மனஉறுதியோடு ஏற்றுக்கொள்வோம்...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு நாள் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி உச்சிவெயிலில் சற்று ஓய்வுக்காக மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த வியாபாரி ஒருவர் அவரைப்பார்த்து, இவர் கடுமையாக உழைத்தார் எனவேதான் அயர்ந்து ஓய்வு எடுக்கிறார் என்று கூறிக்கொண்டே சென்றார். அவரைக் கண்ட ஒரு திருடன், இவன் இரவு திருடனாக இருப்பான். அதனால்தான் பகலில் அயர்ந்து தூங்குகிறான் என்றான். அவ்வழியே வந்த குடிகாரன், இவன் காலையிலேயே குடித்துவிட்டு மயங்கிக் கிடக்கிறான் என்றான். இறுதியாக அவ்விடத்திற்கு வந்த துறவி, இவர் முற்றும் துறந்த துறவி. எனவே உறங்கிக் கொண்டிருக்கிறார் எனக் கருதி அவரை வணங்கி விட்டுப் போனார்.
காட்சி ஒன்றுதான் என்றாலும் மனிதர்களின் பார்வை வேறுபடுகிறது. இன்று நாம் வாழக்கூடிய இந்த சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கண்ணோட்டத்தோடு புரிந்து கொள்கிறோம். இன்றைய முதல் வாசகத்திலும் கூட, கடவுள் நமது வாழ்வின் முன்னைய நாட்களை நினைத்துப் பார்க்க அழைக்கின்றார். காலுக்கு செருப்பு எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல் என்று கவிஞர் ஒருவர் கூறுவது போல இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் இயேசு கடவுள் நமது வாழ்வின் இன்றைய நிலைக்கு நம்மை வழிநடத்திய நமது கடந்த கால வாழ்வை அழகாக நினைவுகூற நம்மை அழைக்கின்றார். நாம் கடந்து வந்த பாதைகள் முழுவதும் பலவிதமான வண்ண மலர்களும் முட்களும் கூட சூழ்ந்து இருக்கலாம். மலர்களின் அழகில் மயங்கி வாழ்க்கையில் வியந்த நாம், பல நேரங்களில் முட்களின் வலியில் வேதனை அடைந்திருக்கலாம்.
இன்றைய இறைவாக்கு,
"நீங்கள் ஒளி பெற்றபின் உங்களுக்கு நேரிட்ட துன்பம் நிறைந்த போராட்டத்தை மனஉறுதியோடு ஏற்றுக்கொண்டீர்கள்" - எபிரேயர் 10: 33, என்று நமது வாழ்வில் நாம் எந்நாளும் பெற்றுக் கொண்டு, நிலைத்து இருக்க வேண்டிய ஒளி பற்றி நம்மிடம் கூறுகிறார். நானே உலகின் ஒளி என்று சொன்ன இயேசு ஆண்டவர், அவரைப் போல இறுதி வரை உறுதியான உள்ளத்தோடு வாழ நம்மை அழைக்கின்றார். அவரது பாதையில் வழி நடப்போம்.
மற்றவர்களது பார்வை நம்மீது எப்படிப்பட்டதாக இருந்தாலும் நம்மைப் பற்றிய நமது பார்வை எத்தகையதாக அமைந்திருக்கிறது என்பதை இன்றைய நாளில் சீர்தூக்கிப் பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக