செவ்வாய், 1 டிசம்பர், 2020

பகிர்ந்திட மனம் வைப்போம் (2.12.2020)

பகிர்வின் நிறைவே இறைவன்! இறைவனின் பகிர்வு தான் மனிதனின் நிறைவு! அந்த நிறைவுதான் மானிடத்தின் மகிழ்வு! 
 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாளின் வாசகங்கள் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் ஆண்டவர் வழங்கக்கூடிய விருந்தினை பற்றி நமக்கு எடுத்துரைக்கிறார். விருந்து என்றால் பல வகையான சுவைமிக்க பலகாரங்கள் உண்பதற்காக இருக்கும்.அவைகளை சுட்டிக்காட்டி இறைவன் நமக்காக ஏற்பாடு செய்யக் கூடிய விருந்திற்கு நம்மை அழைக்கிறார். இவ்வார்த்தைகளின் அடிப்படையிலேயே இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு,  தன்னுடைய சீடர்கள் வழியாக, கூடியிருந்த திரளான மக்களுக்கு இரண்டும் மீனையும் ஐந்து அப்பங்களையும் கொண்டு உணவளிக்கக்கூடிய நிகழ்வினை நாம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கின்றோம். 
 ஒரு ஊரில் மூன்று கொடை வள்ளல்கள் இருந்தார்கள். மூவரில் யார் மிகப்பெரிய கொடை வள்ளல் என சோதிக்க நினைத்த ஒருவன் பிச்சைக்கார வேடம் அணிந்து முதல் வள்ளலிடம் பிச்சை கேட்டான். அவர் தனது சொத்தில் பாதியை கொடுத்தார். இரண்டாவது வள்ளலிடம் கேட்டபோது, நான் உழைத்து பிழைத்துக் கொள்கிறேன், என்று கூறி, தனது சொத்துக்கள் முழுவதையும் கொடுத்தார். மூன்றாவது வள்ளலிடம் கேட்டபோது, தனது சொத்துக்கள் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு, இங்கேயே காத்திருங்கள் என்று சொல்லிவிட்டு, சந்தைக்கு சென்றார். சற்று நேரத்தில் பிச்சைக்காரனிடம் ஐயா!  ஒரு கொடை வள்ளல் சந்தையில் தன்னை அடிமையாக விற்று விட்டு, இந்த பணத்தை உங்களுக்கு கொடுக்கச் சொன்னார் என்று கூறி, கொடுத்து விட்டுச் சென்றான். உள்ளதையே கொடுத்து, இறுதியில் தன்னையே கொடுத்த, மூன்றாம் வள்ளலே போற்றத் தக்கவராகக் கருதப்படுகிறார்.

 இத்தகைய பணியை தான் இயேசு இந்த மண்ணில் வாழ்ந்து போது செய்தார். இயேசு உள்ளதையும் கொடுத்து தன்னையும் நமக்காக பகிர்ந்து கொடுத்தவர்.இயேசு தன்னை  நமக்காக பகிர்ந்ததோடு மட்டுமல்லாமல்,  தன்னுடைய சீடர்களுக்கு பகிர்தலை கற்றுக் கொடுத்தவர்.
ஆம்! அன்புக்குரியவர்களே! இன்றைய நற்செய்தி வாசகத்தில்  நாம் வாசிக்க கேட்கிறோம், இயேசு இரண்டு மீன்களையும் ஐந்து அப்பங்களையும் கையில் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி,  அதனை தன் சீடர்களிடம் கொடுத்து மக்களுக்கு பரிமாறுமாறு கூறுகிறார்.  இயேசுவை அதனை எல்லோருக்கும் கொடுத்து இருக்கலாம். ஆனால், பகிர்தல் என்பதை சீடர்கள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான், தொடக்கத்தில் சீடர்களிடம் கேள்வி கேட்கிறார். உங்களிடம் என்ன இருக்கிறது?  கொண்டு வாருங்கள்.  இருப்பதை கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.  மீண்டும் அவற்றை தன்னுடைய வல்லமையினால் பலுகச் செய்த இயேசு,  மீண்டும் அதை அவர்களிடமே கொடுத்து இதனை அனைவரிடமும் பகிருங்கள் என்று கூறுகிறார்.  பகிர்ந்தது போக மீதம் இருப்பதை சேமிக்கவும் சொல்கிறார். இயேசு தன் வாழ்வில் எதையெல்லாம் செய்தாரோ, அதையெல்லாம் தன்னுடைய சீடர்களுக்கும் கற்பித்தார்,  சொல் வழியாக மட்டுமல்ல, செயல்கள் வழியாகவும் அவர்களுக்கு கற்பிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கினார். அதை பலரும் உள்வாங்கிக் கொண்டார்கள். எனவேதான் அவர்கள் எல்லாம் இயேசுவைப் பற்றி சொல்லிவிட்டு மட்டும் செல்லவில்லை. மாறாக, தங்கள் செயல்களால் இயேசுவைப் பிரதிபலிக்கக் கூடியவர்களாக திகழ்ந்து இயேசுவுக்காக மறை சாட்சிகளாக மாறினர். 

 இன்று, இத்தகைய வாசகத்தின் வழியாக இறைவன் நமக்கு கொடுக்கக்கூடிய அழைப்பும் இதுதான்.  பகிர்வு தான் மனிதனுக்கு நிறைவைத் தரக் கூடிய ஒன்று.  இந்த நிறைவை நாம் நமதாக்கிக்கொள்ள வேண்டும் என்றால் நம்மிடம் இருப்பதை பகிரவேண்டும். பகிர்தல் பற்றி பல மணி நேரம் பேசுவது மட்டும் சரியல்ல. பேசுவதை செயலாக்கப்படுத்த வேண்டும். இருப்பதை பகிர வேண்டும். இருப்பதை பகிர்ந்தவராக நாம் திருவிவிலியத்தில் சக்கேயுவைக் காணலாம். இருப்பதையே பகிர்ந்தவராக,  அதாவது தன்னிடம் உள்ள அனைத்தையும் பகிர்ந்தவராக,  ஏழை கைம்பெண்ணை நாம் விவிலியத்தில் இருந்து அடையாளம் காணலாம். இருப்பதைப் பகிர்ந்து இறுதியில் தன்னையே பகிர்ந்த ஒரு மனிதனாக இயேசுவை நாம் காணலாம்.
 இயேசு, நமக்கு பகிர்வு என்ற பாடத்தை இன்றைய நாளில் கற்பிக்கின்றார்.  நாமும் நமது குடும்பங்களில் பல நேரங்களில், நமது குழந்தைகளுக்கு அந்த பகிர்வு என்ற பாடத்தை கற்பிக்கக் கூடியவர்களாகத்தான் இருக்கிறோம். பகிர்வு பற்றி குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதை விட அதனை செயலாக்கப்படுத்துவதற்கான வாய்ப்புக்களை உருவாக்குங்கள். உங்கள் குழந்தைகளின் முன்பாக பகிர்தலை முதலில் நீங்கள் செய்து காட்டுங்கள். குழந்தைகள் தாங்களாகவே பாடம் கற்றுக் கொள்வார்கள். 

எசாயா இறைவாக்கினரின் வார்த்தைகளுக்கு ஏற்ப,  படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றார், என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப விருந்துக்கு நாம் அனைவரும் அழைக்கப்பட்டிருக்கிறோம். பகிர்வு என்ற விருந்துக்கு நாம் அனைவரும் அழைக்கப்பட்டிருக்கிறோம்.  
விருந்தில் நாம் அனைவரும் இருக்கையில் இப்போது அமர்ந்திருக்கிறோம். தலை வாழை இலை போட்டு சாப்பாடு காய்கறி எல்லாம் பரிமாறப்பட்டு உள்ளன. அதாவது இறை வார்த்தைகள் வழியாக நம் வாழ்வுக்கான பாடங்கள் எல்லாம் நமக்கு இறைவனால் கொடுக்கப் பட்டுள்ளன.  இன்னும் ஒன்றே ஒன்றுதான் இலையில் வைக்க வேண்டும். அதை வைத்து விட்டால் நாம் சாப்பிடலாம். இந்தக் கட்டத்தில்தான் நாம் அனைவரும் இருக்கிறோம். அப்படி  இலையில் எதை வைக்க வேண்டும் என எண்ணுகிறீர்களா?  மனது வைக்க வேண்டும்!  மனது வைத்தால் நாம் சாப்பிடலாம். நம்மிடமும் நல்ல மனம் இருந்தால், சொல்வதை செயலாக்க வேண்டும் என்ற மனமிருந்தால்,  நாம் பகிர்வு என்பதை வெறும் சொல்லாடலாக மட்டும் பயன்படுத்தாமல் செயலாக்கப்படுத்தக் கூடியவர்களாக மாறுவோம்! 

 இன்றைய நாளில்  முதலில் நாம் நம்மிடம் இருப்பதை பகிரத் துவங்குவோம். சொற்களால் மட்டுமல்ல,  செயல்களினால்! 
இயேசு சீடர்களுக்கு கற்பித்த பாடத்தை இன்று நமக்கும் கற்பிக்கிறார்.  நாமும் பகிர்தலை இன்றைய நாள் முதல் செயலாக்கப்படுத்துவோம். சொல்லாக அல்ல, செயலாக்கப்படுத்த, மீண்டும் ஒருமுறை அன்போடு உங்களை அழைக்கிறேன்.

1 கருத்து:

  1. விருந்து பற்றிய கருத்து மிகவும் அருமை! மனது வைக்க வேண்டும் எனும் கருத்து எமது மனதைத் தொடுவதாக அமைந்துள்ளது! தங்களின் பணி சிறக்க ஜெபிக்கிறோம்! வாழ்த்துகிறோம்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...