வாக்கு மாறாத கடவுள்!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய வாசகங்கள் அனைத்திலும், இறைவன் வாக்கு மாறாதவர்! நம்பத்தகுந்தவர்! நிறைவை நோக்கி நம்மை வழிநடத்திச் செல்லக் கூடியவர்! என்ற உண்மையானது மையப்படுத்தப்பட்டுள்ளதை நாம் பார்க்கிறோம்.
"நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை" என்ற ஒரு பாடலின் வரிகளை நாம் கேட்டிருப்போம். அப்பாடலின் கருத்தானது, நாம் நினைப்பதை எல்லாம் தெய்வம் நடத்தக்கூடியவர் அல்ல என்று கருத்து வலியுறுத்துகின்றது. நாமும் கூட பல நேரங்களில் கடவுளிடம் ஜெபிப்பது என்பது, நாம் கேட்பதை அவர் நிறைவேற்ற வேண்டும் என்பதாக நாம் நினைத்துக் கொள்கிறோம். நமது வாழ்வுக்கு என்று நாம் கட்டளையிடுகின்ற காரியங்களை நிறைவேற்றக் கூடியவராக கடவுள் இருந்தால், நாம் நினைப்பதை செயல்படுத்தக் கூடியவராக கடவுள் இருந்தால், அவர் நல்லவர்! உண்மையானவர்! வலிமையானவர்! என்று அவரை புகழ்கின்றோம். ஆனால், நமது விருப்பங்களுக்கும், நமது எண்ணங்களுக்கும் மாறாக, நமது வாழ்க்கையும் நாம் விரும்புகிறவர்களின் வாழ்க்கையும் அமையும் பொழுது நாம் பல நேரங்களில், கடவுளுக்கு கண்கள் இல்லை, காதுகள் இல்லை.,இதயமும் இல்லை. அவர் நம்மை புரிந்து கொள்வதில்லை. நம்மை கண்டுகொள்வதில்லை என்று ஒவ்வொருவரிடமும் புலம்பிக்கொண்டே நமது வாழ்க்கையை இழுத்துச் சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் இன்றைய முதல் வாசகமும், நற்செய்தி வாசகமும் நமக்கு தெளிவாக எடுத்துக் கூறுகின்றது, கடவுள் வாக்கு மாறாதவர் என்று.
ஆம்! எவ்வகையில் கடவுள் வாக்கு மாறாதவர் என்று சிந்தித்து பார்க்கின்ற பொழுது, நாம் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் மேலாக நமக்கு அனைத்தையும் நிறைவேற்றக் கூடியவர் நம் ஆண்டவர். ஒரு குடும்பத்தில் பிறந்து இருக்கின்ற சிறு குழந்தைக்கு என்ன தேவை என்பதை அதனுடைய தாயும் தந்தையும் நிச்சயம் அறிந்திருப்பர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இவ்வுலக குழந்தையின் தேவையை அறிந்திருக்கின்ற இவ்வுலகப் பெற்றோர்களை விட அதி உன்னதமானவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. இவர் இன்று நமக்கு கூறுகின்ற செய்தி என்னவென்றால், நம்முடைய வாழ்வு முழுவதற்குமான வாக்குறுதிகளும் திட்டங்களும் அவரது கைகளில் இருக்கின்றன. நாம் பிறப்பதற்கு முன்பே அவர் நம்மை தேர்ந்தெடுத்திருக்கிறார். நமது வாழ்வில் பல்வேறு நன்மையான காரியங்களையும் நமக்கு தேவையான காரியங்களையும் நிறைவேற்றியிருக்கிறார், மேலும் அவர் நிறைவேற்ற காத்திருக்கின்றார்.
இன்றைய நாளில் அவர் நமக்கு கொடுக்கின்ற நம்பிக்கையின் வாக்குறுதி என்னவென்றால்,
உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல, என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 29:11.
ஆம் அன்புக்குரியவர்களே!
நம் நல்வாழ்விற்கான அத்தனை திட்டங்களையும் வகுத்தவராக நம் ஆண்டவர் இருக்கின்றார். நம் ஒவ்வொருவருக்கும் என்ன தேவை என்பதை நம் ஆண்டவர் அறிந்திருக்கின்றனர்.
சபை உரையாளர் புத்தகம் பிரிவு 3 அருள் வாக்கியம் 11 இவ்வாறாகக் கூறுகிறது,
கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்; காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார். ஆயினும், கடவுள் தொடக்க முதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது.
சபை உரையாளர் 3:11.
மேலும்,
‘இது அதைவிடக் கெட்டது’ என யாரும் சொல்ல முடியாது. எல்லாம் அதனதன் காலத்தில் நல்லவை என விளங்கும்.
சீராக் 39:34,
எனவும் விவிலியத்தில் நாம் வாசிக்கின்றோம்.
எனவே நமது வாழ்வின் நிகழ்வுகள் நமக்குசில வேளைகளில் மகிழ்ச்சியையும், பல வேளைகளில் கலக்கத்தையும், வேதனையையும் கொடுத்தாலும், அந்த நிகழ்வுகளின் வழியாக ஆண்டவர் நம்மை திடப்படுத்துகின்றார். அவரைத் தேடுகின்ற நமக்கென்று வைத்திருக்கும் நல்வாழ்வின் திட்டங்களை நாம் பெற நம்மை உறுதிப் படுத்துகின்றார், தயாரிக்கின்றார், என்பதை அறிந்து, நமது உள்ளத்தில் உணர்வோம். நமக்கு இன்று அவர் வைத்திருக்கின்ற ஆசீர்வாதங்களை நமக்கு அல்லாமல் வேறு எவருக்கும் அவர் கொடுப்பவர் அல்ல என்பதை உள்ளத்தின் ஆழத்தில் உணர்வோம். நமது மகிழ்வையும் நன்றியையும் புகழ்ச்சியையும் ஆண்டவரிடத்தில் அர்ப்பணிப்போம். வாக்கு மாறாத ஆண்டவரின் அருள் வரங்களை பெற்றுக்கொள்ள நம்மையே நாம் தகுதியாக்கிக் கொள்ள இன்றைய நாளில் இறைவனின் பாதத்தில் அமர்ந்து இறைவனில் இணைந்து ஜெபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக