அறம் செய்ய ஆலயம் வந்தவர்களே கிறிஸ்து பிறந்தநாள் விழாவில் கிறிஸ்து மூன்று முத்தான காரியங்களை நமக்கு வழங்குகிறார்.
1. நம்பிக்கை கொள்ளுங்கள்
2. சோதனைகளை எதிர் கொள்ளுங்கள்.
3. நேர்மறையான வார்த்தைகளால் மகிழுங்கள்.
1. நம்பிக்கை கொள்ளுங்கள்
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு இன்று நம்மை நம்பிக்கை கொள்ள அழைப்பு தருகிறது.
நாம் வாழும் இச்சூழலில் எங்கு பார்த்தாலும் பலவிதமான பிரச்சனைகள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன... திரும்பும் திசை எங்கும் துன்பங்களை கண்ணுக்குத் தெரிகின்றன.... கண்ணுக்கு தெரியாத ஒரு கொடிய நோய் உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் வீட்டுக்குள் அடக்கி விட்டது. இது ஒருபுறம் இருக்க... மறுபுறம் 26 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து குளிரிலும் பனியிலும் கடுமையான சட்டங்களை எதிர்த்து போராடக்கூடிய விவசாயிகளின் துயரமான நிலை...தமிழகத்தில் மட்டும் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என கூறுவார்கள்....அதுபோல 26 நாட்கள் போராட்டத்தில் 13 விவசாயிகள் உயிரிழந்திருக்க அதை பற்றி பேசாத நமது ஊடகங்கள் சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் குறித்து தான் தினம்தோறும் தலைப்புச் செய்திகளை தந்து கொண்டிருக்கின்றன . இந்தச் சூழலில் நம்பிக்கை என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்துகொண்டிருக்கிறது. இதே நிலைதான் அன்றைய சூழலில் இயேசு இந்த மண்ணில் பிறந்த போதும் இருந்தது. மக்கள் பல நோய்களால் துன்பப் பட்டார்கள். நோய் பட்டவன் கடவுளின் சாபத்துக்கு ஆளானவன் என கூறி அவனை தள்ளி வைக்கக் கூடிய நிலையானது அன்றே தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. இன்றும் அதே நிலை தொடர்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே ...அதுபோலவே அன்று பரிசேயர்களும் சதுசேயர்களும் பலவிதமான சட்டங்களினால் மக்களை அடிமைப்படுத்தி கொண்டிருந்தார்கள். இதே நிலை இன்றும் தொடர்கிறது என்றால் அது மிகையாகாது ...அத்தகைய சூழல்களுக்கு மத்தியில் நம்பிக்கையோடு ஆண்டவரின் வருகையை எதிர்பார்த்த மக்களிடம் ஆண்டவர் இயேசு பிறந்தார் அதுபோல இன்றும் நிலவக் கூடிய இக்கட்டான சூழ்நிலைகள் அனைத்தும் நம்மை விட்டு மறைந்து போகும் என்ற நம்பிக்கையோடு இருக்கக்கூடிய நம்மிடையே இறைவன் பிறந்திருக்கிறார் அவரின் பிறப்பு நம்பிக்கையில் நாம் ஆளப்பட அழைக்கின்றது.
2. சோதனைகளை எதிர் கொள்ளுங்கள்.
நம்பிக்கையோடு பயணிக்கும் பொழுது கண்டிப்பாக சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.சவால்களை கண்டு நாம் அஞ்சக்கூடாது. சவால்களை துணிவோடு எதிர் கொள்ளும் போது மட்டுமே வாழ்க்கையில் வெற்றி அடைய முடியும்.
கிரிக்கெட் விளையாட்டை நாம் பார்த்திருக்கலாம். 11 பேர் இணைந்து விளையாடக்கூடிய விளையாட்டில் பத்து நபர்கள் நடுவில் ஒருவர் மட்டையை கையில் வைத்திருப்பார். அவரை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு சுற்றி 11 பேர் நிற்பார்கள். ஆனால் மட்டையை பிடித்திருப்பவர் சுற்றி நிற்க கூடியவர்களை எல்லாம் கருத்தில் கொள்ளாது மிகவும் கவனத்தோடு நம்பிக்கையோடு துணிவோடும் துணிச்சலும் விளையாட்டை எதிர்கொண்டு வெற்றியை பெறுகிறார்.
நமது வாழ்வில் நாமும் நம்பிக்கையோடு பயணிக்கும்போது சந்திக்கக்கூடிய சவால்களை ஏராளம். ஆனால் சவால்களை கண்டு பின்வாங்காது உறுதியான நம்பிக்கையோடு தொடர்ந்து பயணிக்க இந்த நாளில் கிறிஸ்து நமக்கு அழைப்பு தருகின்றார். இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது சென்ற இடமெல்லாம் நன்மை செய்துகொண்டே சென்றார் என விவிலியத்தில் நாம் வாசிக்கின்றோம். எந்த சவால்களையும் கண்டும் அவர் பின்வாங்கவில்லை. அவரை பின்பற்றும் நாமும் துன்பங்களையும் சவால்களையும் கண்டு நம்பிக்கையை இழந்து விடாது தொடர்ந்து பயணிக்க பிறந்துள்ள இறைவன் இயேசு நம்மை அழைக்கின்றார் ..
3. நேர்மறையான வார்த்தைகளால் மகிழுங்கள்.
ஒரு ஊரில் ரவி ராஜா என்ற இருவர் இருந்தார்கள். ரவியும் ராஜாவும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்துவிட்டு வீட்டிற்கு சென்றார்கள். இருவரும் வீட்டிற்கு சென்றதும் தேநீர் அருந்தும் பழக்கம் கொண்டவர்கள். இருவரும் தங்களுடைய மனைவிகளிடம் தேநீர் கேட்க ராஜாவின் மனைவி தேநீர் கொண்டு வந்தால் தேநீரில் ஒரு எறும்பு இறந்து கிடந்தது. தேநீரில் இறந்து கிடந்த எறும்பை கண்டு கோபம் கொண்ட ராஜா மனைவியோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். குடும்பம் இரண்டாக பிரியும் அளவிற்கு சண்டை வலுத்தது. அதுபோலவே ரவியும் தன் மனைவியிடம் தேநீர் கேட்க...மனைவி கொடுத்த அந்த தேநீரிலுல் ஒரு எறும்புக் இறந்து கிடந்தது. எறும்பைக் கண்ட ரவி மனைவியை நோக்கி என்னை விட உன் தேநீருக்கு என்னை விட மிகப்பெரிய ரசிகன் ஒருவன் இருக்குறான். இங்கே பாரு நான் குடிப்பதற்கு முன்பாக அவன் குடிக்க முயற்சி எடுத்து தன் உயிரையே விட்டுவிட்டான் என்று காட்டினாராம். இருவருடைய நோக்கமும் ஒன்றுதான். தேநீர் தயாரிக்கும் பொழுது கவனமாக இரு என மனைவியிடம் கூறுவது. ஆனால் இருவரும் பயன்படுத்திய வார்த்தைகள் ஒன்றுதான். ஆனால் பயன்படுத்தும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பயன்படுத்தும் விதத்தை பொறுத்து மாறுபடுகிறது. இறைவார்த்தையான இறைவன்
இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக வாக்கு மனிதர் ஆனார் நம்மிடையே குடிகொண்டார் என்ற வார்த்தைகள் மூலம் இறைவன் நம்பிக்கையோடு தடைகளை எல்லாம் எதிர்கொண்டு பயணிக்கும் போது நம்முடைய வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க அழைப்பு தருகின்றார். வார்த்தையான இறைவன் நம் வாழ்வாக இருப்பது போல... நமது வார்த்தைகள் பலருக்கு வாழ்வு தர கூடிய வார்த்தைகளாக அமைய வேண்டும். இன்றைய நாளில் நாம் ஆலயங்களில் காணும் குடில்கள், நட்சத்திரங்கள், இனிப்புகள் இன்னும் பல வகையான ஏற்பாடுகள்... இந்த ஏற்பாடுகளை எல்லாம் செய்வதற்கு பலரும் தங்களுடைய உழைப்பினை தந்திருப்பார்கள்... எப்படி ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு செய்தி இடையர்களுக்கு அறிவிக்கப்பட்ட போது அவர்கள் மகிழ்ச்சியும் பேரானந்தம் அடைந்தார்களே அதுபோல நாம் இன்றைய நாளில் இந்த இடத்தில் நாம் அனைவரும் இணைந்து ஜெபிக்க பலவிதமான ஏற்பாடுகளை எல்லாம் செய்து விட்டு ஓரத்தில் நின்று ரசித்து கொண்டிருக்க கூடிய ஒவ்வொருவரையும் சந்தித்து வாழ்த்து கூறவவோம்.
கிறிஸ்துபிறப்பு செய்தியை அருகில் உள்ளவர்களோடு சொல்லி விட்டுச் செல்வது மட்டுமல்ல...அடுத்தவரை ஊக்கமூட்டுவோம். நமது நேர்மறையான நல்ல வார்த்தைகளால் ஒருவர் மற்றவரைத் பாராட்டுவோம்.இடையர்கள் இயேசுவின் பிறப்பு செய்தி கேட்டு மகிழ்ந்ததுபோல நமது வார்த்தைகளால் ஒருவர் மற்றவர்களை மகிழ்விப்போம். இதற்கே இறைவன் நமக்கு வார்த்தையின் வடிவில் அழைப்பு தருகின்றார் ....
அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவிக் கொடுப்பவர்களாக கிறிஸ்து இயேசு பாலன் வழங்கக்கூடிய முத்தான. மூன்றுச் செய்திகளை உள்ளத்தில் இருத்தி....
சோதனைகளை எதிர்கொண்டு...
நம்பிக்கையோடு தொடர்ந்து....
நேர்மறையான நல்ல வார்த்தைகளோடு.....
இச்சமூகத்தில் பயணித்து ஒருவர் மற்றவரை தேற்றே இந்த கிறிஸ்து பிறப்பு விழாவில் உறுதி ஏற்றவர்களாய் பாலன் இயேசுவின் பாதையில் பயணிப்போம் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக