இறைவன் இயேசுவில் அன்புக்கு உரியவர்களே! இன்றைய நாள் வாசகங்களின் வழியாக என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
அச்சம் களைந்து அவரோடு இணைவோம்!
இன்றைய முதல் வாசகமானது அன்பைப் பற்றியும் நாம் ஒருவர் மற்றவர் மீது அன்பு காட்ட வேண்டும் என்ற நாம் கொண்டிருக்கக்கூடிய கடமை பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தனிமையில் இறைவனிடம் வேண்டி விட்டு, சீடர்களை நோக்கி கடல்மீது நடந்து செல்வதையும், இயேசுவை கண்டு கொள்ளாமல், கடல்மீது வருவது பேய் என எண்ணி அஞ்சக் கூடிய சூழலில் கலங்கி நின்ற சீடர்களைப் பார்த்து இயேசு, துணிவோடிருங்கள்! நான்தான்! அஞ்சாதீர்கள்! என்று அவர்களுக்கு துணிவூட்டிய நிகழ்வையும் நாம் வாசிக்க கேட்கின்றோம்.
இம்மண்ணில் வாழுகின்ற ஒவ்வொருவரும் ஆண்டவரோடு இணைந்திட ஆசைப்படுகிறோம். ஆண்டவரோடு இணைந்திட விருப்பம் இல்லாதவர் யாரேனும் உண்டா இந்த அகிலத்தில்? என்ற கேள்வியை எழுப்பினால் அக்கேள்விக்கு ஆம் என்று பதில் கூற நாம் எப்போதும் தயாராக இருக்க மாட்டோம் என நம்புகிறேன். இம்மண்ணில் பிறந்த ஒவ்வொருவருமே ஆண்டவரோடு இணைய விரும்புகிறோம். இந்த உடல் மண்ணுக்கு செல்கிறது. நமது ஆன்மாவோ இறைவனை நோக்கிச் செல்கிறது. உடலைவிட அகம் எப்போதும் தூய்மையாக இருக்கவேண்டும். இந்த செய்தியினை தான் இன்றைய வாசகங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அகம் தூய்மையாக இருக்க வேண்டும் என்றால் அகத்திற்குள் அன்பு இருக்க வேண்டும். அந்த அன்பை ஒருவர் மற்றவரோடு நாம் காட்டவும் கடமைப்பட்டிருக்கிறோம். அன்பு காட்டும் போது மட்டுமே நாம் கடவுளோடு இணைந்திருக்கிறோம். ஏனென்றால் கடவுள் அன்பாய் இருக்கிறார். கடவுள் நம்மீது கொண்ட அன்பின் வெளிப்பாடுதான் இயேசு இந்த மண்ணிற்கு மனிதனாக வந்து சிலுவையில் சிலுவையில் தம்முயிரை கையளித்தார். வேடிக்கையாக கூறுவார்கள், ஒரு குழந்தை இயேசுவிடம் சென்று எந்த அளவுக்கு என்னை உங்களுக்கு பிடிக்கும்? என்று கேட்டதாம். அதற்கு இயேசு சிலுவையில் தொங்கிய வண்ணம், இந்த அளவிற்கு என்று கைகளை விரித்துக் காட்டினார் என்று கூறுவார்கள். இந்த அளவிற்கு என்று சிலுவையில் தொங்கும் கூடியவராக அக்குழந்தை முன் தோன்றினார் என்று கூறுவார்கள். இவ்வுலகத்தில் தலையாக நாம் ஒவ்வொருவருக்கும் இருக்கக் கூடிய மிக முக்கியமான கடமைகளில் ஒன்று அன்பு காட்டுவது. இந்த அன்பில் அச்சம் இருக்கக்கூடாது. அச்சம் இருக்கும் இடத்தில் அன்பு இருக்காது என்பதை முதல் வாசகம் விளக்குகிறது. இயேசுவின் சீடர்கள் இயேசுவின் மீது அன்பு கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த அன்பு நிலையான அன்பாகவும் உறுதியான அன்பாகவும் இல்லை. மாறாக வெளியே நடக்கக்கூடிய நிகழ்வுகளை எல்லாம் கண்டு அவ்வப்போது அவர்கள் தாங்கள் இயேசுவின் மீது கொண்டிருந்த அன்பிலிருந்தும் நம்பிக்கையில் இருந்தும் விலக கூடியவர்களாக இருந்தார்கள் என்பதனை இன்றைய வாசக பகுதி நமக்கு விளக்குகிறது.
ஆம்! அன்புக்குரியவர்களே!
ஆண்டவர் இயேசு கிறிஸ்து தங்களோடு இருந்தபோதும், அவர் செய்த பலவிதமான அற்புதங்களையும் அதிசயங்களையும் கண்ட போதும் கூட, தங்களுக்கு ஒரு இன்னல் நேரும் போது இறைவன் இயேசுவை கண்டு கொள்ளாதவர்களாக சீடர்கள் கலங்குகின்றனர். அவர்களிடம் இயேசு, துணிவோடிருங்கள்! நான்தான்! அஞ்சாதீர்கள்! என்ற வார்த்தைகளின் மூலம் தேற்றுகிறார். பல நேரங்களில் நாம் எதிர்பாராமல் நடக்கக் கூடிய சில நிகழ்வுகளால், தடுமாற்றம் அடைகிறோம். அந்த தடுமாற்றத்தால் அருகில் இருப்பவர்களை கூட அன்பு செய்யாமலிருக்கக் கூடியவர்களாக இருக்கிறோம்.
ஆனால் இன்றைய நாளில் இறைவன் நமக்குத் தருகின்ற வார்த்தை, துணிவோடு இருங்கள்! அஞ்சாதீர்கள்! என்ற வார்த்தைகளாகும். இறைவன் இவ்வார்த்தைகளால் நம்மை தன் தேற்றுகிறார். நாம் துணிவோடு இருந்து அச்சங்களை எல்லாம் களைந்து அன்பால் ஆண்டவர் இயேசுவோடு இணைந்திட இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். அன்னை தெரசா அவர்கள் கூறுவார்கள், வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு என்று! ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் நமக்கு கொடுத்த அன்பு கட்டளையே, உன்னை நீ நேசிப்பது போல உனக்கு அடுத்திருப்பவரையும் நேசி என்பதாகும். நாம் அடுத்தவர் மீது அன்போடு இருக்க வேண்டும் என்பது தான் இறைவன் நமக்குக் கொடுத்துச் சென்ற அன்புக்கட்டளை. அந்தக் கட்டளையை மனதில் இருத்தியவர்களாய், நாம் அச்சங்களை எல்லாம் களைந்து ஒருவர் மற்றவரை அன்பு செய்து அதன் வழியாக ஆண்டவர் இயேசுவோடு இணையக் கூடியவர்களாக மாறிட இன்றைய நாளில் அச்சம் களைந்து ஆண்டவரோடு அன்பால் இணைவோம். இறையாட்சியினை மலரச் செய்வோம்.
அன்பில் அச்சத்திற்கு இடம் இல்லை என்பதற்கேற்ப நம் ஆண்டவர் மீது உண்மையான அன்பு கொள்வோம் அவரில் மகிழ்வோம்! வளர்வோம்! இன்று அருமையான கருத்துக்களை அன்போடு வழங்கியுள்ள அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களும்! பாராட்டுக்களும்! நன்றிகளும்!
பதிலளிநீக்கு