செவ்வாய், 29 டிசம்பர், 2020

நன்றி வழிபாடு! (31.12.2020)

நன்றி வழிபாடு!

தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்.
(இப்பொழுது நற்கருணையானது நமது முன்பாக எடுத்து வைக்கப்பட்டிருக்கும்.  எனவே அனைவரும் இணைந்து....)
நிலையான புகழுக்குரிய.... என்ற நற்கருணை பாடலை மூன்று முறை  பாடவேண்டும்.
பாடல் பாடி முடித்த பிறகு ஆராதிக்கின்ற பாடலாகிய ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்..., என்ற பாடலை முழுமையாக பாட வேண்டும்.  
(பாடல் வரிகள் நிறைவு பெற்றதும் அனைவரும் எழுந்து நிற்போம்), 
மாற்கு நற்செய்தி 3:13-19  வரையுள்ள வசனங்களை ஒருவர் வாசிக்கவேண்டும்.
 
"இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள்.தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார். அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார். அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் — இவ்விருவருக்கும் ‘இடியைப் போன்றோர்’ எனப் பொருள்படும் பொவனேர்கேசு என்று அவர் பெயரிட்டார். அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு 
இறைவனுக்கு நன்றி ....





வழி நடத்தக் கூடியவர்:
இறைவன் இயேசுவில்,  அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் ஆண்டின் இறுதி நாளில்,  ஆண்டவரை நோக்கி வந்திருக்கிறோம்.  நாம் அனைவரும்,  ஆண்டவரை நோக்கி வந்திருப்பதன் நோக்கம் "நன்றி கூற" என்று மட்டும் சொல்லிவிட முடியாது. நாம் நன்றி கூறவும், நமது கடந்த வருட நிகழ்வுகளை எல்லாம் திருப்பிப் பார்த்து, நாம் செய்த பாவங்களுக்கு மனம் வருந்தவும், கடந்த வருடம் முழுவதும் காத்த இறைவனுக்கு நன்றி கூறவும், வருகின்ற வருடத்தில் இறைவன் நம்மை காத்தருள வேண்டும் என ஆராதிக்கவும், ஜெபிக்கவும், இங்கே கூடியிருக்கிறோம். 
இன்றையநன்றி வழிபாட்டின் நற்செய்தி வாசகமாக,  மாற்கு நற்செய்தி 3 அதிகாரம், 13 வது வசனத்தில் நாம் வாசிக்க கேட்டோம்,  அவர், தாம் விரும்பியவர்களை தம்மிடம் வரவழைத்தார் என்று. ஆண்டின் இறுதி நாளில், நம்மை எல்லாம் இறைவன் இன்று ஆலயத்தில் ஒன்றிணைத்து இருக்கிறார் என்றால்,  அவர் நம்மை விரும்புகிறார்.  நம்மீது விருப்பம் கொள்கிறார்.  நம்மீது அவர் கொண்ட அதீத அன்பின் காரணம் தான் இன்று நாம் அனைவரும் அவரைத் தேடி வந்திருக்கிறோம். 
எண்ணிக்கை 18 : 20.
ஆண்டவர் ஆரோனிடம் கூறியது: அவர்கள் நாட்டில் உனக்கு உரிமைச் சொத்து ஏதுமில்லை, அவர்களிடையே உனக்குப் பங்கும் இல்லை; இஸ்ரயேல் மக்களிடையே உனக்குப் பங்கும் உரிமைச் சொத்தும் நானே" என்று. இந்த உலகத்தில் நிலையான சொத்து என்பது ஆண்டவர் மட்டுமே. அந்த சொத்தை பிடித்துக் கொள்வதற்காக,  இன்றைய நாளில் நாம் அனைவரும் ஆண்டவரை நோக்கி வந்திருக்கிறோம். கடந்த வருடத்தை பற்றி நினைத்து பார்க்கும் பொழுது, யாரும் எளிதில் மறந்துவிட இயலாத ஒரு வருடமாக அது அமைகிறது. வீட்டுக்குள் முடங்கி போன வாழ்வு.  கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரஸின் தாக்கம், உலகில் உள்ள ஒட்டுமொத்த மனிதர்களையும் கட்டிப்போட்டுவிட்டது. பணம் படைத்தோர், ஏழை என்ற பாகுபாடு ஏதும் இல்லாமல் அனைவரையும் இந்த வைரஸானது உலுக்கிவிட்டது.  
இன்று மனித மனங்களில் அச்சம் ஆழமாக குடிகொண்டுள்ளது. எப்போது மரணம் என்பதை யாரும் அறியாது இருப்பதுப்போல, எப்போது யார், நோயினால் தாக்கப்படுவார்கள் என்று தெரியாத சூழல் நிலவுகிறது.  தொடக்க காலத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் போது,  பலவிதமான இன்னல்களை தொடக்ககால கிறிஸ்தவர்கள் சந்தித்தது போல, நோய் தாக்குதலால் ஆண்டவரிடம் சென்று நமது உள்ளக் குமுறல்களை வெளியிடலாம் என்று, ஆலயத்திற்குச் செல்ல முயன்றால் கூட,  அதுவும் கட்டுப்பாடுகளோடு தடுக்கப்பட்டது. மனிதனின் உயிர் காப்பது மட்டுமே முதன்மை என்ற நோக்கமானது நிலவியதால், ஒவ்வொருவரும் ஒவ்வொருவரின் உயிரைக் காத்துக் கொள்வதற்காக வீடுகளில் முடங்கிப் போனோம். முடங்கிப்போன நாம் அனைவரும், ஆண்டவர் இயேசுவை பற்றியும், நாம் கொண்டிருக்கக்கூடிய இறைநம்பிக்கையை பற்றியும் சிந்திப்பதற்கான ஒரு வாய்ப்பாக, இவ்வருடம் முழுவதும் அமைந்திருக்கிறது. இந்த வருடத்தின் இறுதி நாளில் நாம் அனைவரும் இன்று இணைந்து ஆண்டவரிடம் அமர்ந்து ஜெபிக்கிறோம் என்றால், இறைவன் நம்மை எல்லா விதமான தீங்குகளில் இருந்தும் காத்து இருக்கிறார், என்பதுதான் முற்றிலும் உண்மையாகிறது.  நம்மை காத்த இறைவனுக்கு நன்றி கூறிட இங்கு நாம் கூடியிருக்கிறோம். நன்றி வார்த்தைகளால் மட்டும் அல்ல, என்பதை உணர்ந்தவர்களாக அனைவரும் இணைந்து மகிழ்ந்து கடந்து வந்த பாதைகளை நினைத்துப் பார்த்து பாடகர் குழுவோடு இணைந்து பாடுவோம்.

"கடந்து வந்த பாதைகளை நினைத்து பார்க்கிறேன்" என்ற பாடலானது இப்பொழுது பாடப்படும். (பாடல் முடிவில்),  

2020 வருடத்திற்கான நன்றிகள்
புதில் : எங்களை பாதுகாத்த இறiவா உமக்கு நன்றி
    1. இயேசுவே இந்த வருடம் முழுவதும் எங்களை கண்ணின் மணி போல, உமது உள்ளங்கையிலே எங்கள் பெயரை எழுதிப்பாதுகாத்து வந்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறோம்.

2. கொரோனா என்கிற கொடிய நோயிலிருந்து எங்களை உமது தூய இரத்தக்கோட்டைக்குள் வைத்து பாதுகாத்து வந்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறோம்.

3. எண்ணற்ற மக்கள் வேலை இழந்து வந்தபோதிலும் எங்களுடைய பொருளாதாரத் தேவைகளை நீர் மிகவும் சிறப்பாக வழிநடத்தி சென்றதற்காக நன்றி கூறுகிறோம்.


4. கொரோனா நோயின் காலத்தில் பொருளாதார தேவையில் உழலும் மக்களுக்கு உதவி செய்யக்கூடிய கிருபையை தந்ததற்காக நன்றி செலுத்துகிறோம்.
5. கொரோனா நோயினால் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்ட போது நீர் எங்களோடு கூட இருந்து ஆறுதல் தந்தமைக்கு உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
6. இந்த கொள்ளை நோயை எங்கள் மீது அனுப்பி எங்களை, எங்கள் இதயத்தை, உன் வசம் திருப்ப செய்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறோம்.
7. திருப்பலி காண இயலாத நிலையில் எங்களுடைய தனிப்பட்ட ஜெபம்  உம்முடனான உறவை அதிகரிக்கச் செய்ததற்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம்.                                                                               
8. உலகெங்கிலும் கொரோனா நோயினால் இறந்த எங்கள் உறவுகளை நீர் விண்ணகம் எடுத்து சென்றதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
9. நிவர் புயல், புரவி புயல், போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து எங்களை பாதுகாத்து வந்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
10. இவ்வருடத்தில் எங்கள் பகைவர்களையும் நேசிக்க கற்றுத் தந்த கிருபைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

இயேசுவே இன்னும் எத்தனை எத்தனையோ நேரங்களில், காரியங்களில் நீர் எங்களுக்கு செய்த எண்ணிலடங்கா உதவிகளுக்காக உமக்கு கோடான கோடி நன்றிகளை எந்நேரமும் ஏறெடுக்க ஆசையாய் இருக்கிறோம். வரவிருக்கும் புதிய ஆண்டில், இன்னும் அதிகமாய் உண்மை அன்பு செய்யவும், இன்னும் அதிகமாய் உண்மை நேசிக்கவும், இன்னும் அதிகமாய் உன் வழியில் நடக்கவும், எங்களை வழி நடத்தவும் உள்ள உமது அன்பிற்காக நாங்கள் கோடான கோடி நன்றி செலுத்துகிறோம்.
பாடல்: நன்றி என்று சொல்லுகிறோம் நாதா…



மன்னிப்பு வழிபாடு
யாக்கோபு எழுதிய திருமுகம்,  5:13 -16 வாசிக்கப்படும்.
உங்களுள் யாரேனும் துன்புற்றால் இறைவேண்டல் செய்யட்டும்; மகிழ்ச்சியாயிருந்தால் திருப்பாடல்களை இசைக்கட்டும். உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால், திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள். நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பி விடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார்.
ஆகவே, ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை செய்து கொள்ளுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அப்பொழுது குணமடைவீர்கள். நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும்.

ஆண்டவரின் அருள்வாக்கு 
இறைவனுக்கு நன்றி ....

"முகவரி இல்லாத கடிதம் ஊர் போய் சேராது " என்பார்கள். நமக்கு நாம் தான் நமது முகவரியை எழுதவேண்டும். இந்த ஒரு வருட காலமாக, கடுமையான, இக்கட்டான பல சூழல்களை நாம் சந்தித்திருந்தாலும், பலவிதமான துன்பங்களை நாம் பட்டிருந்தாலும், பல நேரங்களில் பாவத்தில் மூழ்கி இருந்திருக்கிறோம். பாவத்தோடு நாம் பயணித்த நேரங்களை நினைத்துப் பார்ப்போம். அந்த நிலையிலிருந்து மனம் மாறிட இறையருளை நற்கருணை நாதரிடம் வேண்டுவோம்.
அன்புக்குரியவர்களே! பாவம் செய்த நம்மால் மட்டுமே நாம் செய்த பாவத்தை கண்டுகொள்ள முடியும். கடந்த வருடம் முழுவதும், பலவிதமான பாவங்களை நாம் செய்திருக்கலாம். செய்த பாவங்களை நினைத்துப் பார்ப்போம். பல நேரங்களில் நாம் செய்த பாவங்களை மறந்துவிடுகிறோம்.  பாவங்கள் என்றாலே கடவுளின் திட்டத்திற்கு எதிரானது தான் பாவம் என எண்ணுகிறோம். கடவுளின் திட்டத்திற்கு எதிரானது மட்டும் பாவமல்ல. கடவுளின் திட்டத்தை செய்யாமல் இருப்பதும் பாவம்தான்.  உதாரணமாக ஒரு ஏழை ஒருவன் துன்பப்படுகிறான். அவன் துன்பப்படுவதை கண்டும் காணாமல் செல்வதும் பாவம் தான். அவனுக்கு உதவி செய்யாமல் இருப்பதும் பாவம்தான். அவன் துன்பத்தை பற்றி பேசாமல் இருப்பதும் பாவம் தான்.  இன்று நம்மைச் சுற்றி நிகழக்கூடிய பல இக்கட்டான சூழ்நிலைகளில்,  நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலர், தன்னார்வத்தோடு மனமுவந்து உதவினார்கள். 
நாம் செய்த உதவி என்ன? என சிந்திப்போம். 
துன்பப்படுபவர்களுக்காக நாம் ஏங்கேனும் பரிந்து பேசினோமா?  
நோயுற்றிருந்தேன், என்னைப் பார்க்க வந்தாயா?  என்ற இறை வார்த்தைகளின் அடிப்படையில்,  நோயுற்றவர்களை பார்க்கச் சென்றோமா?  அல்லது நம்மை நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருந்து,  அடுத்தவர்களை கண்டு கொள்ளாமல் இருந்தோமா?  
நமது உடல் நலன் முக்கியம் என்ற நோக்கத்தோடு, அடுத்தவரின் உடல் நிலை குறித்து கவலை கொள்ளாமல் இருந்தோமா?   
பல நேரங்களில் பலர் தங்கள் உயிரையும் துச்சமென கருதாது,  அடுத்தவரின் உயிர் காக்க வேண்டும். அடுத்தவருக்கு நலமான பணிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு, பல நல்ல பணிகளை முன்னெடுத்த, செவிலியர்கள், மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள், இவர்களுடைய துன்பத்திலும் இன்பத்திலும் நாம் பங்கு கொண்டோமா?  
இவர்களை பாராட்டி,  ஊக்கப்படுத்தினோமா?  சிந்தித்துப் பார்ப்போம்.
 நாம் அறிந்தும் அறியாமலும் பலவிதமான பாவங்களை யாரும் நம்மை கவனிப்பதில்லை என்ற நோக்கத்தோடு செய்திருப்போம். செய்த பாவங்களை எல்லாம் நினைவு கூர்ந்து,  மனம் வருந்தி,  இறைவனிடத்தில் மனதார அறிக்கையிட்டு மன்னிப்பு வேண்டுவோம். ஆண்டின் இறுதியில் நம்மை இறைவன் இன்று அவர் முன்பாக கூட்டிச் சேர்த்திருக்கிறார், காரணம்,  நாம் அவருக்கு உரிமைச் சொத்து. அவர் மீது நாமும் நம்மீது அவரும் உரிமை கொண்டவர்கள். நாம் அவருக்கு உரியவர்கள்.  அவர் நம்மை ஏற்றுக் கொள்வார், நம் பாவங்களை மன்னிப்பார், வருகின்ற வருடத்தில் அவர் நம்மை காப்பார், வழிநடத்துவார் என்ற நம்பிக்கையோடு இன்று அவர் முன்பாக நாம் அமர்ந்திருக்கிறோம். எனவே,  நமது குற்றங்குறைகளை இறைவனிடம் அறிக்கையிட்டு மன்னிப்பு வேண்டுவோம். முடிந்தவர்கள்,  அருள்தந்தையை அணுகி பாவ அறிக்கை செய்து,  ஒப்புரவு அருள்சாதனம் பெற்றுக்கொண்டு, புதிய ஆண்டினை துவங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம். இறைவன் நம்மை மன்னிக்க கூடியவராக இருக்கிறார்.

(அமைதி….)
மன்னிப்பு பாடல்: 
(அல்லது)
திருப்பாடல் 63:அடிப்படையில்...

கடவுளே! நீரே எங்கள் இறைவன்! 
உம்மையே நாங்கள் நாடுகின்றேன்; 
எங்கள் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; 
நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல 
எங்கள் உடல் உமக்காக ஏங்குகின்றது. 
உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து 
உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றோம்.
ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; 
எங்கள் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன.
எங்கள் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவோம்; 
கைகூப்பி உமது பெயரை ஏத்துவோம்.
அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல 
எங்கள் உயிர் நிறைவடையும்; 
எங்கள் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும்.
நாங்கள் படுத்திருக்கையில் உம்மை நினைப்போம்; 
இரா விழிப்புகளில் உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்போம்.
ஏனெனில், நீர் எங்களுக்குத் துணையாய் இருந்தீர்; 
உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றோம்.
நாங்கள் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டோம்; 
உமது வலக்கை எங்களை இறுகப் பிடித்துள்ளது.
(பாடலை தொடர்ந்து)

புகழ்ச்சி பகுதி
 1 தெசலோனிக்கர் 5:16-18 
"எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே".
ஆண்டவரின் அருள்வாக்கு 
இறைவனுக்கு நன்றி ....

அன்புக்குரியவர்களே எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்.  இடைவிடாது ஜெபியுங்கள். என்ன நேர்ந்தாலும் இறைவனுக்கு நன்றி கூறுங்கள்.  பிறக்கவிருக்கும் இந்த புதிய ஆண்டிலே நாம் அனைவரும், எல்லா சூழ்நிலையிலும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவும், இடைவிடாது இறைவனிடம் வேண்டவும், எல்லாச் சூழ்நிலையிலும் இறைவனுக்கு நன்றி கூறவும்,  இங்கே கூடியிருக்கிறோம். எனவே, ஆண்டவர் இயேசுவை,  வருகின்ற வருடங்களில் நம்மை காக்கு இருக்கக்கூடிய இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக அனைவரும் இணைந்து.....
 பாடல் : நன்றியால் துதிபாடு என்ற பாடலை பாடுவோம்.
 திருப்பாடல் 100. 
 பல்லவி: அனைத்துலகோரே...ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சிநிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்!
பல்லவி: 
அனைத்துலகோரே...ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!
பல்லவி: 
அனைத்துலகோரே...ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! 
பல்லவி: 
அனைத்துலகோரே...ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்!ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.
பல்லவி: 
அனைத்துலகோரே...ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!

அன்புக்குரியவர்களே 1 குறிப்பேடு 13:8 ல் வாசிக்கின்றோம்...
"தாவீதும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் தங்கள் முழு ஆற்றலுடன் கடவுளுக்கு முன்பாகச் சுர மண்டலங்கள், யாழ்கள், மத்தளங்கள், கைத்தாளங்கள், எக்காளங்கள் இவற்றை இசைத்து மகிழ்ச்சி பொங்க ஆர்ப்பரித்துப் பாடினர்". என்று...
இணைச்சட்டம் 6: 5. கூறுகிறது…
"உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக" என்று.
நாமும் நம் முழு உள்ளத்தோடும், முழு இதயத்தோடும், ஆன்மாவோடும், இறைவனை அன்பு செய்ய வேண்டும். இதுதான் இறைவன் இன்று நமக்கு தரக்கூடிய செய்தி.  பாடகற்குழுவோடு இணைந்து நாம் அன்பு கூறுவோன் என்ற பாடலை பாடி இறைவனை ஆராதிப்போம்.
பாடல் : அன்பு கூறுவோன்…
நாம்  ஒருவர் மற்றவரை அன்பு செய்யும் போது இறைவனை அன்பு செய்ய தொடங்குகிறோம். இறைவனை அன்பு செய்யத் தொடங்கும்போது, வாழ்க்கையில் பலவிதமான இன்னல்களை, கஷ்டங்களை, நாம் சந்திப்பது போல தோன்றலாம். ஆனால் எதையும் கண்டு, உங்கள் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது என்பதுதான் இன்றைய நாளில் இறைவன் நமக்குத் தருகின்ற செய்தி.
பிறக்கவிருக்கும் புதிய ஆண்டில், நாம் நம்பிக்கையோடு இருக்க நாம் அழைக்கப்படுகிறோம். 


1 பேதுரு,5: 6-11 வரை உள்ள வசனங்களில் நாம் வாசிக்கலாம்
"கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்; அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார். உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார். அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது. அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள். உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகள் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா? எல்லா அருளும் நிறைந்த கடவுள், இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார். சிறிது காலத் துன்பங்களுக்குப்பின் அவர் உங்களைப் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார். அவரது வல்லமை என்றென்றைக்கும் உள்ளது. ஆமென்.
ஆண்டவரின் அருள்வாக்கு 
இறைவனுக்கு நன்றி ....

பிறக்கவிருக்கும் 2021 ஆம் வருடம் முழுவதும் நமது நம்பிக்கையை இழக்கும் விதமாக,  நமது நம்பிக்கையை சோதிப்பதற்காக உருவாகக்கூடிய, அனைத்து விதமான இன்னல்களையும் கண்டு அஞ்சாது, துணிவோடு, அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய், ஆண்டவர் இயேசுவை,  இறுகப்பிடித்து கொண்டவர்களாய்,  தொடர்ந்து பயணித்து, புதிய ஆண்டினை துவங்கிட இறையருளை வேண்டி அனைவரும் இணைந்து மாண்புயர் கீதம் இசைப்போம்.

 மாண்புயர் கீதம் பாடல்.


1 கருத்து:

பலனை எதிர்பாராமல் பணி செய்வோம்!(28-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...