இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
காலங்களைக் கடந்த இறைவன், எந்நாளும் நான் உங்களோடு இருக்கிறேன் என்று கூறிய இறைவன், இன்றைய நாளில் அவர் நமக்கு வழங்கவிருக்கும் ஓய்வு எனும் அருள் கொடையைப் பற்றி கூறுகின்றார். அவர் தரும் ஓய்வை பெற்றுக் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். நம்மையே நாம் தயாரிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
மலரின் ஓய்வு கனியாக முதிர்க்கின்றது.
காற்றின் ஓய்வு தென்றலாக வருடுகிறது.
அனலின் ஓய்வு ஒளியாக மிளிர்கிறது.
அன்பின் ஓய்வு அருளாக மலர்கிறது.
இவ்வாறு நமது வாழ்வை வளப்படுத்தும் பல்வேறு ஓய்வுகளை நாம் சொல்லிக் கொண்டே போகலாம்.
முதன் முதலில் இறைவன் இவ்வுலகைப் படைத்த போது, ஆறு நாட்களில் தனது இறைவார்த்தையால் இவ்வுலகில் இயற்கையின் வழியாக ஒவ்வொன்றையும் புதிது புதிதாக படைத்தார். ஆறு நாட்களில் தனது படைப்பின் பணியை செயல்படுத்திய இறைவன் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார் என்று விவிலியத்தில் நாம் வாசிக்கின்றோம். ஓய்வு என்பது ஒரு பணியை முடித்து விட்டு வெறுமனே அமர்ந்திருப்பது அல்ல. மாறாக ஒரு பணியிலிருந்து மற்றொரு பணிக்கு மாற்றம் பெறுவது. ஒரு பணி முடிவுற்ற பின் மற்றொரு பணியில் நம்மை இணைத்துக் கொள்வது. இன்றைய முதல் வாசகத்தின் வழியாக இறைவன் நமக்கு வெளிப்படுத்தும் ஓய்வு என்பது விண்ணகத்தின் மகிழ்வாகும். ஓய்வு என்பதன் பொருள் நிறைவு என்பதாகும்.
பொதுவாக இவ்வுலகில், பணியிலிருந்து தாம் ஓய்வு பெற்றதாக கூறும் ஒரு நபரிடம், அவரது பணி அனுபவத்தை பற்றி நாம் கேட்கும் போது, அவர் மகிழ்வோடு, நிறைவோடு தாம் வழிவந்த பல்வேறு அனுபவங்களையும், அவருடைய புதிய புதிய முயற்சிகளையும், வெற்றிகளையும், நம்மோடு பகிர்ந்து கொள்ள முடியும்.
இவ்வாறாக, ஒருவர் ஓய்வு பெறுகிறார் என்றால் அவர் அப்பணியை நிறைவாக ஆற்றியுள்ளார் என்பது நாம் அறிந்த ஒன்று. நிறைவின் முதிர்வே ஓய்வு என்பதை இறைவன் என்று நமக்கு வெளிப்படுத்துகிறார்.
இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட இயேசு இரண்டு விதமான பணிகளை ஆற்றுவதை நாம் பார்க்கிறோம். இயேசு முதலில் இறையாட்சிப் பணியை, இறைவார்த்தை அறிவிக்கும் பணியை கப்பர்நாகூமில் ஒரு வீட்டில் செய்து கொண்டிருந்தார். அந்த இறைவார்த்தைப் பணியின் நிறைவாக, அதனைத் தொடர்ந்து, முடக்குவாதமுற்ற மனிதரை குணப்படுத்தும் பணியை இயேசு ஆற்றுவதை நாம் பார்க்கிறோம்.
இயேசுவின் நற்செய்தி அறிவிப்பு பணியின் முழுமையை அவரது குணப்படுத்துவதில் வெளிப்படுத்துகிறார். தனது வாழ்நாள் முழுவதும் தீமையின் பிடியில் கட்டுண்டு, முடக்குவாதமுற்றவராய், இருளில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த மனிதனுக்கு, புதிய விடியலைக் கொடுக்கின்றார், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. முடக்குவாதமுற்றவரின் கட்டுண்ட வாழ்விலிருந்து அவருக்கு விடுதலை கொடுத்து, மகிழ்வான, நிம்மதியான, வேதனைகளில் இருந்து ஓய்ந்து இருக்கின்ற புது வாழ்வை, நிறைவாழ்வை அந்த மனிதனுக்கு ஆண்டவர் இயேசு இன்று வழங்குகின்றார்.
இன்று நாம் வாழும் பரபரப்பான இந்த உலகில், பல்வேறு பணிகளை செய்து கொண்டிருக்கும் நமக்கும் ஆண்டவர் இயேசு இன்றைய நாளில் ஓய்வினை கற்றுக்கொள்ள, ஓய்வினை பெற்றுக் கொள்ள, அழைப்பு தருகின்றார். இன்று இந்த வேலையை முடிக்க வேண்டும், அந்த வேலையை முடிக்க வேண்டும் என்று, வேகத்திலும் இறுக்கத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், அவற்றையும் கடந்து ஆண்டவரின் இறைவார்த்தையில், அவரது அன்பின் ஆற்றலில் நிறைவு காண, அந்த நிறைவில் ஓய்வு காண, அந்த ஓய்வில் விண்ணக மகிழ்வை பெற்றுக் கொள்ள, இறைவன் இன்றைய வாசகங்களின் வழியாக நமக்கு அழைப்பு விடுக்கின்றார். ஆண்டவர் நமக்கு வழங்க காத்திருக்கும் அன்பில் கனிந்த ஓய்வை, அன்பின் நிறைவை, அன்பின் மகிழ்வை, அவரது பாதம் நாடி ஆவலோடு பெற்றுக் கொள்வோம்!
ஓய்வு என்பது வயதானவர்களுக்கு மட்டுமே என்று நினைத்துக் கொண்டிருக்கும் இவ்வுலகில், நிறைவான மகிழ்வும், நிறைவான முதிர்வும், மகிழ்வான ஓய்வை நமக்கு எப்பொழுதும் உரியதாக்கும்! என்று ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளச் செய்த அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துகிறோம்! ஜெபிக்கிறோம்!
பதிலளிநீக்கு