கடவுள் மீது தான் ஆர்வம் கொண்டிருந்தேன்!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்று நாம் நமது தாய்த்திரு அவையோடு இணைந்து பவுலின் மனமாற்ற விழாவினை சிறப்பித்துக் கொண்டிருக்கிறோம்.
இன்றைய நாளின் முதல் வாசகத்தில் பவுல், தான் தனது கடந்த கால வாழ்க்கையில் கற்றிருந்த கடவுளின் நெறியையும், தன்னை சந்தித்து தடுத்தாட்கொண்ட இயேசு ஆண்டவரின் வழியாக, தன்னுடைய பழைய வாழ்க்கை நிலையின் ஓட்டத்தின் மத்தியில், ஆண்டவர் இயேசுவின் ஒளியை அவர் பெற்றதையும், அதன் வழியாக அவர் அடைந்த மன மாற்றத்தையும், நமக்கு எடுத்துரைக்கிறார்.
எந்த இயேசுவின் பெயரை அறிக்கை இடுபவர்களையும், அந்த இயேசுவின் பெயரால் ஒன்றிணைந்தவர்களையும் தேடித் தேடிச் சென்று கொன்று குவித்தாரோ, அந்த இயேசுவின் பெயரை இதயத்தில் சுமந்தவராய், பல கடல்கள் தாண்டி நாடு நாடாகச் சென்றும், வீதிவீதியாக சென்றும், அந்த இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து, பலரை அந்த இயேசுவின் பெயரில் ஒருங்கிணைக்கக்கூடிய பணியினை செய்ததைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்கின்றோம்.
ஒரு தாய் தனது மூன்று வயது மகளிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அக்குழந்தை கூடையில் இருந்த ஆப்பிள் பழங்களை உண்பதற்காக கையில் எடுத்தது. வலது கையில் ஒன்றும், இடது கையில் மற்றொன்றுமாக அதனை சாப்பிடுவது என்று பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது அந்தத் தாய், "எனக்கு ஒரு ஆப்பிள் தருவாயா?" என்று ஆவலோடு கேட்டாள். உடனே அக்குழந்தையை வேகமாக தன் வலது கையிலிருந்த ஆப்பிளை கடித்தது. அதைக் கண்ணுற்ற தாய்க்கு மனதில் வருத்தம். கணக்குக் கேட்ட உடனேயே தன்னிடமுள்ள குழந்தை தனது ஆப்பிளை கடித்து விட்டதே என்று எண்ணி மனம் வருந்தினாள். மீண்டுமாக மற்றொரு ஆப்பிளையும் அந்த குழந்தை கடித்தது. இப்போது தாய்க்கு கோபமும் வருத்தமும் உள்ளத்தில் சேர்ந்து கொண்டன. சற்று நேரத்தில் அக்குழந்தை தாயிடம் வந்து, தனது கையில் இருந்த ஒரு ஆப்பிளை கொடுத்து, அம்மா இந்த ஆப்பிள் தான் மிகவும் சுவையாக உள்ளது. இதனை சாப்பிடுங்கள் என்று தனக்கு கிடைத்த மிக இனிமையான பழத்தை தன்னுடைய அன்னையின் உள்ளம் மகிழ்ந்திட அன்னைக்கு கொடுத்தது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொள்வோர் மீட்புப் பெறுவர், பேய்களை ஓட்டுவர், புதிய மொழிகளை பேசுவர், அரும் அடையாளங்கள் செய்வர். கொடிய விஷம் கொண்ட பாம்புகளையும் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அவர்களுக்குத் தீங்கு எதுவும் நேராது. மேலும் நற்செய்தி அறிவிப்பு பணியின் வழியாக ஆண்டவரில் தம்மை இணைத்துக் கொண்டோர், தன் கைகளை உடல்நலமற்றோர் மீது வைக்க, அவர்களும் குணமடைவர், என்று நற்செய்தி அறிவிப்போருக்கும் ஆண்டவருக்கும் இடையே இருக்கும் ஆழமான உறவின் வழியாக வெளிப்படும் அருள் வரங்களையும் இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துரைக்கின்றது.
ஆண்டவர் இயேசுவின் நற்செய்திப் பணியை உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் அறிவிக்க வேண்டியது நமது கடமையாகும். ஏனென்றால் அது ஆண்டவர் இயேசுவால் அவரை பின்தொடர்ந்த சீடர்களுக்கு சொல்லப்பட்டது. இன்று நமக்கும் இதையே தான் ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக நம்மிடமும் கூறுகிறார்.
இன்று அந்த இயேசுவின் சீடர்களாக, அவரை மையப்படுத்தி, நற்செய்திப் பணியை செய்பவர்களாக நாம் இவ்வுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறோம்.
ஆயினும் சில வேளைகளில் கடவுளின் மீது ஆர்வம் கொண்டிருந்த யாராக இருந்தாலும்,
கண்டிப்பாக பவுலைப்போல மனமாற்றம் கொண்டவர்களாக, உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றவும் நம்பிக்கை கொண்டவரை இயேசுவிடம் அழைத்து வரவும் நாம் இந்த மனமாற்றப் பெருவிழாவில் அழைக்கப்படுகிறோம்.
மனமாற்றம் என்பது மனதில் இருந்தால் மட்டும் போதாது, அது நமது செயலிலும் வெளிப்படவேண்டும். பவுலைப் போல மனமாற்றம் பெற்றவர்களாக, நிழலின் பிம்பத்தையே நம்பி வாழாமல், நிஜமான இயேசுவை நம்பி வாழவும், இயேசுவை நம்பக்கூடியவர்களை ஒருங்கிணைத்து ஒன்று சேர்க்கவும் அருள்வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
நாம் ஆர்வத்தோடு செய்யும் அனைத்து செயல்களும் நம்மை வெற்றியின் பாதையில் அழைத்துச் செல்லும். புனித பவுலைப் போல நாமும் ஆண்டவருக்காக ஆர்வத்தோடு உழைக்க உள்ளத்தில் உறுதி கொள்வோம்! சிறப்பாக நம் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களின் பணிகள் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட சிறப்பாக ஜெபிப்போம்!
பதிலளிநீக்கு