இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
முயற்சியை நிறுத்துவதும்
மூச்சை நிறுத்துவதும் ஒன்றே....
என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப... இன்றைய முதல் வாசகத்தில் சாமுவேலை கடவுள் அழைக்கும் போது இரண்டு முறை தன்னை அழைப்பது யார்? என்பதை உணராத சாமுவேல் தனது குருவான ஏலியின் வழிகாட்டலை நாடுகிறார். அழைப்பது இறைவன் என்பதை உணர்ந்த குரு சாமுவேலுக்கு வழிகாட்ட சாமுவேல் இறைவனை கண்டு கொள்ளகிறார்.
இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் எங்கெங்கோ இறைவனை நாம் தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இறைவன் எப்போதும் நம்மை அழைத்து கொண்டு இருக்கிறார். நமக்குள் இருக்கும் இறைவனை நாம் கண்டு கொண்டிருக்கின்றேமா? ஒவ்வொரு நாளும் நம்மில் இருந்து வெளிவரத் துடிக்கும் அந்த இறைத் தன்மைக்கு என்றாவது வழிவிட்டு இருக்கின்றோமா? என்ற கேள்விகளை நமக்குள் நாமே எழுப்பி பார்ப்போம்.
உளி தொடும் முன்பே...
வலிஎன அழுதால்...
சிலையாக முடியாது....
இதயத்தின் அமைதியில் தான் கடவுள் பேசுகிறார்.
ஜெபத்தின் தொடக்கம் அவர் பேசுவதை காது கொடுத்து கேட்பது தான்.
நாம் அவரது குரலுக்கு காது கொடுத்து கேட்காமல் இறைவன் நம்மோடு பேசுவதில்லை என கூறுவதில் அர்த்தமில்லை. இன்றைய நாளில் நம்முள் இருந்து நம்மோடு பேச துடிக்கும் இறைவனுக்கு செவி கொடுக்க இன்றைய முதல் வாசகம் நமக்கு அழைப்பு தருகிறது.
இறைவனது குரலுக்கு செவி கொடுக்கும் போது மட்டுமே நாம் அவரோடு உள்ளத்தில் ஒன்றிணைந்து இருக்க முடியும். இதையே இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. ஆண்டவரோடு சேர்ந்து அவருடன் உள்ளத்தில் ஒன்றித்திருப்பார்கள். உங்கள் உடல் தூய ஆவி தங்கும் கோவில். இந்த உடலால் இறைவனுக்கு பெருமை சேருங்கள். வயிற்றுக்காக நாம் வாழாது ஆண்டவர் இயேசுவை மனதில் கொண்டவர்களாய் மனிதத்தை மனதில் கொண்டு இறைவனோடு இணைந்து வாழ வேண்டும். அதற்கு அற்பசுகங்களை நாம் அடியோடு விட்டுவிட வேண்டும். இவ்வாறு அற்ப சுகங்களை விட்டு விட்டு ஆண்டவரை பின்தொடர வேண்டுமாயின் அதற்கு நாம் ஆண்டவரின் குரலை ஆழமாக உள்வாங்கவும், கேட்கவும் இன்றைய நாளில் இரண்டாம் வாசகம் அழைப்பு தருகிறது.
இன்றைய முதல் வாசகத்தில் எப்படி குரு ஏலி சுட்டிக்காட்டிய போது இறைவனை சாமுவேலுக்கு கண்டு கொண்டாரோ, அதுபோல யோவான் தன்னுடைய சீடர்களுக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை சுட்டிக்காட்டுகிறார்.யோவானின் குரலை இறைவனது குரலாக உணர்ந்துகொண்ட சீடர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து, அவரோடு தங்கி, அவரோடு உரையாடி அவரை மெசியா என கண்டு கொண்டனர்.தாங்கள் கண்டு கொண்டதை தாங்கள் அடுத்தவருக்கு அறிவித்து அவரையும் இறைவனை நோக்கி அழைத்துச் செல்வதைதான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம்.
இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது மனிதத்தை மனதில் கொண்டவராய் தனது சொல்லிலும், செயலிலும் மனிதநேயத்தை வெளிப்படுத்தியது போல, நாமும் மனித நேயத்தோடு வாழ இறைவன் நம்மை நம்முள் இருந்து அழைத்துக் கொண்டே இருக்கிறார். அழைக்கக்கூடிய இறைவனை கண்டு கொண்டவர்களாய் நாம் காணும் மனிதர்களிடத்தில் மனிதநேயத்தோடு, நலமான நல்ல செயல்களை செய்யக் கூடியவர்களாக வாழ இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் அழைக்கின்றார்.
இறைவனது அழைப்பை உணர்ந்து கொண்டு நமது வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கி கொண்டவர்களாய் நாம் பயணிக்க அழைக்கப்படுகின்றோம்.
ஒரு மனமாற்றம்
இன்னொரு மனதை மாற்றும் ...
என்பார்கள். நாம் இறைவன் கொடுக்கக்கூடிய அழைப்புக்கு ஏற்ற வகையில் நம்மை நாம் மாற்றிக் கொண்டு, எப்படி இயேசுவை மெசியா என கண்டுகொண்ட சீடர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களை அவரிடம் அழைத்து வந்தார்களோ, அதுபோல ஒவ்வொருவருக்குள்ளும் இருந்து உரையாடக்கூடிய இறைவனது குரலை, ஒவ்வொருவரும் கண்டு கொள்ள நாம் அவர்களுக்கு வழி காட்டும் கருவிகளாகிட இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி எற்றவர்களாய் செயல்படுவோம்...
அமைதியுடன் இருந்து நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்று கூறும் இறைவார்த்தைக்கேற்ப, நமது உள்ளத்தில் நம்மோடு உரையாடும் ஆண்டவர் இயேசுவின் குரலுக்கு அமைந்த உள்ளத்தோடு செவி கொடுக்க வேண்டும் என்பதை அழகாய் விளக்கிய அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களும்! பாராட்டுக்களும்! நன்றிகளும்!
பதிலளிநீக்கு