செவ்வாய், 12 ஜனவரி, 2021

தேடிச் சென்றால்.... தேடப்படுவோம்...! (13.1.2021)

தேடிச் சென்றால்.... தேடப்படுவோம்...!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
 இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பலரைத் தேடி செல்வதையும், இயேசுவை பலர் தேடுவதையும் நாம் வாசிக்க கேட்கின்றோம்.

 யாக்கோபு, யோவான், சீமோன், அந்திரேயா, ஆகிய தம் சீடர்களின்  வீட்டிற்கு இயேசு தேடிச் செல்கிறார். 

காய்ச்சலால் வாடிய சீமோனின் மாமியாரை பற்றிய சீடர்கள் இயேசுவிடம் கூற   இயேசு அவர்களை  தேடிச் சென்று குணமாக்குகிறார். 

இயேசு அதிகாலையில் எழுந்து ஒரு தனிமையான இடத்திற்கு சென்று  இறைவனோடு உரையாட இறைவனை தேடி செல்கிறார், 

மேலும் இயேசு. வாருங்கள் அடுத்த ஊருக்குப் போவோம். அங்கும் நான் நற்செய்திப் பணியை ஆற்ற வேண்டும் என்று கூறி, அடுத்த ஊர் மக்களை தேடிச் செல்கிறார்.

அது போலவே...., 

இயேசுவையும் பலர் தேடுகிறார்கள். உடல் நோயுற்றோர், பேய் பிடித்தோர், பலவிதமான துன்பங்களில் அகப்பட்டு இருந்தோர் அனைவரையும் இயேசுவிடம் அழைத்துச் சென்று நலம்பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பலர் இணைந்து அவர்களை அழைத்துக்கொண்டு இயேசுவைத் தேடி வந்தார்கள்.

 விடியற்காலையிலேயே இயேசு செபிக்கச் சென்றபோது,  இயேசுவை தேடி இயேசுவின் சீடர்கள் வருகிறார்கள். 

நாம் தேடிச் செல்லும் பொழுது நம்மைத் தேடக் கூடியவர்கள் இம்மண்ணில் உதயம் ஆகிறார்கள்.
 
அன்புக்குரியவர்களே! நாம் நமது வாழ்நாளில் எத்தகைய மனிதர்களை நாம் தேடிச் செல்கிறோம்? என சிந்தித்துப் பார்க்க அழைக்கப் படுகிறோம். 

இன்று இயேசுவைத் தேடியவர்கள் எல்லோரும் ஏழைகளும் கைவிடப்பட்டோரும், துன்புற்றோரும், அவருடன் இருந்த சீடர்களுமே. 

நாம் நமது வாழ்வில் யாரை தேடி சென்று கொண்டிருக்கிறோம்? 

இயேசு ஏழைகளை தேடிச் சென்றார். நமது தேடல் நாம் தேடிச் செல்ல கூடிய மனிதர்கள் ஏழைகளாக இருக்கிறார்களா? 
பொதுவாகவே வசதிபடைத்த நபர்களோடு நமக்கு அறிமுகம் வேண்டும் என விரும்புகிறோம். ஏழைகளோடு நாம் நம்மை அறிமுகப்படுத்திக் கொள்வதை விட, வசதி வாய்ந்தவரோடு நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளவே இவ்வுலகத்தில் அதிகம் ஆவல் கொள்கிறோம். 

இறைவன் நம்மைத் தேடி வந்து நமக்காக இவ்வுலகில் தன் இன்னுயிரை ஈந்தார். இன்றைய முதல் வாசகத்தில் கூட நாம் வாசிக்கின்றோம், வாழ்நாள் முழுவதும் சாவு பற்றிய அச்சத்தில் அடிமைப்பட்டு இருந்தவர்களை அவர் விடுவித்தார் என்று. இறைவன் இயேசு நம்மை தேடி வந்து நம்மை விடுவித்தார்.  நாம் அந்த ஆண்டவர் இயேசு  கிறிஸ்துவை தேடுகிறோமா? 

அனுதினமும் ஆலயத்திற்கு செல்கிறோம். ஆண்டவரை தேடி தான் செல்கிறோமா? அல்லது  அடுத்தவர்களை பார்ப்பதற்காக செல்கிறோமா? அல்லது கட்டாயத்தின் பெயரில்  ஆலயத்திற்கு செல்கிறோமா? சிந்தித்துப்போம்.

நாம் நல்ல மனிதர்களை தேடிச் செல்லவும், ஏழை எளியவர்களை தேடிச் செல்லவும்,இயேசுவின் வாழ்வு நமக்கு அழைப்பு தருகிறது.

துன்பத்தில் வாடிய மக்களுக்கு இந்த துன்பத்தை நீக்க யாரால் முடியும்? என்ற கேள்வி எழுந்த போது அவர்களுக்கு தோன்றியது ஆண்டவர் இயேசு கிறிஸ்து மட்டுமே.எனவேதான் பாதிக்கப்பட்டவர்களை தூக்கிக் கொண்டு பலர் இயேசுவை நோக்கி வந்தார்கள். இயேசுவின் சீடர்களும் கூட பேதுருவின் மாமியார் காய்ச்சலாக இருந்ததை இயேசுவிடம் கூறியதன் நோக்கம் அவரால் மட்டுமே அவரை குணப்படுத்த முடியும் என்று அவர்கள் நம்பியதன் வெளிப்பாடுதான்.

இன்று நாம் வாழும் இந்த சமூகத்தில் நம்மைச் சுற்றி நாம் சந்தித்த ஏழைகளை எல்லாம் நினைவுக்கு கொண்டு வருவோம். அவர்கள் வாழ்வில் ஏதேனும் தேவை என்றால் அவர்கள் நினைவுக்கு நாம் வருவோமா? என சிந்தித்துப் பார்ப்போம்.

உண்மையிலுமே நாம் அவர்களை அன்போடும் அரவணைப்போடும் அவர்கள் நலனில் அக்கறை காட்ட கூடியவர்களாய் இயேசுவைப் போல அவர்களை நாம் தேடிச் சென்று இருந்தால் கண்டிப்பாக அவர்களது நினைவில் நாம் இருப்போம்.

   நாம் ஏழைகளை தேடிச் செல்லும் பொழுது பல வேளைகளில்  ஏழைகள் நம்மைத் தேடி வருவார்கள். அவர்களுக்கு நம்மாலான உதவிகளை நாம் செய்ய முடியும்.
 
தேடிச் செல்லும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக தேடப்படுவோம்.... 
ஆனால் நாம் தேடிச் செல்வது யாரை? என்பதைத்தான் இன்றைய நாளில் சிந்தித்துப் பார்க்க வாசகங்கள் வழியாக இறைவன் அழைப்பு தருகிறார். 

நாம் பணம், பதவி, பட்டம், பொருள், இவைகளை மையப்படுத்தி சமூகத்தின் உயர்ந்த மனிதர்களை  தேடி சொல்கிறோமா? அல்லது ஏழை எளியவர்களை தேடிச் செல்கிறோமா?
நம்மை தேடுபவர்கள் யாராக இருக்கிறார்கள்? 
ஏழை எளியவர்களா? 
வசதி படைத்தவர்களா?  
சுயநலத்திற்காக நம்மைப் பின்தொடர்பவர்களா? 
சிந்தித்துப் பாருங்கள்.....


நாம் ஏழைகளையும் தேடி செல்லவும், ஏழைகளால் நாம் தேடப்படவும், இறை அருளை இறைஞ்சி வேண்டுவோம். 

வேண்டுதல் மட்டுமே ஒரு செயலை நடத்தாது. நமது செயல்களில் அவை வெளிப்படும் போது மட்டுமே அவை நடைபெறும்.

"நிஜத்தை விட்டுவிட்டு நிழலை நம்பி வாழாமல்..." நாம், ஏழைகளை தேடிச் செல்வோம். ஏழைகளால் தேடப்படக் கூடியவர்களாக இயேசுவைப் போல இம்மண்ணில் வலம் வருவோம்.

1 கருத்து:

  1. இயேசுவின் தேடலையும் இயேசுவைப் பின்பற்றும் நமது தேடலையும் பற்றி தெளிவான புரிதலை தந்த அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது உளங்கனிந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...