ஞாயிறு, 27 டிசம்பர், 2020

ஒளியை சார்ந்தவர்களாக இருப்போம்! (28.12.2020)

ஒளியை சார்ந்தவர்களாக இருப்போம்!
 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  
இன்றைய நாளின் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 இன்று நம் தாய்த்திரு அவையோடு இணைந்து மாசில்லா குழந்தைகள் தினத்தில் மாசில்லா குழந்தைகளுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறோம்.  இயேசுவின் ரத்தம் நம்மை பாவத்திலிருந்து மீட்டது. மாசில்லாத பல குழந்தைகளின் ரத்தம் இயேசுவுக்காக அன்று சிந்தப்பட்டது. இயேசுவின் பிறப்பை ஒட்டிய  நிகழ்ச்சிகளை செக்கரியா எனப்படக்கூடிய மலையாள எழுத்தாளர்,  கற்பனை நயத்துடன் கதைகளாக வடிவமைத்திருக்கிறார். அவர் வடிவமைத்த கதைகளுள் ஒன்று, இன்றைய நாள் வாசகங்களுக்கு சிறந்ததாக அமையும் என எண்ணுகிறேன். ஒரு படைவீரன் ஒருவன், உடல் முழுக்க ரத்த குருதியால் நனைந்த வண்ணம், கையில் வாளோடு ஒரு விபச்சாரியின், ஒரு விலைமகளின் வீட்டிற்கு முன்பாக வந்து நின்றான். அவன் அந்த விலை மகளைப் பார்த்து, நான் மிகவும் களைப்புற்று இருக்கிறேன். என் களைப்பைப் போக்கிக் கொள்ளவும் என்மீது இருக்கக்கூடிய இந்த ரத்த வாடையை நான் அகற்றிக் கொள்ளவும் எனக்கு வெந்நீர் வைத்து தா! 
 நான் என்னுடைய சோர்வைப் போக்கி கொள்ள வேண்டும். என்னை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றான். ஆனால் அந்த விலைமகளோ, அந்த படைவீரனை நோக்கி, ஏன் உனக்கு இவ்வளவு விரோதம்? சின்னஞ்சிறு குழந்தைகள் என்ன செய்தன? எதற்காக சின்னஞ்சிறு குழந்தைகளை நீ கொன்று குவிக்கிறாய்? உனக்கு எதிராக அவர்கள் செய்த சதி திட்டம் தான் என்ன? என்ற கேள்வியை எழுப்பினாள். அதற்கு அந்த படை வீரன் சலிப்போடு,  யார் சொன்னது? இந்த குழந்தைகள் எல்லாம் எனக்கு எதிராக சதித்திட்டம் செய்தவர்கள் என்று? எனக்கும் அந்த குழந்தைகளுக்கும் பகை உள்ளது என்று? எனக்கும் அவர்களுக்கும் இடையே எந்தவித பிரச்சனையும் இல்லை என்றான்.  உடனே அந்த விலைமகள், இருந்தபோதும் ஏன் குழந்தைகளை நீங்கள் தேடித் தேடிக் கொன்று கொண்டே இருக்கிறீர்கள்? என்று கேட்டாள். அதற்கு அந்த படைவீரன்,  அந்த விலை மகளிடம் கூறினான், நாங்கள் கொல்ல வேண்டும் என்பது எங்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளை.  போர்முனையில் நிற்கும் போது எனக்கு எதிரே இருக்கக் கூடியவனும்,  போருக்கு வந்திருக்கிறான் என்றால் எனக்கும் அவனுக்கும் இடையே எந்தவித மோதலும், கருத்து வேறுபாடும் இல்லை.  எங்களை எங்களது அரசன் அவர்களை தாக்க வேண்டும் எனக் கூறும்போது மட்டுமே நாங்கள் அவனை, அவர்களை தாக்க முயலுகிறோம். அந்த அடிப்படையில், எங்கள் அரசன் இட்ட கட்டளை.  கட்டளைக்கு செவிகொடுக்க வேண்டியது படைவீரர்களாகிய எங்களுடைய கடமை.  நாங்கள் எங்கள் கடமையை தான் செய்தோம் என்று கூறினான். இருந்த போதும் இந்த பெண்மணி அவனை விடுவதாக இல்லை. மீண்டும் நச்சரித்தாள். கடமை என்ற பெயரில் ஒன்றுமறியாத சிசுக்களை கொல்வது முறை தானா? என்றாள்.  உடனே மாடி அறையிலிருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. விலைமகள் உடனடியாக படை வீரனிடம் எங்கள் வீட்டில் இருக்கக் கூடிய பூனைகள் கூட குழந்தைகளைப் போலவே அழுகின்றன என்றாள். உடனே அந்தப் படை வீரன் அது குழந்தையாக இருந்தால் தான் என்ன?  என்னுடைய வேலை நேரம் முடிந்து விட்டது. இனி நான்  எந்த சிசுவையும் கொல்லப் போவது இல்லை. ஏனென்றால் எனது பணி நேரம் முடிந்து நான் ஓய்வுக்கு வந்துவிட்டேன்,  என்று கூறிய வண்ணம், அரைமயக்கத்தில் வீட்டின் வெளிப்புறத்தில் இருந்த கட்டிலில் சரிந்து கிடந்தான்.  

அப்போது மாடியிலிருந்து மரியாவும் சூசையும் கையில் குழந்தையோடு இறங்கி வந்தார்கள். அவர்கள் ஒரு கழுதையில் ஏறி பயணத்தை தொடர்ந்தார்கள். இந்த விலைமகள் மரியாவிடம்,  உங்கள் மகன் பெரியவனாக வளர்ந்து வரும் போது என்னை நினைவில் கொள்ளச் சொல்லுங்கள் எனக் கூறினாள்.  உடனே, சரி! என்று கூறிவிட்டு கழுதையின் மீது ஏறி அமர்ந்த வண்ணம் தங்களின் பயணத்தை தொடர்ந்தார்கள். மீண்டுமாக அந்த விலைமகள் விரைவாக ஓடி வந்தாள். ஓடி வந்த விலைமகள், மரியாவிடம் என்னை மட்டுமல்ல, அந்தப் படை வீரனையும் உங்கள் மகனை நினைவில் கொள்ளச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டு,  அவ்விடத்தை விட்டு அகன்று சென்றாள். 

காலங்கள் உருண்டோடின. இயேசு வளர்ந்தார். அவர் சந்தித்து தீர்ப்பு வழங்கிய அந்த விலைமகள் தான், அன்று இயேசுவை காப்பாற்றிய விலைமகள் எனவும், இயேசுவை ஊடுருவக் குத்திய நூற்றுவர் தலைவன் தான் அந்த படை வீரன் என்றும் மலையாள எழுத்தாளர் பால் சக்கரியா கற்பனை நயத்தோடு எழுதியிருந்தார்.

 இன்றைய முதல் வாசகத்தில், நாம் அனைவரும், ஒளியை சார்ந்தவர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம். கடவுளாக இருக்கிறார். அவரிடம் இருள் இல்லை. இருளுக்குரிய செயல்களை செய்து விட்டு,  கடவுளோடு நட்புறவோடு இருக்கிறோம் என கூறக் கூடியவர்கள் பொய்யர் என சுட்டிக்காட்டப்படுகிறது.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில், ஏரோது அரசனின் கட்டளைக்கு இணங்கி, ஒன்றும் அறியாத சிறு குழந்தைகளை கொன்று குவிக்கக் கூடிய நிகழ்வுகளை நாம் வாசிக்கின்றோம். 
 இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில், பல நேரங்களில் பல அதிகாரிகள், தங்களுக்கு கொடுக்கப்பட்ட கடமை எனக்கூறி, நீதிக்குப் புறம்பாகவும், மனிதநேயத்திற்கு புறம்பான செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.  சமீபத்தில் நடந்த பல போராட்டங்கள், வன்முறைகளாக மாறியதற்கு மூலகாரணம், பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலர்கள் சிலரின் தவறான செயல்பாடுகள் என்பது அனைத்து ஊடகங்களும் வெளிப்படையாக சுட்டிக்காட்டிய ஒன்று,  என்பதை மறுக்கவியலாது.

 கடமை என்ற பெயரில் பல நேரங்களில் நாம் நீதிக்கு துணை நிற்பதை விட்டுவிட்டு அநீதிக்கு துணை நிற்கக் கூடியவர்களாக இருக்கிறோம். அநீதிக்கு துணை நின்று விட்டு, நாம் அனைவரும் ஒளியைச் சார்ந்தவர்கள் எனக் கூறினால், கண்டிப்பாக இன்றைய முதல் வாசகத்தில் சொல்லப்பட்டது போல, இருளுக்குரிய செயல்களை செய்து விட்டு,  கடவுளோடு நட்புறவு எங்களுக்கு இருக்கிறது எனக் கூறக்கூடிய உயிர்களாகத் தான் நாம் இருப்போம்.  நாம் அனைவரும் கடமையைச் செய்தாலும், நீதியில் சிரமேற்கொண்டு சிறப்போடு செயல்பட, இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் நம்மை அழைக்கின்றார்.  அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய்,  உண்மைக்கும் நீதிக்கும் துணை நிற்கக் கூடிய இயேசுவின் சீடர்களாக, இச்சமூகத்தில் ஒளியின் மக்களாக விளங்கிட இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்போம்.

1 கருத்து:

  1. மாசில்லா குழந்தைகளின் வரலாறு பற்றி சொல்லப்பட்ட கருத்துக்கள் மிகவும் அருமையாகவும் புதுமையாகவும் உள்ளன. ஆண்டவர் இயேசு உங்களையும் உங்களின் பணிகளையும் சிறப்பாக ஆசீர்வதிக்க ஜெபிக்கின்றோம்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...