புதன், 30 டிசம்பர், 2020

போராட்டத்தில் பூத்த புத்தாண்டு! (01.01.2021)

போராட்டத்தில் பூத்த புத்தாண்டு! 

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  

ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1ஆம் நாளை தாய்த்திரு அவையானது, கடவுளின் தாய் மரியா என்ற திருவிழாவினை சிறப்பிக்க அழைக்கப்படுகிறது.  
ஏன் வருடத்தின் முதல் நாளை தாய்க்கு சிறப்பிடவேண்டும் என்ற கேள்வி உள்ளத்தில் எழலாம்.  
இயேசு என்ற மனிதர் இம்மண்ணுலகில் அவதரிக்க காரணமாயிருந்தது இந்தக் கன்னி மரியாள்.  ஆண்டவரின் தூதர் கூறிய வார்த்தைகளுக்கு ஆம்! என பதில் கூறி,  ஆண்டவரின் விருப்பத்திற்கு தன்னை அளித்தவர் இந்த அன்னை மரியாள்.  இந்த அன்னை மரியாவை வருடத்தின் முதல் நாளில் நினைவு கூர்வது என்பது சாலச் சிறந்ததாக திருஅவை கருதுகிறது.  அதன் அடிப்படையில்,  இன்று நாம் அனைவரும் இணைந்து "கடவுளின் தாய் மரியாள்" என்ற திருநாளை சிறப்பித்துக் கொண்டிருக்கிறோம். 

பிறந்திருக்கும் இந்த புதிய ஆண்டை போராட்டத்தில் பூத்த புத்தாண்டு எனக் கூறலாம். ஆம்!  ஒரு பெண்ணின் வாழ்வு போராட்டங்கள் நிறைந்தது. மரியாவை நாம் நினைவு கூர்கிறோமே!  மரியாவின் வாழ்வு போராட்டங்களால் சூழப்பட்டது.  

பல்லாயிரம் ஆண்டுகளாக பெண் என்பவள் அடிமைப்படுத்தப்பட்டு கொண்டுதான் இருக்கிறார். ஒரு பெண் ஏன் அடிமையானாள் என்ற கேள்வியை பெரியாரின் புத்தகங்கள் மிகவும் தெள்ளத்தெளிவாக வரலாற்று அடிப்படையில் விளக்குகின்றன.  நாம் அனைவரும் எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. 
ஒரு இடத்தில் ஒரு பெண்ணானவள் குழந்தையாகிறாள்.
இன்னொரு இடத்தில் அவள் சகோதரி ஆகிறாள். 
இன்னொரு இடத்தில் தோழியாகிறாள்.  
இன்னொரு இடத்தில் மனைவியாகிறாள். 
இன்னொரு இடத்தில் தாயாகிறாள். 
இன்னொரு இடத்தில் பாட்டியாகிறாள். 


எந்த ஒரு பெண்ணும்  தனது கணவனின் மரணத்திற்கு பிறகு தன் மரணம் நிகழ வேண்டுமென எண்ணக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஏன்?  என்று கேள்வியை எழுப்பிப்பார்த்தால்,  பல பெண்கள் கூறும் பதில், எனது கணவர் வயதான காலத்தில் அவரை பார்த்துக் கொள்வதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.  என் உயிர் உள்ளவரை அவரை நான் பாதுகாக்க வேண்டும்.  அவருக்கு பிறகு தான் நான் இறக்க வேண்டும் என்று கூறுவார்கள். தாரத்தை இழந்தவன், தரணி இழந்தவன் என்று கூறுவார்கள். ஒரு பெண்ணானவள் தனது வாழ்நாள் முழுவதும் அடுத்தவருக்காக  அர்ப்பணிக்கப்படுகிறாள். அடுத்தவருக்காக உழைக்கிறாள். பல இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கிறாள். பல இன்னல்களுக்கு மத்தியிலும், சவால்களுக்கு மத்தியிலும் அந்தப் பெண்ணானவள், அடுத்தவரின் நலனை முன் நிறுத்துகிறாள். தான் உறங்கா விட்டாலும் தன் குழந்தை உறங்க வேண்டும் என அமர்ந்திருப்பவள் தாய். வயிற்றில் ஒரு குழந்தை இருக்கும் பொழுது திரும்பி படுத்தால்,  அந்தக் குழந்தைக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்பதற்காக, திரும்பாது படுத்திருந்தவள் தாயானவள். வாழ்க்கையில் எவ்வளவு வருடங்கள் ஆனாலும் சரி நம்மால் ஈடுகொடுக்க முடியாத ஒன்று உண்டென்றால் அது ஒரு  தாயின் கருவறையாகத்தான் இருக்கும்.குழந்தையை பெற்றெடுப்பதற்கு ஒரு தாய் படக்கூடிய வேதனையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதது. 

போராட்டங்களால் சூழப்பட்டது தான் ஒரு பெண்ணின் வாழ்வு.  அது போலத்தான் இன்று நாம் வாழும் இந்த உலகிலும் திரும்பும் திசையெங்கும் பலவிதமான போராட்டங்கள்.  எங்கு பார்த்தாலும் ஏதேனும் ஒரு போராட்டம். 

 ஒரு புறம் சட்டத்தின் பெயரால் மக்கள் நசுக்கப்படுவதும்,  
மற்றொருபுறம் கண்ணுக்குத் தெரியாத ஒரு கொடிய நோயின் காரணமாக மக்கள் அஞ்சி வீட்டுக்குள் முடங்கி இருப்பதும்.  
இன்னொரு புறம் வேலையில்லாத் திண்டாட்டமும். 
இன்னொருபுறம் சாதியக் கொடுமைகளும். 
இன்னொரு புறம் ஆண் பெண் வேறுபாடு என பல பிரச்சனைகள்,  சூழ்ந்துகொண்டு கொண்டிருக்கக்கூடிய இந்தச் சமயத்தில்,  நம்மைச் சூழ்ந்துள்ள பல போராட்டங்களுக்கு மத்தியில் புதிதாகப் பூத்திருக்கிறது இந்த புத்தாண்டு.  பிறந்திருக்கும் இந்தப் புத்தாண்டு நமக்குச் சொல்லும் செய்தி என்ன? என சிந்திக்கும் போது,  எப்படி ஒரு பெண்ணானவள் போராட்டத்தின் மத்தியிலும் இருந்து செயல்படுவது போல பிறந்திருக்கும் இப்புத்தாண்டில் நாமும் வீறு கொண்டு செயல்பட அழைக்கப்படுகிறோம்.  
அன்னை மரியா அன்று யூத சமூகத்தில் வாழ்ந்த போது ஒரு பெண் திருமணத்திற்கு முன்பாக கருவுற்றால் பெண்ணை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் சட்டம் இருந்தது. ஆனால் அன்னை மரியா ஆண்டவரின் திட்டத்திற்கு தன்னை கையளித்து, ஆண்டவர்   இயேசுவை தன் திருவயிற்றில் சுமந்த வீர மங்கையாக திகழ்கிறாள்.  அந்தஆணாதிக்கச் சமுதாயத்தில் ஒரு பெண்ணானவள் குழந்தையை பாதுகாப்போடு வளர்த்து வரவேண்டும். அன்னை மரியாவும் தன்னுடைய குழந்தை இயேசுவை மிகவும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாள்.‌ இந்த அன்னைைமரியாவை பற்றி பலரும் பலவிதமாக புரிதல்களை கொண்டிருக்கிறார்கள். சிலர் கூறுவார்கள்,மரியாவுக்கு நாம் வணக்கம் செலுத்த தேவையில்லை என்று கூறுவார்கள். நாம் வணக்கம் செலுத்துவது அன்னை மரியாவுக்கு.  ஆனால் நமது வழிபாடுகள் அனைத்தும் ஆண்டவர் இயேசுவுக்கு இருக்கின்றன.  
ஒரு முறை திருச்சியில் இருக்கக்கூடிய கிட்னி பார்க் மருத்துவமனையில் பணியாற்ற கூடிய ஒரு இந்து மருத்துவர் ராஜா. அவரை சந்தித்து பேசியபோது, அவர் கூறினார்! நீங்கள் மரியாவை வணங்கக் கூடியவர்களா?  என்று கேட்டார். ஆம் என்று கூறினேன்.  உடனே அவர் எங்களிடம், மரியாவை வணங்குங்கள்.  இயேசுவை ஒரு பெண் வயிற்றில் சுமந்து இருக்கிறார் என்றால்,  அந்த பெண் கண்டிப்பாக கடவுளாகத்தான் இருக்க முடியும், என்று கூறினார். 
நாம் மரியாவை கடவுளாக பார்க்க வில்லை. மாறாக மரியாவின் வழியாக கடவுள் உலகத்திற்குள் அவதரித்தார்.  கடவுளே இப்பெண்ணின் வழியாக இவ்வுலகிற்கு வருகிறார் என்றால்,  அதற்கேற்ற வகையில் அந்தப் பெண்மணி தூய்மையும்,நேர்மையும் உண்மையும், சத்தியமும் வாய்ந்தவராக இருந்திருக்கிறாது என்பது உண்மையாகிறது. எனவே, அந்தப் பெண்மணி வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து மண்ணிற்கு வந்திருக்கிறார். எனவே அந்தப் மரியாவை எள்ளி நகையாடாதீர்கள். ஒருபோதும் விட்டு விலகாதீர்கள், என்று அந்த நபர் கூறினார்.  இன்று அன்னை மரியாவை வைத்துக்கொண்டு பலரும் பலவிதமான சர்ச்சைகளை உருவாக்கி கொண்டு தான் இருக்கிறார்கள்.  

ஆண்டவர் இயேசுவை தேடி வந்த அன்னை மரியாவும் சீடர்களும் வெளியே காத்துக் கொண்டிருக்கையில்,  ஒருவர் ஓடிச்சென்று உன்னை காண்பதற்காக உன் தாயும் சகோதரர்களும் காத்திருக்கிறார்கள் எனக் கூறியபோது, யார் என் தாய்?(மத்தேயு 12:48) என இயேசு கேட்டார். மரியாவுக்கு இயேசு முன்னுரிமை தரவில்லை என்கின்றனர் பலர் ஆனால், யார் என் தாய்?  என்று கேட்ட இயேசு அத்தோடு நில்லாமல், விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்" என்றார். (மத்தேயு ந 12:50)
 என் தாயும் சகோதரர்களும் ஆவார் என்று கூறினார் .  

தந்தையின் திருவுளம் என்பது எது?

கபிரியேல் என்னும் வானதூதர்  அன்னை மரியாவின் முன்பாக வந்து  அருள் மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்! (லூக்கா 1:28) என்று கூறி, இயேசுவின் பிறப்பு செய்தியை அறிவித்தாரே!  அந்த தந்தையின் திருவுளத்தை கேட்டு அதன்படி தன் வாழ்வை அமைத்துக் கொண்டவர் தான் அன்னை மரியாள்.  இதனை உணர்ந்து கொள்ளாத,  புரிந்துகொள்ளாத பல பிரிவினை  சபையைச் சார்ந்தவர்கள்,  அன்னை மரியாவை இயேசு அவமதித்து விட்டார். அவரை இயேசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றெல்லாம் தவறுதலாக பரப்பிக் கொண்டு,  தங்களுடைய பணியை செய்து கொண்டிருக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்காகவும் நம் தாய் அன்னை மரியாள், பரிந்து பேசுவார் என்பது உண்மை. ஏனென்றால், அந்த அன்னை மரியா அனைவரையும் தன் பிள்ளைகளாக பார்க்கிறார். பிள்ளைகள் ஒவ்வொருவருக்காகவும் அது யாராக இருந்தாலும் அவர் பரிந்து பேசுவார். 

ஒரு பெண்ணானவள் தன் குழந்தையை வயிற்றில் சுமக்கும் பொழுது அந்த குழந்தை எதைக் குடித்து வளர்கிறது? தாயின் இரத்தத்தை உணவாக உட்கொண்டு வளர்கிறது. குழந்தை பிறந்த பிறகு தாயின் இரத்தத்தை பாலாக உண்கிறது. இயேசுவும் அன்னை மரியாவின் வயிற்றில் இருந்தபோது அன்னை மரியாவின் இரத்தத்தை உணவாக உட்கொண்டு இருப்பார். குழந்தையாக மண்ணில் தவழ்ந்து போதும் அன்னை மரியாவின் இரத்தத்தையே பாலாக அருந்தி இருப்பார். நமது உடலில் ஓடக்கூடியது நமது தாயின் இரத்தம் என்று மார்தட்டுகிறோமே! இயேசுவின் உடலில் ஓடுவதும் அவரது தாயின் இரத்தமே! அவர் கல்வாரியில் சிந்தியதும் அத்தாயின் இரத்தமே! என்றால் அது மிகையாகாது. 
நமது வாழ்க்கையில் அன்னை மரியாவை நமது பாதுகாவலாக கொண்டிருக்க இன்றைய நாள் நமக்கு அழைப்பு தருகிறது. திருஅவை மட்டும் அழைக்கவில்லை. 
இயேசுவே கல்வாரியில் தொங்கியபோது மானிட மகனுக்கு தலைசாய்க்க இடமில்லை (மத்தேயு 8: 20) என்று கூறிய அந்த இயேசுகிறிஸ்துவும், கல்வாரி மலையில் சிலுவையில் குற்றுயிரும் குலையுயிருமாக தொங்கிக் கொண்டிருந்தபோது,  தன்னிடமிருந்த ஒரே சொத்தான  தனது தாயான அன்னை மரியாவை,  இவரே உன் தாய்  (யோவான் 19: 27) என்று நமக்கு தாயாக கொடுத்துவிட்டுச் சென்றார்.  யாரோ ஒரு சிலர் அமர்ந்து பேசி நமக்கு தாய் அன்னை மரியாள் என்று கூறவில்லை. கடவுளே, இயேசுவே நமக்கு தாயாக கொடுத்தவர்தான் அன்னை மரியாள். இந்த அன்னை மரியாவை தான் இன்றைய நாளில் தாய்த்திரு அவையானது, நினைவு கூர்கிறது.  

போராட்டங்களுக்கு மத்தியில் இறைவனின் திட்டத்தில் பங்கெடுத்து இறைமக்கள் பலரின் எழுச்சிக்காக, தன் ஒரே மகனை கையளித்த அன்னை மரியாவை போல, நாமும் நமது வாழ்வை நம்மால் முடிந்த மட்டும், அடுத்தவருக்கு உதவி செய்வதற்கும்,  அடுத்தவருக்கு நமது வாழ்வை வழங்குவதற்கும், இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். போராட்டத்தின் மத்தியில் வீறுகொண்டு சிறப்போடு செயலாற்றி வரக்கூடிய, ஒவ்வொரு தாய்மார்களை போலவே, போராட்டத்தின் மத்தியில் பிறந்து இருக்கக்கூடிய இந்த புதிய ஆண்டும், நமக்கு சவால் மிக்கதாக அமைந்திருக்கிறது. பல விதமான சவால்களை நாம் எதிர்கொள்ளவும், பெண்மையிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள அழைக்கிறது. சவால்களுக்கு மத்தியிலும் அன்னை மரியாள் வீரமங்கையாக செயல் பட்டது போல எந்தவித போராட்டங்கள் நம்மை சூழ்ந்தாலும் போராட்டங்களைக் கண்டு அஞ்சாமல், வீறு கொண்டவர்களாக பிறந்திருக்கும் இப்புதிய ஆண்டில், இறைவனின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில், நமது வாழ்வை அடுத்தவரின் நலனை முன்னிறுத்தி அமைத்துக் கொள்ளக்கூடியவர்களாக, உருவாகிட அழைப்பு தருகிறது இந்த போராட்டத்தில் பூத்த புத்தாண்டு. எனவே இந்தப் புத்தாண்டில் இறை விருப்பத்தை நம் விருப்பமாக கொண்டு, சவால்களுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில் அயராது அஞ்சாது பணி செய்து, இறைத் திட்டத்தை நிறைவேற்ற இணைந்து பயணிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...