வாக்குறுதிகள் வாழ்வாக வேண்டும்!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
ஒரு குடும்பத்தில் நீண்ட காலமாக இவ்வாறு ஒரு பழக்கம் இருந்தது. அந்த குடும்பத்தில் பிறக்கக்கூடிய முதல் குழந்தைக்கு அதன் தந்தை அக்குழந்தை விரும்பக் கூடிய ஒரு காரினை அந்தக் குழந்தையின் இருபதாவது வயதில் பரிசாகத் தர வேண்டும். அக்குடும்பத்தில் பிறந்த ராஜாவுக்கு தற்பொழுது வயது 20 ஆகப்போகிறது. மூன்று வாரங்களுக்கு முன்பாக தந்தையும் ராஜாவும் கார் விற்பனை செய்யக்கூடிய கடைக்குச் சென்றார்கள். தந்தை கடைக்காரரிடம் சொல்லி, ராஜா விரும்பக்கூடிய காரினை பார்த்து, அதன் விலையைக் கேட்டு குறித்துக் கொண்டார். மூன்று வாரங்களுக்குப் பிறகு ராஜாவின் பிறந்த நாளும் வந்தது. அப்பொழுது தந்தை தனக்கு பரிசாகத் தரப் போகின்ற காரினை எண்ணிக்கொண்டிருந்தவனாய் ராஜா மகிழ்ச்சியோடு இருந்தான். அப்போது அங்கு வந்த தந்தை ஒரு கனமான பொருளை அவனிடம் பரிசாகக் கொடுத்தார். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. வழக்கமாக கார் சாவியை ஒரு சிறிய பெட்டியில் அல்லவா வைத்து தருவார்கள்! இது ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே என்று நினைத்த அவன், அந்த பரிசுப் பொருளை வாங்கி பிரித்தான். உள்ளே விவிலியம் ஒன்று இருந்தது. கோபத்தில் அதனை மூலையில் தூக்கி எறிந்தவனாய் உடனே தன்னுடைய துணிகளை எல்லாம் எடுத்துக்கொண்டு தன்னுடைய தாயின் சொல்லுக்கும் செவி கொடுக்காமல் விரைவாக வீட்டை விட்டு வெளியேறி, தன்னுடைய உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றான். அங்கு சில நாட்கள் தங்கியிருந்து, ஒரு வேலையில் சேர்ந்தான். தந்தை தனக்கு தருவதாக சொல்லிய காரினை பரிசாக தரவில்லையே என்று கோபத்துடன் அவன் வீட்டிற்கு வர மறுத்துவிட்டான். சில ஆண்டுகள் உருண்டோடின. ஒருநாள் அவனது தந்தை இறந்துவிட்டார் என்று செய்தியை கேட்டு தந்தையின் முகத்தை இறுதியாக பார்ப்பதற்காக ஓடோடி வந்தான். தந்தையை பார்த்து கதறி அழுதான். அடக்கச் சடங்குகள் எல்லாம் முடிந்த பின்பு, சற்று நிதானமாக, மனம் அமைதி அடைந்த பின்பு, தன்னுடைய அறைக்குச் சென்று கதவைத் திறந்தவன், அன்று தான் கோபத்தில் வீசிய அந்த விவிலியத்தின் அருகில் கிடந்த ரிப்பன் கட்டப்பட்ட ஒரு சாவியையும் கண்டான். தந்தையின் வாக்குறுதியை அன்று அவன் உணர்ந்து கொண்டவனாய், தந்தையின் வாக்கு மாறாத அன்பை நினைத்து அவனது கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது.
ஆம்! அன்புக்குரியவர்களே!இன்றைய முதல் வாசகமானது கடவுளோடு நாம் கொண்டிருக்கக்கூடிய வாக்குறுதியையும் அவ்வாக்குறுதியினால் நிலை நிறுத்தப்படக்கூடிய உடன்படிக்கையையும் பற்றி எடுத்துரைக்கின்றது. பொதுவாகவே மனித வாழ்வில் வாக்குறுதிகளுக்கு பஞ்சம் இருப்பதில்லை. பல நேரங்களில் நாம் நமது வாழ்வில் வாக்குறுதிகள் கொடுக்கிறோம். மகிழ்ச்சியில், துக்கத்தில் என பல நேரங்களில் நாம் வாக்குறுதிகளை கொடுக்கிறோம். வாக்குறுதிகள் கொடுப்பதில் எந்த வித தவறும் இல்லை. கொடுத்த வாக்கை பின்பற்றி இறுதி வரை நிலைத்திருப்பதில் தான் மகத்துவம் அடங்கியிருக்கிறது. ஆனால், பொதுவாகவே, கொடுத்த வாக்கை இறுதி வரை காப்பாற்றக் கொண்டிருக்க கூடிய மனிதர்கள் இவ்வுலகத்தில் மிகவும் குறைவு.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இயேசு தன்னுடைய சீடர்களை, தாம் விரும்பியவர்களை எல்லாம் நம்மிடம் அழைத்து நற்செய்தி அறிவிக்கவும், பேய்களை ஓட்டவும் பலவிதமான அருள் அடையாளங்களை செய்வதற்கான வல்லமையையும் தன் சீடர்களுக்கு கொடுத்தார். அவர்கள் இறுதி வரை அவரோடு இருந்து பயணிப்பார்கள் என நம்பினார். ஆனால் அவர்களும் அவரை மறுதலித்தார்கள். அவரை விட்டு விட்டு ஓடினார்கள். இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கக் கேட்டது போல, இஸ்ரயேல் மக்களோடு இறைவன் உடன்படிக்கை செய்திருந்தார். நீங்கள் என் மக்கள். நான் உங்கள் கடவுள் என்று. ஆனால் பல நேரங்களில் அந்த மக்கள் கடவுளை மறந்து விட்டு, தாங்கள் விரும்பிய பாதையில் சென்றார்கள். தாங்கள் விரும்பிய பாதையில் சென்று தவறிழைத்தோம் என்பதை உணர்ந்து கொண்ட போது, மீண்டும் இறைவனிடம் திரும்பி வந்தார்கள். வாக்குறுதியை புதுப்பித்தார்கள். மீண்டும் இறைவனது அன்பில் நிலைத்திருந்தார்கள். இன்னும் சில காலம் கழிந்த பிறகு மீண்டும் வாக்குறுதியில் இருந்து விலகி ஓடினார்கள். பொதுவாகவே நமது நெஞ்சத்திற்கு நெருக்கமானவர்கள் தான், கொடுத்த வாக்கை மீறி செயல்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இன்றைய வாசகப் பகுதியானது நாம் வாக்கு கொடுக்கின்றோம் என்றால் அந்த வாக்குறுதியில் இறுதி வரை நிலைத்திருக்க நமக்கு அழைப்பு தருகின்றன.
ஆம்! அன்புக்குரியவர்களே! சபை உரையாளர் புத்தகம் கூறுகிறது, கடவுளின் முன்னிலையில் சிந்தித்துப் பாராமல் எதையும் பேசாதே. வாக்குக் கொடுக்காதே. அப்படி கொடுத்தால் கொடுத்த வாக்கை நிறைவேற்று. கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் போவதைவிட வாக்கு கொடுக்காமல் இருப்பதே நலம் என சபை உரையாளர் புத்தகம் அதிகாரம் 5, இறைவசனம் 2 கூறுகிறது.
நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில், பல நேரங்களில் பலர், பலரிடம், பலவற்றுக்காக வாக்கு கொடுக்கின்றோம். கொடுத்த வாக்கை இறுதிவரை பிடித்துக்கொண்டிருந்தோமா? என சிந்தித்துப் பார்ப்போம். சில வேளைகளில் நாம் கொடுத்த வாக்கை பிடித்துக் கொண்டிருப்பதால், ஒருவேளை நம்மை சுற்றி வாழ்பவர்களுக்கு அதனால் தீங்கு ஏற்படுமாயின், அதனை நலம் பயக்கும் வாக்குறுதியாக மாற்றிக் கொள்ள நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். ஒருவேளை சமூகத்தின் நன்மைக்காக, அடுத்தவரின் நலனுக்காக, கொடுத்த வாக்கிலிருந்து நாம் பின்வாங்குகிறோம் என்றால், அதனை சமூகத்திற்கு பயன் தரக்கூடிய வகையில் மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறது மகாபாரதம். ஆம்! பீஷ்மர் தன்னுடைய தந்தையின் சுகத்திற்காக தான் அரியணை ஏற போவதில்லை என சபதம் எடுக்கிறார். வாக்கு கொடுக்கின்றார். கொடுத்த வாக்கை இறுதிவரை காத்து நிற்கின்றார். ஆனால் இவர் தான் கொடுத்த வாக்கை நீதிக்காக, சமூகத்தில் தர்மம் நிலைக்க வேண்டும் என்பதற்காக மாற்றிக் கொள்ளாததன் விளைவாகத்தான் அஸ்த்தினாபுரம் என்ற ஊரிலே அனேக அநீதிகள் நிகழ்ந்தது என மகாபாரதத்தின் கதாநாயகனாகிய கிருஷ்ணன் விளக்கிக் கூறுகிறார், யுத்த களத்தில் நின்ற வண்ணம். இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் பல நேரங்களில் கொடுத்த வாக்கை நாம் இன்றைய நாளில் நினைத்துப் பார்ப்போம். கடவுளின் முன்னிலையில் சிந்தித்து செயல்படுவோம். தேவையான இடங்களில் வாக்குறுதிகளை கொடுப்போம். வாக்கு கொடுத்தால் அதனை செயலாக்குவோம். பெயரளவிற்கு வாக்கு கொடுத்து விட்டுச் செல்லாமல் கொடுக்கக்கூடிய வார்த்தைகளை இறுதிவரை உறுதியாக இருந்து வாழ்வாக்குவோம். ஒருவேளை அநீதியை தடுக்க வேண்டும் என்ற சூழலில் மட்டும் கொடுத்த வாக்கினை மறுபரிசீலனை செய்வோம். வாக்குறுதிகள் கொடுப்பதை பற்றியும் வாக்குறுதிகள் பெற்றுக் கொள்வதை பற்றியும், கொடுத்த வாக்கை மீறிய நமது செயல்பாடுகளையும் இன்றைய நாளில் சீர்தூக்கிப் பார்த்து நம்மை நாம் சரி செய்து கொண்டு கொடுத்த வாக்கை செயல்படுத்தக் கூடியவர்களாக, வெறுமனே பேசுபவர்களாக மட்டுமல்லாமல், செயலில் காட்ட கூடியவர்களாக உருமாற இறையருள் வேண்டி, இணைந்து செபிப்போம்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குகடவுளுக்கும் நமது உறவுகளுக்கும் உண்மையோடு வாழ, வாக்குறுதிகளை கடைப்பிடிப்போம்!
நீக்கு