சனி, 5 டிசம்பர், 2020

வாருங்கள் மனம் மாறுவோம்! (6.12.2020)

வாருங்கள் மனம் மாறுவோம்! 

 இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் வாசகங்கள்  அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 

திருவருகைக் காலத்தில் இயேசுவின் வருகைக்காக நம்மையே நாம் தயாரித்துக் கொண்டிருக்கக்கூடிய இந்தச் சூழ்நிலையில் இன்றைய நற்செய்தி வாசகமானது, திருமுழுக்கு யோவானின் முன்னறிவிப்பை நமக்கு உணர்த்துகிறது. ஆண்டவரின் வருகைக்கு மக்களை ஆயத்தப்படுத்தக் கூடிய பணியினை திருமுழுக்கு யோவான் செய்தார். அப்பணிக்காகவே அவர் படைக்கப்பட்டார் என்பது விவிலியம் வழி நாம் அறிந்துகொள்ளக் கூடிய ஒரு செய்தியாகும். திருமுழுக்கு யோவான் மக்களிடையே மனம் மாறுங்கள்! மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்ற அழைப்பினை மக்களுக்கு விடுக்கின்றார். ஆண்டவரின் வருகைக்கு நாம் நம்மை தயாரித்துக் கொள்ள வேண்டுமாயின் முதலில் நாம் மனம் மாற வேண்டும். ஏனெனில்  இன்று நாம் வாழக்கூடிய இந்தச் சூழ்நிலையில் தான் என்ற மனப்பான்மையும், சுயநலப் போக்கும் நிறைந்து நம்மிடையே காணப்படுகிறது. இந்த நிலைகளில் இருந்து நாம் நம்மை மாற்றிக் கொண்டு பிறர் நலனோடு வாழ அழைக்கப்படுகிறோம். 
நிலவக்கூடிய இந்த நோய்த்தொற்று சூழல் கூட நம்மை மட்டுமே பார்த்துக் கொள்ள வேண்டும், பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை மறைமுகமாகவோ, நேரடியாகவோ நமக்குள் விதைத்தாலும்,  பல இடங்களில் மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள், குடும்பங்களில் தாய் தந்தையர் எனப் பலர் தங்கள் குழந்தைகள் மற்றும் அடுத்தவரின் நலன் என்பதில் அக்கறை காட்டுகிறார்கள்
 ஆனால் பல குடும்பங்களில் நோய் தொற்று அச்சம் காரணமாக ஒருவரோடு ஒருவர் தொடாமலும் பேசாமலும் இருக்கக்கூடிய சூழல் நிலவுகிறது என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். பலமுறை ஊடகங்களிலும் அது போன்ற செய்திகளை நாம் பார்த்திருப்போம். இன்று இறைவன் நம்மை தன்னலத்தோடு வாழக்கூடிய நிலையில் இருந்து மனம் மாற அழைப்பு தருகிறார். மனம் மாற வேண்டும் என்பது அழைப்பு தன்னலத்தை மட்டும் குறிப்பதல்ல. நம்மிடையே இருக்கக்கூடிய ஆணவம், சுயநலம், எப்படியும் வாழலாம் என்ற எண்ணம், போன்றவற்றிலிருந்து நாம் நம்மை சரி செய்துகொள்ள வேண்டுமென்ற அழைப்பினை தருகிறது. 

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் பாலை நிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள். பாலை நிலத்தில் நம் கடவுளுக்கு நெடுஞ்சாலை ஒன்றை சீராக்குங்கள். பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும். மலை குன்று யாவும் தாழ்த்தப்படும். கோணலானவை  நேராக்கப்படும். கரடுமுரடானவை சமதளமாக்கப்படும். ஏனெனில் ஆண்டவர் விரைவில் வருவார். நம்மை மீட்பார் என்ற செய்தியினை உணர்த்துவதாக நாம் கருதலாம். ஆனால் எசாயா இறைவாக்கினர் தான் வாழ்ந்த சமூகத்தில் பல  முதலாளித்துவ மக்களால் நிலவுடைமைச் சமுதாயத்தினால், மக்கள் நிலங்கள் அற்று,  சுரண்டப்பட்டு வாழ்ந்தபோது அம்மக்களுக்கு மீட்பானது விரைவில் வரவிருக்கிறது. தாவீதின் குலத்திலிருந்து தளிர் ஒன்று தோன்றும் என்ற வார்த்தைகளின் அடிப்படையில்,  ஒரு நல்ல அரசன் வருவார்! அவர் நமது துயர்களை எல்லாம் தீர்த்து வைப்பார்! என்ற செய்தியினை அக்கால சமூகத்தில் வாழ்ந்த மக்களுக்கு நற்செய்தியாக அறிவித்தார்.  அதே நற்செய்தியின் பண்புகளை தான் இன்று இயேசுவின் பிறப்பின் போது திருமுழுக்கு யோவானும் அறிவித்தார். ஒரு நல்ல அரசன் வரும்பொழுது தீய எண்ணத்தோடு மக்களை கசக்கிப் பிழிந்து, சுரண்டி வாழ்ந்தவர்களை எல்லாம் அடியோடு அழித்து, உரிமை இழந்தவர்களுக்கு உரிமை தருவது போல, வரக்கூடிய ஆண்டவர் இயேசு கிறிஸ்து, இன்று நிலவக்கூடிய தீமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடியவராக இருப்பார். எனவே அவரது வருகைக்கு உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் செயல்களை திருத்திக் கொள்ளுங்கள். நீங்கள் அனைவரும் தான் என்ற மனநிலையிலிருந்து பிறர்நலம் காணுவதில் முன்னுரிமை கொடுக்கக் கூடியவர்களாக மாறுங்கள்,  என்ற செய்தியைத் தான் மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று திருமுழுக்கு யோவான் உரைப்பதாக நாம் உணரலாம். 
இன்றைய இரண்டாம் வாசகத்தில் பேதுரு தான் எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்,  
ஆண்டவர் தம் வருகைக்கு காலம் தாழ்த்துகிறார் என எண்ண வேண்டாம். சிலர் அவ்வாறு கருதினாலும் அவர் காலம் தாழ்த்துவது இல்லை. மாறாக, உங்களுக்காக பொறுமையோடு இருக்கிறார். யாரும் அழிந்து போகாமல் எல்லோரும் மனம் மாற வேண்டுமென விரும்புகிறார் என்ற செய்தியினை புனித பேதுரு அனைவருக்கும் உரைக்கின்றார். தொடக்க காலத்தில் இயேசுவின் இரண்டாம் வருகை விரைவில் நிகழும் என ஒவ்வொருவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். எதிர்பார்த்தவர்களுள் பலர் இறந்து போனார்கள்.  எனவே மக்களிடையே  நம்பிக்கையில் ஒரு தொய்வு ஏற்பட்டது. ஆண்டவர் உண்மையிலுமே கடினப்படக்கூடிய எங்களை காக்க வருவாரா? என்ற எண்ணமானது எழத் துவங்கியது.  தூய ஆவியின் தூண்டுதலால்  பேதுரு அவர்களுக்கு இறைவாக்கு உரைத்தார்.  கடவுள் காலம் தாழ்த்துவது நீங்கள் அனைவரும்  மனம் மாற வேண்டும் என்பதற்காகவே! உங்களுக்காகவே அந்த காலதாமதமானது நிகழ்கிறது என்று கூறினார். இறைவன் நம்மை தண்டிக்க வேண்டும் என விரும்புவதில்லை. மனம் மாறி நற்செயலின் ஈடுபடவேண்டும். கண்ணில் காணும் ஒவ்வொரு மனிதனையும் நாம் உடன் பிறந்தவர்களாகக் கருதி ஒருவர் மற்றவர் நலனில் அக்கறை காட்டக் கூடியவர்களாக வாழவேண்டும் என்பதையே இறைவன் விரும்புகிறார். இத்தகைய மனப்பான்மையை நாம் பெற வேண்டுமாயின் நான்  என்ற மனநிலையிலிருந்து  நாம் என்ற மனநிலைக்கு மாறவேண்டும்.  அடுத்தவரை, நம்மைச் சார்ந்தவர்கள்,  அவரும் நம் உடன் பிறப்பு.  அவரும் கடவுளின் சாயல்,  என்பதை உணர்ந்து அடுத்தவர் நலனில் அக்கறை காட்டக் கூடிய, அவர்களை பாதுகாக்க கூடிய, அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய, இருப்பதை அவர்களோடு பகிர்ந்து கொள்ளக் கூடியவர்களாக நாம் உருவாகிட வேண்டும். அவ்வாறு மனமாற்றம் பெற்றிடவே இன்று புனித திருமுழுக்கு யோவானும் நம்மை அழைக்கிறார். 
திருமுழுக்கு யோவானின் நற்செய்தியான மனம் மாறுங்கள் என்ற செய்திதான் இன்று அனைத்து ஆலயங்களிலும் ஒலிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பாவ நிலையிலிருந்து நாம் அனைவரும் மனம் மாறி ஆண்டவரின் வருகைக்கு  நம்மை நாம் தயாரித்துக் கொள்ள அழைக்கப்படுகிறோம். நம்முடைய குற்றம் குறைகளை எல்லாம் விடுத்து வாழ அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாக மனம் மாறி இறைவனை நம் உள்ளத்தில் ஏற்றிட நம்மையே நாம் தகுதியாக்கிக் கொள்ள இன்றைய நாளில் உறுதி ஏற்றுக் கொள்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...