திங்கள், 4 ஜனவரி, 2021

அன்புறவில் வாழ... (5.1.2021)

அன்புறவில் வாழ...  

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய வாசகங்கள் நமக்கு மூன்று விதமான சிந்தனைகளை கொடுக்கின்றன. 
1. கொடுங்கள்! 
2. பாருங்கள்! 
3. சேர்த்து வையுங்கள்! 

என்ற சிந்தனைகளை இன்றைய வாசக பகுதிகள் நமக்கு வழங்குகின்றன. இன்றைய முதல் வாசகமானது, நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்பது பற்றிக் கூறுகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து  தன்னைச் சூழ்ந்திருந்த மக்கள் மீது பரிவு கொண்டு அவர்களுக்கு உணவு கொடுக்க கூடிய பகுதியினை வாசகமாக நாம் வாசிக்கின்றோம். இந்த வாசக பகுதியில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பயன்படுத்தக்கூடிய மூன்று முக்கியமான வார்த்தைகள் என்று பார்க்கும் பொழுது, முதல் வார்த்தையாக, கொடுங்கள்! என்ற வார்த்தையை நாம் பார்க்கின்றோம்.  அதாவது இயேசுவின் சீடர்கள் இயேசுவிடம் நெடு நேரம் ஆகிவிட்டது.  சுற்றிலும் உள்ள பட்டிகளுக்கும் ஊர்களுக்கும் சென்று உண்பதற்கு ஏதாவது அவர்கள் வாங்கிக் கொள்ளுமாறு நீர் மக்களை அனுப்பிவிடும் என்றனர். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அவர்களிடம், நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்! என்றார்.  இந்த "கொடுங்கள்" என்ற வார்த்தையினை இன்றைய முதல் வாசகத்தோடு ஒப்பிட்டு பார்க்கும்பொழுது நாம் ஒருவர் மற்றவருக்கு அன்பைக் கொடுக்க கடமைப்பட்டிருக்கிறோம். ஒருவர் மற்றவரிடம் நாம் அன்பை கொடுக்கவேண்டும் என்ற செய்தியினை இப்பகுதியானது உணர்த்துகிறது. 

ஆம்! அன்புக்குரியவர்களே! அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.  அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை. ஏனெனில் கடவுள் அன்பாய் இருக்கிறார் என்ற செய்தியினை இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் நாம் ஒருவருக்கு நம்மிடம் உள்ளதை கொடுக்க வேண்டுமாயின், கண்டிப்பாக நமது உள்ளத்தில் அன்பு இருக்க வேண்டும். எனவே இன்றைய வாசக பகுதிகளில் முதல் கருத்தாக அன்பை நாம் ஒருவர் மற்றவருக்கு கொடுக்கவேண்டும் என்ற செய்தியினை இயேசு நமக்கு வழங்குவதாக நாம் பொருள் கொள்ளலாம்!  அதனைத் தொடர்ந்து இந்த மக்களுக்கு உணவளிக்க கூடிய பகுதியில் இயேசுவிடம் அவர்கள்,  தங்களிடம் எதுவும் இல்லை என்று கூறிய போது இயேசுவிடம் அவர்கள், நாங்கள் போய் 200 தெனாரியத்திற்கு அப்பம் வாங்கி இவர்களுக்கு உன்னை கொடுக்க வேண்டும் என்கிறீரா?  என்ற கேள்வியை எழுப்பினார்கள்.  அப்போது அவர் உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? எனப் பாருங்கள் என்று இயேசு கூறுகிறார். 
 நாம் இன்று ஒவ்வொருவரும் நம்மை நாம் சுய ஆய்வு செய்து பார்க்க அழைக்கப்படுகிறோம். நாம் எப்பொழுதும் நம்மிடம் இருப்பதை பற்றி பேசுவதைவிட வெளியே இருப்பதை பற்றி தான் அதிகம் பேசுகிறோம். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தி வாசகங்கள் வழியாக நம்மை நமக்குள்ளாக உற்று நோக்கி பார்க்க அழைப்பு தருகிறார். சீடர்களிடத்தில் உங்களிடையே எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? என்ற கேள்வியை அவர் கேட்டது போல,  இன்று நாமும் நமக்குள்ளாக நாம் எத்தகைய அன்புள்ளம் கொண்டவர்களாக இருக்கின்றோம்? என்ற கேள்வியை நமக்குளாக எழுப்பிப் பார்க்க வேண்டும்.  எப்படி இயேசு சீடர்களிடம் உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய் பாருங்கள் என்று கூறினாரோ, அதுபோல நம் ஒவ்வொருவரையும் இன்றைய நாளில் இறைவன் நமக்குள்ளாக இருக்கக் கூடிய  அன்பு என்ற மனப்பாங்கை சுய ஆய்வு செய்து பார்க்க அழைப்பு தருகின்றார், ஆண்டவர். ஆண்டவரின் அழைப்பை ஏற்று அவர்களை நாம் எந்த அளவிற்கு நம்மிடையே அன்பு என்ற குணத்தினை கொண்டிருக்கிறோம்? என்பதை சிந்தித்துப் பார்க்க இன்றைய வாசகப்பகுதி இன்று நமக்கு அழைப்புத் தருகிறது. 

இயேசு சீடர்களுடன் தன்னைச் சுற்றி இருந்த மக்களுக்கு உணவுகளை கொடுத்து      பிறகு, மீதம் இருந்த அப்பத் துண்டுகளையும் மீன் துண்டுகளையும் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர் என்று நாம் வாசிக்கின்றோம். இவை சேர்த்து வைக்க வேண்டும் என்ற பாடத்தை நமக்குக் கற்பிக்கின்றன. இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில், பல நேரங்களில் பலவற்றை நாம்  தேடித்தேடி சேர்த்து வைக்கின்றோம். ஆனால் உண்மையிலுமே நாம் சேர்த்து வைக்க வேண்டியது அன்பால்! பல உள்ளங்களை நம் பால் சேர்த்து வைக்க கடமைப்பட்டிருக்கிறோம்.  இதையே இறைவன் என்ற வாசக பகுதி வழியாக நமக்கு மூன்றாவது கருத்தாக வழங்குகிறார்.  எனவே இன்றைய நாளில் வாசகங்களின் அடிப்படையில் இறைவன் அன்பை கொடுக்கவும், நம்மிடையே இருக்கக்கூடிய அன்பு என்ற குணத்தை பற்றி சுய ஆய்வு செய்து பார்க்கவும், அன்பால் பல உறவுகளை சேர்த்துக்கொள்ளவும், எப்போதும் அன்பில் நிலைத்திருக்கவும் நமக்கு அழைப்பு தருகின்றார். ஏனென்றால் கடவுள் அன்பாய் இருக்கிறார். அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.  நாமும் அன்புள்ளம் கொண்டவர்களாக, அன்பு செலுத்தும் கடவுளின் பிள்ளைகளாக ஒருவர் மற்றவரோடு இணைந்து அன்புறவில் வாழ  இன்றைய நாளை இனிதே துவங்குவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...