புதன், 20 ஜனவரி, 2021

உங்களைப் பின்தொடர்வது யார்? (21.1.2021)

உங்களைப் பின்தொடர்வது யார்?
"தலைவனாக இரு. 
இல்லையேல்,...
தலைவனோடு இரு"  

என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப, இன்று பலரும் பலரை பின்தொடர்கின்றனர்.  பஞ்சாயத்துக்கு பஞ்சமில்லாத நமது நாட்டில், இன்று நாளுக்கு நாள் ஒரு தலைவன், ஒரு புதிய கட்சி, ஒரு புதிய குரு என உதயமாகிக் கொண்டே உள்ளனர். 

இப்படிப்பட்ட இச்சூழலில் இன்றைய முதல் வாசகமானது ஒரு நல்ல குரு அல்லது ஒரு நல்ல தலைவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதனை சுட்டிக்காட்டும் வகையில்  இயேசுவை ஒரு நல்ல தலைவராகவும் குருவாகவும் சுட்டிக்காட்டி விளக்குகின்றது. இந்த இயேசுவைப் பின்பற்றி, அவரின் பாதையில், அவரது வார்த்தைகளை மையமாகக் கொண்டு வலம் வரக்கூடிய பல குருக்கள் மற்றும் இயேசுவை ஏற்றுக்கொண்ட பலரும் தாங்கள் பின் தொடரும் இயேசுவின் பாதையில் தான் பயணம் செய்து கொண்டிருக்கிறார்களா?  என சற்று நின்று திரும்பிப் பார்க்க இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் பலர் இயேசுவிடம் குணம் பெற வேண்டும் என்றும், அவரைத் தொட வேண்டும் என்றும், அவரைப் பின் தொடர்கின்றனர். இன்றுவரை இயேசுவின் பாதையில் பயணிக்கிறோம் எனக் கூறக்கூடிய நாம், நம்மை பின்தொடர்பவர்கள் யார்? என சிந்தித்துப் பார்ப்போம். பிறர் நம்மை பின் தொடரக் கூடிய வகையில் நமது வாழ்வு அமைந்து உள்ளதா? என்ற கேள்வியை எழுப்பி பார்ப்போம். திருவிவிலியத்தில் மத்தேயு நற்செய்தி 28 ஆம் அதிகாரம் 20 ஆவது வசனம் கூறுகிறது, "நான் உங்களுக்குக் கட்டளையிட்டவற்றை எல்லாம், அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்" என்ற  கடவுள், இன்று நம்மோடு உள்ளார். அவரை மனதில் கொண்டு, அவர் காட்டிய பாதையில் பாடம் கற்றவர்களாக நாம் பயணிக்க வேண்டும். அப்படி பயணிக்கும் போது, நாம் பலரும் நம்மை பின் தொடரக் கூடிய நபர்களாகிட முடியும். 

இன்று நம் தாய் திருஅவையோடு இணைந்து நினைவு கூறக் கூடிய புனிதை ஆக்னஸ் தன் வாழ்வில் கிறிஸ்து இயேசுவின் வார்த்தைகளின் படி வாழ்ந்து வந்தவர். கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கையால் உரோமை தலைவனது மகனின் ஆசைக்கு இணங்க மறுத்தமையினால் வெட்டிக் கொல்லப்பட்டார். இவர் இறக்கும் முன்பு, தன்னைச் சுற்றி உள்ளவர்களை பார்த்து, எனது இரத்தத்தால் உங்களது வாளை நீங்கள் கறைப்படுத்தலாம். ஆனால் கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட எனது உடலை  யாரும் கறைப்படுத்த  முடியாது எனக் கூறி, இறப்புக்கு தயார் ஆனாள். ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளுக்கு  ஏற்ப வாழும் போது, நமது வாழ்வும் புனித ஆக்னஸைப் போல, பிறர் பின்பற்றும் வாழ்வாக மாறும்.       

"கடவுளுக்கு அஞ்சி நடப்போரை ஒருபோதும் அசைக்க இயலாது" என்ற, நீதிமொழிகள் 10ம் அதிகாரம் 30 வது வசனத்திற்கு ஏற்ப  நமது வாழ்வை அமைத்து, பிறர் பின் தொடரக் கூடிய வாழ்வாக நமது வாழ்வை மாற்றிட இயேசுவின் பாதையில் நாம் அவரைப் பின் தொடர்ந்து பயணிப்போம்.

1 கருத்து:

  1. கடவுளுக்கு அஞ்சி நடப்போரை அசைக்க முடியாது என்ற இன்றைய கருத்து மிகவும் அருமை. அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களும்! செபங்களும்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...