வெள்ளி, 22 ஜனவரி, 2021

அவமானப்பட்டவர்கள் தான் அதிகமாக சாதிக்கிறார்கள்! (23.1.2021)

அவமானப்பட்டவர்கள் தான் அதிகமாக சாதிக்கிறார்கள்!
 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மதிமயங்கி இருக்கிறார் என மக்கள் பேசிக் கொண்டார்கள் எனக் கூறி, அவரது உறவினர்கள் அவரைப் பிடித்து வருவதற்கு ஆள் அனுப்புகிறார்கள். இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் இது போன்ற நிகழ்வுகளை நாமும் சந்தித்து இருக்கக்கூடும். இந்த உலகத்தில் நாம் நலமான பணிகளை முன்னெடுக்கும் போதும், நேர்மையாகச் செயல்படும் போதும், உண்மையை பேசும் போதும், பல நேரங்களில் நம்மைச் சுற்றி உள்ளவர்கள் நம்மைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள். இவர்கள் பேசுவது போதாதென்று நம்மோடு உடன் இருக்க வேண்டிய உறவினர்கள் கூட, அவர்களின் பேச்சுக்கு அஞ்சியும் அவர்கள் பேச்சை நம்பியும்,  நம்மை ஏளனப்படுத்துவார்கள்.

 ஆனால், இன்றைய நற்செய்தி வாசகத்தில் இத்தகைய சூழலைத் தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் அடைகிறார்.  ஆனால் இயேசு தனது பணியை நிறுத்திக் கொள்ளவில்லை. நாளுக்கு நாள் அதிகமாக மக்கள் வந்து கொண்டே இருந்தார்கள். அவரைத் தொட வேண்டும், அவரை சந்திக்க வேண்டும் என அவரிடம் வந்து கொண்டே இருந்தார்கள். தம்மிடம் வந்தவர்களுக்கெல்லாம் உணவு கூட அருந்த நேரமில்லாத அளவுக்கு பணியாற்றிக் கொண்டிருந்தார் இயேசு. இதுதான் இன்றைய வாழ்வில் நமக்கு இறைவன் இன்றைய நாள் வாசகங்கள் வழியாக தரக்கூடிய செய்தியாக உள்ளது. நாம் நமது வாழ்வில் நலமான பணிகளை நல்ல செயலை முன்னெடுக்கும் பொழுது, எதிர் வரக்கூடிய இடர்பாடுகளை எல்லாம் கண்டு அஞ்சி விடாமல் விமர்சனங்களை கண்டு பின்வாங்கி விடாமல், எப்போதும் தொடர்ந்து முயல வேண்டும் என்ற செய்தியினை இன்றைய வாசகம் நமக்கு தருகிறது. உண்மையைவிட பரபரப்பானது பொய் என்று கூறுவார்கள். பல நேரங்களில் பலர் பலவற்றை உரைத்தாலும், நம்மை பற்றி அவதூறாக உரைத்தாலும், நாம் அதற்கு செவி கொடுத்து  நாம் செய்ய வேண்டிய நல்ல செயல்களை செய்யாமல் இருக்காமல், தொடர்ந்து இயேசுவைப்போல நலமான பணிகளைச் செய்ய நாம் அழைக்கப்படுகிறோம். இது தான் இன்றைய முதல் வாசகத்தின் வழியாக நமக்கு விளக்கப்படுகிறது. நம் அனைவருடைய பாவத்திற்காகவும் ஒரே ஒரு செம்மறி ஆடாகிய இயேசு கிறிஸ்து பலியானார். கல்வாரியில் அவர் சிந்திய இரத்தத்தின் வழியாக நாம் அனைவரும் மீட்பு பெற்றோம். அவர் இரக்கம் கொண்டவர். நாம் நம்முடைய தவறான செயல்பாடுகளிலிருந்து மனம் வருந்தி, மாற்றத்தை முன்னெடுத்தவர்களாய் அதை நோக்கிச் செல்லும் பொழுது, அவர் இரக்கத்தோடு நம்மை அரவணைக்கக்கூடிய ஒரு நல்ல தகப்பனாக இருந்து கொண்டிருக்கிறார்.
  இந்த இயேசு தனது வாழ்வில் தன்னைச் சுற்றியிருந்த இடர்பாடுகளையும் தன்னைச் சுற்றியிருந்த குற்றம் காண வேண்டும் என்ற நோக்கத்தோடு பயணித்தவர்களையும் கண்டு அஞ்சாது தொடர்ந்து நலமான நல்ல இறையாட்சிப் பணியை செய்து கொண்டே சென்றது போல, நாம் ஒவ்வொருவரும் செய்வதற்கு இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.  அரசியல் உரைக்கு கூடக்கூடிய கூட்டங்கள், இன்று ஆன்மீக உரைக்கு கூடுவதில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை தான்.

 ஆனால் இன்றைய நாளில் நாம் ஆண்டவர் இயேசு நமக்கு தரக்கூடிய இந்த வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொண்டு பயணிக்கும் போது, நாம் சாதிக்கக்கூடியவர்களாக மாறுகிறோம். இந்த சமூகத்தில் பலவிதமான அவமானங்களை சந்தித்த காந்தியடிகள், அம்பேத்கர் இவர்களெல்லாம் அவமானப்பட்டவர்கள் தான். ஆனால், அதிகமாக சாதித்தவர்கள். அவமானங்களையும் பிறருடைய விமர்சனங்களையும் கண்டு அஞ்சி, உங்கள் நல்ல செயல்களை நீங்கள் மாற்றிக் கொள்ளாமல், இயேசுவை மனதில் கொண்டு, இயேசுவைப் போல, சுற்றி இருப்பவர்கள் உங்கள் மீது குறை காண வேண்டும் என்ற நோக்கத்தோடு உங்களைப் பின்தொடர்ந்தாலும், உங்கள் செயல்களை குற்றம் சாட்டிக் கொண்டே இருந்தாலும், அதற்கெல்லாம் செவி கொடுக்காது, ஆண்டவர் இயேசுவை மனதில் கொண்டு, அவரைப்போல  அடுத்தவருக்கு நலம் தர கூடிய நல்ல பணிகளை முன்னெடுக்கக் கூடியவர்களாக உருவாகிட இறையருளை வேண்டி இணைந்து இயேசுவின் பாதையில் பயணம் செய்வோம்.

1 கருத்து:

  1. அவமானங்கள் தோல்விகள் அனைத்துமே நமது வாழ்வுக்கு வளம் சேர்க்கும் உரங்கள் என்பதை ஒவ்வொரு நாளும் உணர்ந்து செயல்படுவோம். என்றென்றும் வெற்றி நமதே!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...