நம்பிக்கையால் நற்சான்றுபகர்வோம்!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் எனது சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
2021 ஆம் ஆண்டில் முதல் மாதத்தை நிறைவு செய்து நாம் புதிதாக இரண்டாவது மாதத்தில் இன்று காலடி எடுத்து வைத்திருக்கிறோம். இந்த ஒரு மாத காலமாக பல விதமான நோய் தாக்கத்தினால் அச்சத்தில் இருக்கக்கூடிய மனிதர்களுக்கு மத்தியில் இறைவன் நம்மை காத்து இருக்கிறார் என்பதற்காக நன்றி கூறுவோம். இறைவன் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொருவரையும் பாதுகாக்க வேண்டும் என இன்றைய நாளில் நமது முதல் வேண்டுதலை இறைவனிடத்தில் சமர்ப்பிப்போம். இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் நாம் நற்செயல்களால் நம்பிக்கையினால் நற்சான்று பெறக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என அழைப்பு தரக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் பேய் பிடித்த ஒரு நபரை நாம் பார்க்கின்றோம். இந்த பேய் பிடித்த நபர் எப்படி இருந்தார் என விவிலியத்தில் கூறப்பட்டுள்ளது என்றால், இவரது கைதிகளை சங்கிலிகளால் கட்டி வைப்பார்கள். ஆனால் அவர் அதனை உடைத்து விடுவார் என்றும், இவர் இரவு பகலாய் கூச்சலிட்டுக் கொண்டே இருப்பார் என்றும், இவரை எவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், இவர் தம்மை தாமே கற்களால் காயப்படுத்திக் கொண்டவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய மனிதன் ஆண்டவர் இயேசுவிடம் ஓடி வந்து சரணாகதி அடையும் போது இறைவன் அவரை குணப்படுத்துவதை தான் நாம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கின்றோம். கடந்த ஒரு மாத காலமாக இந்த பேய் பிடித்த மனிதனைப் போலத் தான் நமது செயல்பாடுகளும் சில நேரங்களில் இருந்திருக்கும். பலர் நம்முடைய கைகளை கட்டிப்போட முயன்றார்கள். நாம் நல்ல செயல் செய்ய வேண்டும் என எண்ணும் போது கூட அதனை செய்ய விடாதவாறு நாம் பல நேரங்களில் பலரால் கை கட்டி வைக்கப்பட்டிருந்திருப்போம். அத்தகைய சூழலில் இருந்து விடுபட இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். எப்படி அந்த பாதிக்கப்பட்ட மனிதன் இரவு பகலாக எந்நேரமும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தானோ, அது போல கடந்த ஒரு மாதத்தில் நாமும் பலவற்றைப் பற்றி பலவற்றுக்கு எதிராக கூச்சலிட்டுக் கொண்டே இருப்போம். இன்றைய நாளில், புதிதாக பிறந்திருக்கும் இந்த புதிய மாதத்தில், கூச்சலிடுவதை நிறுத்தி அமைதியில் நடக்கும் நிகழ்வுகளை சீர்தூக்கி பார்த்து சிந்தித்து செயலாற்ற அழைக்கப்படுகின்றோம்.
எப்படி அந்த பேய் பிடித்த மனிதனை எவராலும் கட்டுபடுத்த இயலவில்லையோ அது போலத்தான், நாம் வாழும் இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனும் தனது மனதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு தோற்றுக் கொண்டேயிருக்கிறான். தோற்றாலும் முயற்சிப்பதை நிறுத்தி விடாமல், முயற்சி செய்து மனதை அடக்க கற்றுக் கொள்ளக் கூடியவர்களாக நாம் வாழவும் அழைக்கப்படுகின்றோம். எப்படி பேய் பிடித்த அந்த மனிதன் தன்னைத்தானே கற்களால் காயப்படுத்தி கொண்டிருந்தானோ அது போலத்தான் தேவையில்லாத பலவற்றை சிந்தித்து சிந்தித்து, தேவையில்லாத பலவற்றைப் பற்றி எண்ணி நாம் ஒவ்வொரு நாளும் நம்மை நாமே காயப்படுத்தி ஒவ்வொரு நாளையும் இனிய நாளாக மாற்றாமல் இனிமையான நாளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். இத்தகைய செயல்பாடுகளில் இருந்து நாம் விடுபட்டவர்களாய் இந்த புதிய மாதத்தில் அடியெடுத்து வைக்க நம்மை அன்புடன் அழைக்கிறது இன்றைய முதல் வாசகம். பிறந்துள்ள இந்தப் புதிய மாதத்திலே நாம் ஒவ்வொருவரும் நம்பிக்கையினால் நற் செயல்களை செய்திட அழைக்கப்படுகின்றோம். இயேசு பேய் பிடித்து பாதிக்கப்பட்டிருந்த மனிதன் தன்னிடம் வந்து சரணடையும் போது அந்த மனிதனை முழுமையாக மாற்றி அவர் அறிவுத் தெளிவோடு ஆடை அணிந்தவராக இயேசுவின் அருகில் அமர்ந்து இயேசுவோடு உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு வியந்தவர்களைப் போல நாம், கடந்த மாதத்தில் நடந்த கசப்பான அனுபவங்களை எல்லாம் மனதில் இருத்தி வாழ்க்கையின் அழகை கெடுத்து விடாமல், கடந்த மாத அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை மட்டுமே மனதில் இருத்தியவர்களாய், பிறந்துள்ள இந்த புதிய மாதத்தில் ஒவ்வொரு நாளும் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்யக்கூடிய, நல்லது செய்யக்கூடிய, நற்செயல் புரியும் மனிதர்களாக இருக்க அழைக்கப்படுகின்றோம். இன்றைய முதல் வாசகத்தில் கூட நம்பிக்கையினால் அரசுகளை வென்றவர்களை பற்றிய பட்டியல் ஆனது நமக்கு தரப்படுகிறது. கடவுள் மீது கொண்டிருந்த அதீத நம்பிக்கையின் காரணமாக பலர் தங்கள் வாழ்க்கையில் நற்செயல் செய்வதை மட்டும் தங்களுடைய தலையாய பணி என எண்ணி அப்பணியைச் செய்ததால் வாழ்க்கையில் பல நிலைகளில் வெற்றி பெற்றார்கள். இதை தான் இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம். வாசகங்கள் நமக்கு உணர்த்தக்கூடியவற்றை வாங்கியவர்களாக, நாம் நம்பிக்கையினால் நற்செயல் செய்யக்கூடியவர்களாக விளங்கிட, இன்றைய நாளில் இறைவனது அருளை வேண்டி இணைந்து ஒருவர் மற்றவருக்காக தொடர்ந்து செபித்த வண்ணம் இறையருளை வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக