புதன், 6 ஜனவரி, 2021

உலகை வெல்வோம்! (7.1.2021)

உலகை வெல்வோம்!

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய முதல் வாசகம் கடவுளின் கட்டளையை கடைபிடிக்க நம்மை அழைக்கிறது. கடவுளின் கட்டளை இது என்று இன்றைய வாசகத்தை நோக்கும்போது அன்பு செலுத்துவது மட்டுமே கடவுளின் கட்டளையாக யோவான் தனது கடிதத்தின் வழியாக நமக்கு காட்டுகிறார். அன்பு செலுத்துகிறேன் என சொல்லிக்கொண்டு தமது சகோதர சகோதரிகளை  வெறுப்போர் அனைவரும் பொய்யர் என எடுத்துரைக்கின்றார். அன்பால் நாம் இவ்வுலகத்தை ஆளவேண்டும். ஏனென்றால் இந்த அன்பு கடவுளிடமிருந்து பிறந்தது. கடவுளிடமிருந்து பிறக்கக்கூடிய அனைத்தும் இந்த உலகை வெல்லும். இந்த உலகை அன்பால் வெல்வோம் என்ற நம்பிக்கையை நாம் கொண்டிருக்க வேண்டும் என யோவான் நற்செய்தியாளர் தன்னுடைய கடிதத்தின் வழியாக நாம் இறைவனின் அன்பை கடைபிடிக்க கூடியவர்களாக, இறைவன் கூறக்கூடிய அன்பை கடைபிடிக்கக் கூடியவர்களாக இருக்க அழைப்பு தருகின்றார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட ஆண்டவர் இயேசு கிறிஸ்து தூய ஆவியின் வல்லமையால் வல்லமை கொண்டவராய் தொழுகைக் கூடத்தில் எசாயாவின் சுருளேட்டை வாசிக்கின்றார். அதில் இவ்வாறு எழுதியிருந்தது: ஆண்டவரின் ஆவி என்மேல் உளது. ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கவும், சிறைபட்டு விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும், ஆண்டவர் அருள் தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார் என்ற பகுதியினை வாசிக்கின்றார். இந்தப் பகுதியில் இடம்பெறக்கூடிய அனைத்தும் அன்பை மையப்படுத்தியதாக அமைகிறது.  ஏழைகள், சிறையில் வாடக்கூடியவர்கள், பார்வையற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், பல்வேறு காரணங்களால் ஒடுக்கப்படக்கூடியவர்கள் இவர்கள் அனைவருமே அன்பில்லாமல் புறக்கணிக்கப்பட்டவர்கள். அன்பால் அவர்கள் அனைவரையும் அரவணைக்க வேண்டும். அவர்களோடு இணைந்து பயணிக்க வேண்டும் என்ற செய்தியினை ஆண்டவர் இயேசு கிறிஸ்து, அன்று தொழுகைக் கூடத்தில் வாசித்தார். வாசித்தது மட்டும் நில்லாமல், அந்த வாசித்த ஏட்டுச் சுருளை, ஏவலரிடம் கொடுத்துவிட்டு,  இன்று நீங்கள் வாசிக்கக் கேட்ட இந்த மறைநூல் வாக்கு நிறைவேறிற்று என்று கூறினார். நாமும் பல நேரங்களில் ஆண்டவர் இயேசுவின் அன்பு கட்டளையை வாசிக்கின்றோம். பலரும் கூறக் கேட்கின்றோம். ஆனால் வாசித்து விட்டு வழக்கம் போல நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கின்றோம். வாசிக்கக்கூடிய அனைத்தும் நமது வாழ்வில் வாசத்தை பரப்பக் கூடிய வகையில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என கூறுவார்கள். 

உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக!  என்ற
இறைவனது வார்த்தைகள் நம்மை அவ்வார்த்தைகளின் படி வாழ அழைக்கின்றது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இவ்வார்த்தைகள், இன்று நம்மை அவரைப் போல ஒருவர் மற்றவரை உண்மையாக அன்பு செய்து, அன்பை பகிர்ந்து வாழ அழைப்பு தருகின்றது. இன்றைய நாளில் நாம் நினைவு வரும் கூடிய புனித ரேமுத்து என்ற புனிதர் கூட தன்னுடைய வாழ்நாளில் மாணவர்களுக்கு அறிவு புகட்டுவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் ஆன்ம நலனுக்காக,  அவர்கள் ஆன்மாவும் நல்வழிப்படுவதற்கான வழிகளை தனது ஆசிரியப் பணி மூலம் செய்து வந்தார் என அறிகின்றோம். இன்று நாமும் பல நேரங்களில் பலரிடம் இருந்து அன்பை பெற்றிருக்கிறோம். அன்பைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அன்போடு வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம்.  இவைகளை எல்லாம் மனதில் இருத்தி இன்றைய நாளில் நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்யவும், அந்த அன்பால் இந்த உலகை வெல்வோம் என்ற நம்பிக்கையோடு,  அன்பால் அகிலத்தை ஆள ஆண்டவர் இயேசு காட்டிய பாதைகளின்படி அவரை பின்தொடர்ந்து அன்பால் இவ்வுலகை வெல்வோம்! வாருங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பலனை எதிர்பாராமல் பணி செய்வோம்!(28-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...