வெள்ளி, 8 ஜனவரி, 2021

நீங்களும் அவருடன் தான் இணைந்து வாழ்கிறீர்களா? (9.1.2021)

நீங்களும் அவருடன் தான் இணைந்து வாழ்கிறீர்களா? 

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 
 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  

 இன்றைய நற்செய்தி பகுதியானது திருமுழுக்கு யோவானின் தாழ்ச்சியை நமக்கு சுட்டிக் காட்டுகிறது.  திருமுழுக்கு யோவான் பழைய புதிய ஏற்பாட்டின் இணைப்பு கோடு எனக் கூறலாம்.  இயேசுவின் காலத்தில் வாழ்ந்த இறைவாக்கினர் இவர். யோவான் என்றால் "கடவுள் இரக்கத்தால்" எனப் பொருளுண்டு.  யோவான் இயேசுவின் குரலாக இருந்தார். இயேசுவை பற்றி அறிவிப்பதே இவரது பணியாக இருந்தது.  இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இயேசுவின் பணியை கண்டு வியந்துபோன யோவானின் சீடர்கள் நம்மை போலவே ஒருவர் திருமுழுக்கு தருகிறார் என கூறியபோது, நான் மெசியா அல்ல. அவரே மேசியா!. அவரைப் பற்றி சான்று பகரவே நான் வந்தேன் எனக்கூறி, நீங்களும்  அவரைப் பற்றி கூறுங்கள் என்று கூறுகிறார்.   என் செல்வாக்கு குறைய வேண்டும். அவரது செல்வாக்கு பெருக வேண்டும் என்று இயேசுவை அறிவிக்கும் பணியில் தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ளக் கூடிய ஒரு தாழ்ச்சியின் வடிவமாக இந்த திருமுழுக்கு யோவான் விளங்குகிறார்.  இன்றைய வாசகங்கள் நமக்கு தரக்கூடிய செய்தி, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோடு இணைந்து வாழ வேண்டும் என்பதாகும். இயேசு கிறிஸ்துவைப் பற்றி திருமுழுக்கு யோவான் தன் சீடர்களுக்குச் சொன்னபோது, அவர் கூறுவதை மிகவும் கவனத்தோடு செவிகொடுத்துக் கேட்டார்கள், திருமுழுக்கு யோவானின் சீடர்கள். இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் சொல்வதை கவனமாக கேட்பது என்பது, அவ்வளவு சிரமமானது இல்லை. ஆனால் யாருமே அதை செய்வதில்லை. அன்றாட வாழ்வில் நாம்  உறவுகளிடையே ஏற்படக்கூடிய, பல பெரிய பிரச்சனைகளுக்கு காரணம் ஒருவர் பேசுவதை மற்றவர் காது கொடுத்து கேட்காதது தான். மனிதர்கள் பொறுமையாக கவனிப்பதே இல்லை. தான் பேச நினைப்பதை முதலில் தெரிவிக்க வேண்டும் என்றே அவசரப்படுகிறார்கள். குழந்தைகளையும் பல நேரங்களில் நாம் பேச அனுமதிப்பதில்லை. அவர்கள் பேசுவதை நாம் அமைதியாக கேட்பது இல்லை. கவனமாக கேளுங்கள். கவனமாக கேட்பதற்கு நாம் பழகிக் கொண்டாலே, வாழ்க்கையில் பாதி விஷயங்களில் நாம் வெற்றி கொண்டு விடலாம். இப்படி மற்றவர் பேசுவதை கவனமாகக் கேட்கும் ஒருவர், அனைவருக்கும் பிடித்தமான ஒருவராக இருப்பார் என கூறுவார்கள். நாம் திருமுழுக்கு யோவானின் சீடர்களைப் போல, திருமுழுக்கு யோவான் கூறியதை சீடர்கள் கவனத்தோடு கேட்டு,  ஆண்டவர் இயேசுவைப் பற்றி சான்று பகர கூடியவர்களாக மாறியது போல நாமும் நமது வாழ்வில், பிறர் பேசும் போதும், இறைவார்த்தை அறிவிக்கப்படும் போதும், கவனத்தோடு அதற்கு செவி கொடுத்து, நமது வாழ்வை, அவ்வார்த்தைகளின் படி அமைத்துக் கொள்ள, இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். அப்படி நாம் கடவுளின் வார்த்தைகளின் படி நமது வாழ்வை அமைத்துக் கொள்ளும் பொழுது, நாம் அனைவருமே இயேசு கிறிஸ்துவோடு இணைந்து வாழக் கூடியவர்களாக இருப்போம். இந்தச் செய்தியினைத் தான் இன்றைய முதல் வாசகமும் நமக்கு எடுத்துரைக்கிறது. எனவே, நாம் வாழும் இந்த உலகத்தில்,  இறைவார்த்தையை கவனத்தோடு கேட்கவும்,  அவ்வார்த்தைகளின்படி வாழ்வை அமைத்துக் கொண்டு, எப்போதும் ஆண்டவர் இயேசுவோடு இணைந்து வாழ உள்ளத்தில் உறுதி ஏற்றவர்களாய், இறையாட்சியை இம்மண்ணில் மலரச் செய்ய இயேசுவின் பாதையில் அவரது சீடர்களாய் பயணிப்போம்.

1 கருத்து:

  1. இயேசுவோடு இணைந்து வாழ அன்போடும் அக்கறையோடும் செவிமடுக்க கூடியவர்களாக வாழ முயற்சிகள் செய்வோம்! இன்று அருமையான கருத்துக்களை கூறிய அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களும்! செபங்களும்! நன்றிகளும்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...