத்திரமாக இருந்தது. ஆனால் அவர் கோவிலுக்கு சென்றபோது அவருக்கு பூட்டு  மேல் நம்பிக்கை இருந்தது கடவுளின் மேல் நம்பிக்கை இல்லை. கடவுள் எனவே சைக்கிள் காணாமல் போனது.

பொதுவாகவே எல்லாவற்றையும் கடவுளிடம் இருந்து பெற்றுக் கொண்டு கடவுளை நம்புவதை விட,  நம்மிடம் இருப்பதை இழப்பதன் மூலம் கடவுள் மீதான  நம்பிக்கையை வைப்பது சாலச்சிறந்த ஒன்று என கூறுவார்கள்.

இன்றைய வாசகங்கள் அனைத்தும் நமது நம்பிக்கையை நாம் சீர்தூக்கிப் பார்ப்பதற்கு அழைப்பு தருகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் தொடக்கத்தில் தன்னிடம் பல விதமான செல்வங்களும், உற்றார் உறவினர்களும், ஆடு மாடுகளும் என மகிழ்வோடு வாழ்ந்து வந்த ஆபிரகாமை இறைவன் உன்னிடம் இருப்பதை எல்லாம் விட்டுவிட்டு நான் காண்பிக்கும் நாட்டுக்குச் செல் என்று கூறும்போது ஆண்டவரின் வார்த்தைக்குச் செவிகொடுத்து  அவரின் மீது நம்பிக்கை கொண்டு, அவர் காட்டிய பாதையில்  பயணித்து நம்பிக்கையின் நாயகனாக திகழ்ந்தார்.

இறைவன் மீது ஆழமான நம்பிக்கை கொள்வதற்கு ஒரு விதமான துணிச்சல் அவசியமாகிறது.  இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இயேசுவினுடைய பலவிதமான அரும் அடையாளங்களையும், அவர் செய்த வல்ல செயல்களையும், நேருக்கு நேராக அவருடன் இருந்து கண்ட சீடர்கள், தங்கள் வாழ்வில் துயரம் கொள்ளும்போது நம்பிக்கை இழந்தவர்களாக தடுமாறுகிறார்கள். தடுமாறிய தன் சீடர்களைப் பார்த்து இன்னுமா உங்களுக்கு நம்பிக்கை இல்லை? என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து கேட்கிறார். இன்னுமா உங்களுக்கு நம்பிக்கை இல்லை? என்ற கேள்வியானது சிடர்களுக்கானது மட்டுமல்ல நம் ஒவ்வொருவருக்குமானது.

பொதுவாகவே நாம் கடவுள் மீது கொண்டிருக்கக்கூடிய நம்பிக்கை என்பது நான்கு தூண்களில் நிறைநிலை நிறுத்தப்பட்டுள்ளது என்பார்கள்.
1. நாம் அறிக்கையிடும் நம்பிக்கை அறிக்கை.
2.  நாம் கொண்டாடக்கூடிய நம்பிக்கையின் அருளடையாளங்கள்.
3. நாம் கடைபிடிக்கும் நம்பிக்கை உரிய 10 கட்டளைகள்.
4. நாம்  நம்பிக்கையோடு ஜெபிக்கும் கர்த்தர் கற்பித்த செபம்.

 இவை நான்கும் நாம் கடவுள் மீது மீது கொண்டிருக்கக்கூடிய நம்பிக்கையானது நிலை நிறுத்தப்பயன்படுகிறது. ஆனால் நாம் கடவுளிடம் இருந்து அபரிமிதமானவற்றை பெறுவதால் அவர் மீது நம்பிக்கை கொள்கின்றோமா?அல்லது உண்மையாகவே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது நம்மிடம் இருப்பதை எல்லாம் இழந்தாலும் நம்பிக்கையுடன் அவரை பின் தொடர்ந்து அவர் காட்டிய பாதையில் அவரது மதிப்பீடுகளின்படி நாம் பின்பற்றுகிறோமா? சிந்திக்க இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு தருகின்றன.

திருவிவிலியத்தில் லூக்கா நற்செய்தி 3:45  வசனம் ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர் என எலிசபெத்தின் வார்த்தைகள் மரியாவுக்கு ஊக்கம் ஊட்டியது. மரியா கடவுளை நம்பினார். எனவே இயேசு மண்ணில் பிறப்பதற்கு அவரை தன் வயிற்றில் கருவுற்றார். அதுபோலவே தோமாவிடம் உயிர்த்த ஆண்டவர் தோமாவை நோக்கி என்னைக் கண்டதால் நம்பினாய் காணாமல் நம்புவோர் பேறுபெற்றோர் என யோவான் நற்செய்தி 20 : 29 இல் குறிப்பிடுகிறார். தோமா இயேசுவை நம்பினார். நீரே என் ஆண்டவர் நீரே என் கடவுள் என அறிக்கையிட்டார். யோவான் 20 28. 
 ஆண்டவரில் நம்பிக்கை கொண்டவர்களின் கூட்டம்
திருப்பாடல் 5 :14 கூறுவதுபோல
நாமும் நம்பிக்கையாளர்களின் கூட்டத்தில் இடம் பிடிக்க... நம்மிடம் இருப்பதை எல்லாம் இழக்கும் நேரங்களிலும் நமது நம்பிக்கை இழக்காதவர்களாய் இறைவனை பின்தொடர இறையருள் வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...