இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு ஊரில் இருந்த மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என ஆசைப்பட்டார்கள். எங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று அவர்கள் அனைவரும் இறைவனை நோக்கி மன்றாடினார்கள். கடவுள் அவர்களுக்கு காட்சி கொடுத்து நீங்கள் சுதந்திரமாக வாழ நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்? என்றார். அந்த ஊர் மக்களோ எங்களுக்கு நிறைய சாலைகள் வேண்டும் என்றனர். அதற்கு கடவுள் ஏன் நிறைய சாலைகளை கேட்கிறீர்கள்? என்றார். அதற்கு அந்த ஊர் மக்கள் கூறினார்கள். நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் விருப்பம் போல் நாங்கள் விரும்பும் பாதையில் செல்ல விரும்புகிறோம். எனவே தான் எங்களுக்கு அதிகமான சாலைகள் வேண்டும் என கேட்கிறோம் என்றானர். அதைக் கேட்ட கடவுள் இதுவா உண்மையான சுதந்திரம்? என்று கேட்டார். எல்லோரும் ஒன்றும் புரியாமல் நின்றுகொண்டிருந்தார்கள். கடவுள் தொடர்ந்து பேசினார். உண்மையான சுதந்திரம் என்பது அவரவர் விருப்பப்படி வாழ்வதில் அல்ல ... மாறாக என் விருப்பத்தை நிறைவேற்றுவதில் தான் அடங்கியுள்ளது என்றார். உடனே அந்த மக்கள் ஆண்டவரே உமது விருப்பம் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அவர் மற்றவர்களை நீங்கள் மகிழ்ச்சியாக வாழ வைக்க வேண்டும் என்பதே என் விருப்பம் என கூறினார்.
அன்புக்குரியவர்களே மற்றவர்களை மகிழ்ச்சியாக வாழ வைக்க வேண்டும் என்பதற்காகத் தான் கடவுள் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். அவர் நமக்காக பலியானார்.இதையே இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்கிறோம். இயேசு இம்மண்ணில் வாழ்ந்த போது அவர் விதைத்த விதையான வார்த்தைகள் தான் இன்று நமது இதயத்தில் ஆழமாக எழுதப்பட்டுள்ளது. இதயத்தில் எழுதப்பட்ட வார்த்தைகள் எழுதப்பட்டவையாக மட்டும் இருக்குமாயின், அது பலன் இல்லை. அது கனி தர வேண்டும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் விதைப்பவர் உவமையைப் கூறுகிறார் இயேசு. பிறகு தனது சீடர்களுக்கு அந்த விதைப்பவர் உவமையைப் பற்றிய அர்த்தத்தை உணர்த்துகிறார்.
நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவட்டை பின்பற்றக்கூடிய குடும்பங்களாக நாம் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.
நினைத்துப் பார்ப்போம்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் போதனைகள் எந்த அளவிற்கு நமது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் எந்த அளவிற்கு அவரது வார்த்தைகளுக்கு செயல் வடிவம் கொடுத்தவர்களாக இருக்கிறோம். ஆண்டவர் நம்மிடையே நலமான நல்ல விதைகளை இறைவார்த்தை வழியாக விதைத்துள்ளார். அந்த இறைவார்த்தை எந்த அளவிற்கு பயன் தருகிறது. அது பாதையில் விழுந்த விதை போல இருக்கிறதா? அல்லது வழியோரம் விழுந்தது போல இருக்கிறதா? அல்லது முட்ச்செடிகளுக்கு மத்தியில் விழுந்த விதைகளாக இருக்கிறதா?இயேசுவின் வார்த்தைகள் விதைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் விதைக்கப்பட்ட நிலம் எப்படிப்பட்ட நிலம் என்பதை இன்று நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
ஆண்டவருடைய வார்த்தைகள் நமது வாழ்வில் செயலாக்க படவில்லை என்றால், அது மற்றவர்க்கு பயன் தரக்கூடிய வகையில் அமையவில்லை. நாம் இன்னும் கனி கொடாத விதைகளாக தான் இருக்கிறோம். நாம் நல்ல விளைச்சலைத் தர வேண்டும் என்றால் இறை வார்த்தைகளை இதயத்தில் எழுதினால் மட்டும் போதாது மாறாக இறை வார்த்தைகளை வாழ்வின் செயலாக்க வேண்டும்.
செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசம்
என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப. நாம் இறை வார்த்தைகளை செயல் ஆற்றிட இன்றைய நாளில் இறைவன் அழைக்கின்றார்.
இறை வார்த்தைகளின் படி வாழ்ந்து காட்டி அடுத்தவர் மகிழ்வில் மகிழ்வது தான் உண்மையான சுதந்திரம். இச்சுதந்திரத்தை பெற்றவர்களாய் வாருங்கள்
இறைவார்த்தையை இதயத்தில் எழுதுவதை விட அதை செயல்படுத்துவோம்.
மகிழ்ச்சியை நமக்குள் கொண்டிருக்கும் மகிழ்ச்சியின் விதைகளாக, வீரியமுள்ள விதைகளாக, இவ்வுலகில் மகிழ்ச்சியின் வாசம் எங்கும் வீச நம்மை அழைக்கும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களும்! செபங்களும்!
பதிலளிநீக்கு