வெள்ளி, 4 டிசம்பர், 2020

வேலைக்கு ஆட்கள் தேவை... (5.12.2020)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய வாசகங்கள் நம்மை இறைவனின் பணிக்கு அழைக்கின்றன. ஆம்!  இறைவனின் பணிக்கு நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். இன்று நாம் வாழக்கூடிய இந்தச் சமூகத்தில் நாம் மட்டும் எல்லா சுகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற மனநிலை இருப்பதனால்தான் அடுத்தவரின் பிரச்சனை நம்மைத் தொடுவதில்லை. இப்படிப்பட்ட மனநிலையில் வாழ்பவர்களைத் தான் இயேசு தன்னுடைய மண்ணக வாழ்வில் கடுமையாகச் சாடினார்.  சுயசார்பு எண்ணங்கள் அதிகரிக்கும் போது பதவி! புகழ்! பணம்! இவைகள் மட்டுமே மனித இதயத்தில் இடம் பிடிக்கத் தொடங்குகின்றன. அப்போது இறைவன் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் தளர்ச்சியானது உருவாகிறது. இதனால் இறை நம்பிக்கை என்பது ஒரு சடங்காகவும், பணமே வாழ்வின் குறிக்கோளாகவும் மாறுகிறது. இன்று நாம் வாழக்கூடிய சமூகமானது இன்று இவ்வாறு தான் வளர்ந்து நிற்கிறது. வளர்ச்சி என்ற பெயரில் மனிதத்தை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது,  தன்னுடைய சமூகத்தில் ஏழைகள் கைவிடப்பட்டோர் நோயாளிகள் எனப் பலரை சமூகத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு கீழானவர்கள், இறைவனுக்கு  விருப்பமில்லாதவர்கள், இறைவனால் தண்டிக்கப்பட்டவர்கள், என்றெல்லாம் சொல்லி ஒதுக்கி வைத்திருந்தார்கள். அன்னை தெரசா அவர்கள் கூறுவார், ஒரு மனிதன் பசியால் இவ்வுலகத்தில் இறக்கிறான் என்றால்,  அது அவன் செய்த தவறு அல்ல. அது கடவுள் அவனை பராமரிக்கவில்லை என்பதால் அல்ல. மாறாக உன்னையும் என்னையும் போன்றோர் அவனுக்கு உதவாததே முதல் காரணம் எனக் குறிப்பிடுகிறார். 

இயேசு மண்ணில் வாழ்ந்த போது கூட சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட இந்த மக்களுக்கு பணி செய்வதற்கு இயேசு அழைப்பு விடுக்கிறார். தன்னுடைய சூழலில் இருந்த வண்ணம், இந்த மக்களின் குறைகளை நிறைகளை அறிந்தவரான இயேசு,  தன்னைச் சுற்றி இருந்தவரை நோக்கி அறுவடை மிகுதி! வேலையாட்கள் குறைவு! அறுவடைக்கு தேவையான வேலையாட்களை அனுப்புமாறு அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள் என்கிறார்.

 இன்று நாம் வாழக்கூடிய இந்தச் சமூகத்தில் நசுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஏழை எளியவர்களுக்கு புறந்தள்ளப்பட்டவர்களுக்கு,  நோயாளிகளுக்கு, அனாதைகளுக்கு பணி செய்யக் கூடியவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இன்று மட்டுமல்ல,  வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே பார்ப்போமாயின், நோய் என்பதை கடவுள் கொடுத்த சாபம் எனக்கருதி ஒதுக்கியவர்களாகத்தான் பல காலங்கள் இருந்திருக்கின்றோம்.  ஏழையாக ஒருவன் இருப்பதற்கு காரணம் அவன் செய்த பாவம் என்று கூறி அவனை ஒதுக்கி இருக்கிறோம்.  சமூகத்தில் ஒருவன் செய்கின்ற தொழிலை சுட்டிக் காட்டி அவனை தாழ்ந்தவன்,  ஒதுக்கப்பட்டவன் என ஒதுக்கியதும்  இச்சமூகத்தில் வாழ்ந்த மனிதர்கள் தான். இப்படிப்பட்ட, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, ஏழை எளிய மக்களுக்கு பணி செய்யக் கூடியவர்கள் இருக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பினால்,  இவர்களைப் பற்றிப் பேசுபவர்கள் அதிகம். இவர்களை பேசும்பொருளாக கொண்டு பட்டங்களையும் பதவிகளையும் தேடிக் கொள்பவர்கள் பலர். ஆனால் உண்மையில் இத்தகைய மக்கள் வாழ்க்கையில் மாற்றத்தை விதைத்தார்களா? என்று கேள்வி எழுப்பினால் மிகவும் குறைவு. மிகவும் குறுகிய நபர்கள் மட்டுமே அவர்களின் வாழ்வை மாற்றுவதற்கான,  அவர்களை சமூகத்தில் சரிசமமாக இணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டவர்கள் என்பது உண்மை என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
 இயேசு வாழ்ந்த காலத்திலும் மக்களின் மனங்களில் இத்தகைய நஞ்சானது விதைக்கப்பட்டது. ஏழை என்பவன் கடவுளால் தண்டிக்கப்பட்டவன். நோயாளி என்பவன் கடவுளின் சாபத்திற்கு உள்ளானவன். அவனை நாம் தொடக் கூடாது.  அவரோடு தொடர்பு கொள்ளக் கூடாது. அவர்கள் இருக்கும் திசைநோக்கி நடக்கக் கூடாது என்ற சிந்தனைகள் எல்லாம் இருந்தது. சமாரியர்கள் இருக்கக்கூடிய பாதையை நோக்கிச் செல்வது தீட்டாக கருதப்பட்டது. அவர்களை தங்களுக்கு இணையாக ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.  இயேசுவின் காலத்தில் நிலவிய சூழல் இது. இதை முற்றிலும் அறிந்தவரான இயேசு,  அவர்களுக்கு மீட்பு உண்டு. அவர்களும் கடவுளின் குழந்தைகள் என பேசி விட்டுச் செல்லவில்லை. மாறாக சமாரியப் பெண்ணைத் தேடிச் சென்றார்.   அவர்களோடு உரையாடினார். உறவாடினார். உண்டு மகிழ்ந்தார். இன்று ஏழைகள், அனாதைகள், ஒடுக்கப்பட்டோர்,  என இச்சமூகத்தில் அதிகமான மக்கள் இவ்வாறுதான் இருக்கிறார்கள்.  இத்தகைய மக்களுக்கு பணி செய்ய இறைவன் நம்மை அழைக்கின்றார். ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுத்தவர்களாய் நாம்,  இத்தகைய மக்களின், நல்வாழ்வுக்கு வழி செய்யக்கூடியவர்களாக, அவர்களுக்காக உழைக்கக் கூடியவர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம். 

நாம் அனைவரும்  சமீபத்தில் அறிந்த செய்திதான்.  பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடிய தந்தை ஸ்டேன் ஸ்வாமியவர்கள்,  இன்னும் சிறையில் இருந்து கொண்டிருக்கிறார். தள்ளாடும் வயதிலும் ஆண்டவர் இயேசுவின் பணியை செய்து கொண்டிருக்கிறார். அதன் விளைவாக இன்னலை சந்தித்துக் கொண்டிருக்கிறார். சில நாட்கள் அவரைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு அவரை விடுதலை செய்ய வேண்டும் எனப் போராடிய பல மக்கள் இயக்கங்கள் இன்று மௌனமாகி விட்டன. ஏழை எளியவர்களுக்கு பணி செய்பவர்கள் மிகவும் குறைவு. அந்தக் குறைவான நபர்கள் அடையக் கூடிய இன்னல்கள் ஏராளம்.  நாம் அனைவரும் இணைந்து, ஏழை எளிய மக்களுக்காக உழைக்க வேண்டும். ஏற்கனவே இந்த ஏழை எளிய மக்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய நபர்கள் சமூகத்தில் பலவிதமான துன்பங்களை சந்திக்கிறார்கள் என்றாலும், அத்தகைய துன்பங்களை உருவாக்கக்கூடிய சக்திகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியவர்களாக நாம் இருக்க வேண்டும் என்ற பாடத்தினை நிறைய வாசகத்தின் வழியாக இறைவன் நமக்கு உணர்த்துகிறார்.  ஒடுக்கக்கூடிய சக்திகளுக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடிய ஒரு பணியாளர்களாக நாம் உருவாக வேண்டும் என்ற செய்தியினை இன்றைய வாசகத்தின் வழியாக இறைவன் நமக்கு உணர்த்துகிறார். தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கண்டிப்பாக இதுவரை தெரியாத ஏழைகளை நோக்கி தங்களை சமூகத்தில் பெரியவர்கள், உயர்ந்தவர்கள், 
என நினைத்துக்கொண்டவர்கள் எல்லாம் இந்த ஏழைகளை நோக்கி ஓடி வருவார்கள். ஆனால் மறந்திட வேண்டாம் உண்மையாலுமே இந்த  ஏழைகளுக்காக உழைக்கக் கூடியவர்களா? என்ற கேள்வியை உள்ளத்தில் எழுப்பிப் பார்ப்போம்.  இவர்கள் இந்த ஏழை எளிய மக்களை பேசும் பொருளாக மட்டும் கொண்டு இவ்வுலகில் பதவி, பணம், பட்டம், இவைகளை நாடிச் செல்வதை  விடுத்துவிட்டு,  உண்மையாலுமே இயேசுவைப்போல இயேசுவின் சீடர்களாக மட்டும் வரக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு உண்மையாகவே பணி செய்யக்கூடிய இயேசுவின் சீடர்களாக நசுக்கப்பட்ட, துன்புறக்கூடிய, ஏழை எளிய மக்களுக்கு, உண்மையாகவே பணி செய்யக்கூடிய இயேசுவின் சீடர்களாக,  நாம் ஒவ்வொருவரும் பணியாற்ற அழைக்கப்படுகிறோம். இதற்கான பணியாளர்களை இறைவன் அதிகம் இச்சமூகத்திற்கு தர  வேண்டும் என்று இன்றைய நாளில் நாம் அனைவரும் இணைந்து செபிப்போம்.

அறுவடை மிகுதி வேலையாட்கள் குறைவு.  அறுவடை மேற்கொள்ள தேவையான வேலையாட்களை அனுப்புமாறு அறுவடையின் ஆண்டவரை நோக்கி தொடர்ந்து மன்றாடிட உங்களை அன்போடு அழைக்கின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...