ஒளியைக் கண்டோமா!
இறைவன்இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாளின் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
நேற்று நாம் கொண்டாடி மகிழ்ந்த திருக்காட்சி பெருவிழாவில் விண்மீனின் வழிகாட்டல் முக்கிய இடம் பெற்றது என்பதை நாம் அறிவோம். விண்மீனை கண்டு கொண்ட ஞானிகள், ஆண்டவர் இயேசுவை சென்றடைந்தார்கள். தங்கள் காணிக்கைகளை ஆண்டவராகிய பாலன் இயேசுவுக்கு அர்ப்பணித்து விட்டு மகிழ்ச்சியோடு தங்கள் நாடு திரும்பினார்கள்.
நேற்று விண்மீனின் ஒளி ஞானிகளுக்கு வழிகாட்டியது. இன்றைய வாசகத்தில் ஆண்டவராகிய இயேசுவே பேரொளியாக இருக்கின்றார். பேரொளியாம் ஆண்டவர் இயேசுவை கண்டுகொண்டு அவரை ஏற்றுக்கொண்டவர்களிடம் இருந்து வரும் தூண்டுதல் அனைத்தும் கடவுளிடம் இருந்து வருகின்றது. அந்த தூண்டுதலே, அவர்களையும் அவர்கள் பின்பற்றுகிற அவர்களையும் கடவுளின் கட்டளைகளைக் கடைபிடிக்கச் செய்கின்றது. கடவுளிடமும் கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட அருகில் இருக்கும் அனைத்து சகோதர சகோதரிகளிடமும் நிறைவான அன்பை வெளிப்படுத்த செய்கின்றது. அன்பில் இணைந்து இருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவர்களோடு இணைந்து இருக்கிறார் என்று இன்றைய முதல் வாசகம் நமக்கு வெளிப்படுத்துகின்றது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு நாசரேத்தை விட்டு கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று அந்த மக்களோடு குடியிருந்தார், அதாவது அவர்களோடு தன்னுடைய வாழ்வை இணைத்துக்கொண்டார் என்பதை நாம் காண்கிறோம்.
இறைவாக்கினர் எசாயா முன்னறிவித்த, "காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடர் ஒளி உதித்துள்ளது"
என்ற இறைவார்த்தை பகுதியானது இன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நிறைவேறுவது நாம் காண்கிறோம். ஆண்டவர் இயேசுவை ஏற்றுக்கொண்ட கப்பர்நாகும் மக்களுக்கும், அதைச் சூழ்ந்துள்ள கலிலேய பகுதியில் வாழ்ந்த அனைத்து மக்களிடையேயும், "மனம் மாறுங்கள்! விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது!" என்று ஆண்டவர் இயேசு பறைசாற்றுவதையும், ஆண்டவர் இயேசுவை ஏற்றுக் கொண்டவர்கள் தங்களை வாட்டி வதைத்த பல்வேறு பிணிகளில் இருந்தும், நோய்களிலிருந்தும், பேய்களின் பிடியில் இருந்தும் விடுதலை பெற்றனர். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பில் வாழ்வு பெற்றனர் என்பதை நாம் அறிகிறோம்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு, அனைவருக்கும் வாழ்வு கொடுத்தது! மனம் மாற அழைப்பு விடுத்தது! இறையாட்சியை இவ்வுலகில் மலரச் செய்தது!
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் போல இவ்வுலகிற்கு ஒளியாக வாழ இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன. பேரொளியாய் இப்புவியில் உதித்த நம் ஆண்டவர் இயேசுவின் அன்பு ஒளியை பிரதிபலிப்பவர்களாக, ஆண்டவர் இயேசுவைப் போல, அனைவரையும் அன்பு செய்து இறையாட்சியின் மக்களாக! ஒளியின் மக்களாக வாழ்ந்து, அவரது அன்பில் நம்மை இணைத்துக் கொள்வோம்! சுடரொளிகளாய் இவ்வுலகில் வலம் வருவோம்!
ஆண்டவர் இயேசுவை பிரதிபலித்து அவரைப்போல ஒளியின் மக்களாக வாழ்வோம்!
பதிலளிநீக்கு