திங்கள், 25 ஜனவரி, 2021

இதோ வருகின்றேன்! (26.1.2021)

இதோ வருகின்றேன்!
 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
         
                       இன்றைய முதல் வாசகத்தில் "இதோ வருகின்றேன்" என்ற இறைவார்த்தை மையப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆலயத்தில் பலி செலுத்த வருகின்ற பொழுது, தான் செய்த பாவத்தை நினைத்து மனம் வருந்தி பலி செலுத்த வேண்டும். ஆனால் அவ்வாறு அல்லாது, வெறுமனே விலங்குகளின் இரத்தத்தை பலியிடுவது என்பது மக்களின் பாவங்களை போக்க இயலாததாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் மீண்டும் பாவம் போக்கும் பலியை நாம் செலுத்த வேண்டும் என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையின் வழியாக,  ஒரே முறையாக  அவர் சிந்திய ரத்தத்தின் வழியாக, நம்மை ஒவ்வொரு நாளும் மீட்கிறார், தூய்மைப்படுத்துகிறார். இதற்காகவே தனது உடலை இறைவனிடம் கையளித்ததாக முதல் வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து குறிப்பிடுகின்றார். 

                    இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு ஆண்டவர் தன்னுடைய இறையரசு அறிவிப்பு பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறார். ஆண்டவர், தந்தை தம்மிடம் ஒப்படைத்த பணிகளை இம்மண்ணுலகில் ஆற்றுகிறார். மக்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைப்பதின் வழியாக இறையரசு பணியை ஆர்வத்தோடு செய்து கொண்டிருக்கிறார். 
                    அப்போது ஆண்டவர் இயேசுவின் இறையாட்சி பணிக்கு இடையூறு விளைவிக்கும் வண்ணமாக ஆண்டவர் இயேசு மதிமயங்கி இருக்கிறார் என்று சலசலப்பான பேச்சு அங்கு நிலவிக் கொண்டிருந்தது. இதனை செவியுற்ற ஆண்டவர் இயேசுவின் தாயும் சகோதரர்களும் அவரைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தவர்களாய், ஆண்டவர் இயேசுவிடம் "இதோ வருகிறேன்" என்று ஓடோடிச் சென்று அவரை வதந்திகளில் இருந்து காப்பாற்ற வேண்டும் என விரும்பினார்கள். ஆண்டவர் இயேசுவிடம் வந்தார்கள். 
                    அங்கு கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் ஒருவரை மட்டும் ஆளனுப்பி ஆண்டவர் இயேசுவை அவ்விடத்தை விட்டு வெளியே வருமாறு அழைக்கிறார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவோ, "இதோ வருகிறேன்" என்று சொல்லி அவர்களோடு சென்றுவிடவில்லை. மாறாக தந்தை இறைவன் தனக்கு பணித்த இறையாட்சிப் பணியை எளிய மக்கள் மத்தியில் ஆற்றிக் கொண்டிருக்கிறார்.
                    மேலும் தன்னை சுற்றியிருந்து இறை வார்த்தைக்கு செவி கொடுத்துக் கொண்டிருந்த மக்களை பார்த்து, "இவர்களே என் தாயும் சகோதரர்களும்" என்று கூறுகிறார். ஏனென்றால் அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும், "இதோ வருகிறேன்" என்று சொன்னவர்களாய் இறைவார்த்தைக்கு செவி கொடுக்க ஆண்டவர் இயேசுவை தேடி வந்தவர்கள். 
ஆண்டவர் இயேசுவின் தாய் அன்னை மரியாவோ, கபிரியேல் வானதூதரிடமிருந்து இறைச் செய்தியை கேட்ட பொழுது, உடனே, "நான் ஆண்டவரின் அடிமை. உமது சொற்படியே எனக்கு ஆகட்டும்" இதோ ஆண்டவரின் திருவுளத்தை நிறைவேற்ற வருகிறேன்!  என்று கூறியதோடு மட்டுமல்லாது அதனை உடனடியாக தனது வாழ்வில் செயல்படுத்தியவர். இவ்வாறு இதோ வருகிறேன் என்ற அர்ப்பண வார்த்தைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் நம் அன்னை மரியாள். எனவே தான் நம் அன்னை மரியாள் உலகத்தில் உள்ள எல்லோருக்கும் தாயாக சிலுவையின் அடியில் நமக்கு கொடையாக கொடுக்கப்பட்டார். 
         இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் நாமும் பல நேரங்களில் ஆண்டவர் இயேசுவைத் தேடுகிறோம். அந்தத் தேடலில் உண்மை இருக்கிறதா? ஆர்வம் இருக்கிறதா? மகிழ்ச்சி பிறக்கிறதா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.
                இயேசுவைத் தேடிச் செல்கின்ற நமக்கும் இறையாட்சிப் பணிக்கான அழைப்பை ஆண்டவர் இயேசு வழங்குகின்றார். நம்மில் எத்தனை பேர், "இதோ வருகிறேன்" என்று கூறி, ஆண்டவரின் குரலுக்கு செவி கொடுக்கிறோம் என சிந்திப்போம். 
               ஒவ்வொரு நாளும் ஆண்டவரின் வார்த்தைக்கு செவி கொடுத்தவர்களாக வாழ்ந்து, "இதோ வருகிறேன்" என்று கூறி, தூய்மையான உள்ளத்தோடு ஆண்டவரை தேடக்கூடியவர்களாய் நாம் ஆலயத்திற்குச் செல்ல இன்றைய நாளில் உறுதி ஏற்போம். ஆண்டவரின் ஆலயத்தில் ஆண்டவரை சந்தித்து,  அவரில் உண்மையைக் கண்டு உணர்வோம். நம்மையும் உண்மையின் பாதையில் அர்ப்பணித்து ஆண்டவர் இயேசுவின் அன்பு பிள்ளைகளாக அவரின் இறைபணியில் இணைந்திடுவோம்.

1 கருத்து:

  1. இதோ வருகின்றேன் என்று ஆண்டவர் இயேசுவுக்காய் மற்றவருக்கு சிறிய அளவிலேனும் நன்மைகள் செய்து அவரை மகிமைப்படுத்த ஆயத்தமாகிடநம்மை அன்புடன் அழைக்கும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்களும்! ஜெபங்களும்! நன்றிகளும்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...