இறைவனை அறிந்தவன் இறைவாக்கு உரைப்பான்!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு ஊரில் தையல்காரர் ஒருவர் இருந்தார். அதிகம் படிக்காவிட்டாலும் கேள்வி ஞானம் உடையவர். நீண்ட காலமாக இரு பிரிவினருக்கிடையே இந்த பிரச்சனையை தீர்த்து, நியாயமான தீர்ப்பினை வழங்கினார். இதைக் கேள்விப்பட்ட அந்த நாட்டு அரசன், அவரை அரண்மனைக்கு அழைத்து, பாராட்டி, விலைமதிப்பில்லாத வந்தால் உருவாக்கப்பட்ட ஒரு பெரிய கத்தரிக்கோலை பரிசாகத் தந்தார். தையல்காரரோ, அதை வாங்க மறுத்துவிட்டார். இது விலை உயர்ந்த பரிசு ஆயிற்றே! ஏன் மறுக்கின்றாய்? இதைவிட மேலான பரிசினை விரும்புகிறாயா? அப்படியானால் தயங்காமல் கேள், தருகிறேன்! என்றான், அரசன் அப்படியானால் தயங்காமல் கேள், தருகிறேன் என்றான் அரசன். அதற்கு தையல்காரர், அரசரே! எனக்கு இந்த கத்திரிக்கோல் வேண்டாம். எனக்கு ஒரு சிறிய ஊசியை பரிசாக கொடுங்கள். அதுவே நான் விரும்பும் பரிசு என்றான். விலை மதிப்பற்ற இந்த வைர கத்தரிக்கோலை விட, நீ கேட்கும் ஊசி, எந்த விதத்தில் உயர்ந்தது? என்று கேட்டார், அரசர். கத்திரிக்கோல் எவ்வளவு விலை உயர்ந்த பரிசாக இருந்தாலும், அதன் பணி வெட்டுவதே! ஆனால் ஊசியோ, வெட்டுண்டதை இணைக்கின்றது. ஒன்று சேர்க்கின்றது. நான் வெட்டுவதை அல்ல, இணைப்பதையே பரிசாகப் பெற விரும்புகிறேன் என்றான், அந்த தையல்காரன். அவனை பார்த்து அரசர் மெய்சிலிர்த்த வண்ணம், பாராட்டினார்.
இறைவனை நாம் ஒவ்வொருவரும் அறிந்து இருக்கிறோம்.இன்றைய நற்செய்தி வாசகத்தில் தீய ஆவி இறைவனை அறிந்திருக்கிறது. அந்த தீய ஆவி இயேசுவைப் பார்த்து, உமக்கு இங்கு என்ன வேலை என்ற கேள்வியை எழுப்புகிறது. நீர் யார் என எங்களுக்கு தெரியும் எனக் கூறுகிறது. அதே தீய ஆவி தான் இயேசுவைப் பார்த்து, நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர் எனவும் கூறுகிறது. தீம் ஆவிகள் ஆண்டவரை அறிந்திருந்தன. ஆனால், இயேசு உடன் இருந்தவர்கள் அவரை அறிந்து கொண்டார்கள் என்ற கேள்வியை இன்றைய நாளில் நாம் நமக்குள்ளாக எழுப்பிப் பார்ப்போம்.இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது, அவர் செய்த புதுமைகளையும், அவர் செய்த நல்ல செயல்களையும் பார்த்து பழகியவர்கள் கூட, அவர்கள் வாழ்வில் துன்பம் என வரும் போது, அவரை நம்பாதவர்களாகவும், அவரை ஏற்றுக் கொள்ளாதவர்களுமாகத் தான் இருந்திருக்கிறார்கள். ஆனால், இறைவனை அறிந்த ஒவ்வொருவருமே, இறைவாக்கு உரைப்பவர்களாகவும், இறைவன் இயேசு காட்டிய பாதையில் நடக்கக் கூடியவர்களாக இருக்க இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன. நாம் இயேசு கிறிஸ்துவை அதிகமாக அறிந்து கொள்ள வேண்டும். பொதுவாகவே நாம் நமது வாழ்வில் இருக்கக்கூடிய கவலைகளை எண்ணி எண்ணி, நிகழ்காலத்தை வாழாமல் எதிர்காலம் பற்றிய சிந்தனையிலேயே, நமது வாழ்வை கழிக்கின்றோம். ஆனால், இன்றைய இரண்டாம் வாசகத்தில், கடவுள் கூறுகிறார், நீங்கள் கவலையற்றவர்களாய் இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன் என்று.1 பேதுரு 5ம் அதிகாரம் 7ம் இறைவசனம் கூறுகிறது,
உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்.
1 பேதுரு 5:7.
நாம் நமது கவலைகளை எல்லாம் ஆண்டவரிடம் ஒப்படைத்து விட்டு, அவர் நமக்கு கற்பித்த மதிப்பீடுகளின் படி வாழும் போது, நாம் அவரை அறிந்தவர்களாக இருப்போம். அவர் அறிவித்தவற்றை மற்றவர்களுக்கும் அறிவிக்க கூடிய இறைவாக்கினர்களாக உருவாக முடியும். ஒரு இறைவாக்கினன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி இன்றைய முதல் வாசகம் அழகாக எடுத்துரைக்கிறது. இறைவாக்கினன் என்பவன், இறைவனது பெயரால், இறைவன் உரைத்தவற்றை, அடுத்தவருக்கு அறிவிக்க கூடியவராக இருக்கிறார்கள். சமூகத்தில் நடக்கக் கூடிய அநீதிகளை அநீதி என சுட்டிக்காட்டுகிறார்கள். அப்படி சுட்டிக் காட்டுவதனால், அவர்களுக்கு பலவிதமான இன்னல்களும் துன்பங்களும் அடைகிறார்கள். அவற்றை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு, ஆண்டவர் இயேசுவின் பணியான, நற்செய்திப் பணியை மட்டுமே சிரமேற்கொண்டு, தங்கள் வாழ்க்கையில் இறைவனது மதிப்பீடுகளின் படி இறைவாக்கு உரைத்து அனைவரையும் ஆண்டவர் இயேசுவுக்குள் வரவழைக்க செய்பவர்களாகத் தான் விவிலியத்தில் நாம் பார்த்த ஒவ்வொரு இறைவாக்கினரும் இருந்திருக்கிறார்கள். திருமுழுக்கு வழியாக திருஅவையின் உறுப்பினராக மாறக்கூடிய நாம் ஒவ்வொருவருமே, இறைவாக்கு உரைக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
இன்றைய நாளில் அச்சங்களை களைந்து, நம்மிடம் இருக்க கூடிய கவலைகளை எல்லாம் விட்டொழித்து விட்டு, ஆண்டவர் இயேசுவை முழுமையாக அறிந்து கொள்ளக் கூடியவர்களாக, அவரது வாழ்க்கை பாடம் நமக்கு கற்பித்த பாடங்களின் அடிப்படையில், இந்த சமூகத்தில் நீதியையும், உண்மையையும், எடுத்துரைக்கக் கூடிய ஒரு இயேசுவின் இறைவாக்கினனாக, இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். இறைவனை அறிந்தவன் இறைவாக்கு உரைப்பான், என்பதற்கேற்ப, நாம் இறைவனை அறிந்திருக்கிறோம். இறைவனை நாம் சந்திக்கும் நபர்களுக்கு அறிவிப்போம். அவர்கள் வாழ்க்கையில் அவர்களும் இயேசுவை கண்டுகொள்ளக் கூடியவர்களாக, இயேசுவின் போதனைகளின் அடிப்படையில், தங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு, அவரது பாதையில், உலகத்தை அன்புச் சமுதாயமாக மாற்றக் கூடிய பணியினை செய்ய, அதிகாரத்தோடும், துணிச்சலோடும், இறைவாக்கு அறிவிக்க நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். வாருங்கள், அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவிகொடுத்தவர்களாய், அறிந்த இறைவனை நாம் அறியாத மக்களுக்கு அறிவிப்போம். அறிவிக்கும் நல்ல இறைவாக்கினர்களாக மாறுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக