புதன், 9 டிசம்பர், 2020

திருவருகைக்கால வாரச் சிந்தனைகள்

 

திருவருகைக்கால வாரச் சிந்தனைகள்

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு

வெறுமையாக காட்சிதரும் தீவனத் தொட்டி



இயேசுவை வரவேற்பதற்காக நம் இதயங்களைத் தயாரித்திட வேண்டுமென்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறுகிறார். உண்மையை சொல்வதென்றால், இயேசுவை வரவேற்பதற்கான தயாரிப்பில் இருக்கின்ற இதயம் எவ்வாறு இருக்கவேண்டும் என கற்பனை செய்துபார்ப்பது கடினமே. ஆகவே, பல ஆண்டுகளுக்கு முன்னர் இயேசுவைத் தாங்கிய அந்த எளிய தீவனத் தொட்டியை உற்றுநோக்கி, அதிலிருந்து தொடங்குவோம். இந்த ஆண்டு உங்கள் வீட்டை அழகு செய்கின்ற முதன்மையான, மிக முக்கியமான அலங்கார அம்சமாக கிறிஸ்துமஸ் குடில்இருக்கட்டும். முடியுமானால், குடிலை அமைப்பதற்காக உங்கள் இல்லத்தில் நல்லதொரு சிறப்பான இடத்தை தெரிவு செய்யுங்கள். அலங்கரிக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரத்தின் கீழே குடில் வைப்பதை தவிர்த்திடுவோம். ஏனெனில், கிறிஸ்துமஸ் மரத்தின் அடியிலே பரிசுப் பொருள்கள் எல்லாம் அடுக்கி வைக்கப்படுவதால், மரத்தின் கீழே அமைக்கப்பட்ட குடில் மறைந்து போக வாய்ப்புள்ளது. மாறாக, வீட்டினுள் இதற்கென தெரிவுசெய்யப்பட்ட இடத்தில் சிறிய மேசை போன்றதொரு உயரமான அமைப்பின் மீது குடிலை நிர்மாணிப்பதே சாலச் சிறந்தது. திருவருகைக் காலத்தின் முதல் வாரத்தில் மாட்டுத் தொழுவத்தையும், அதைச் சுற்றி சில விலங்குகள் நிற்பதாகவும் குடிலை அமைத்திடலாம். தான் முதன்முதலாக அமைத்த கிறிஸ்துமஸ் குடிலில் உண்மையான விலங்குகள் இருப்பது அவசியம் என்று அசிசி நகர் புனித பிரான்சிஸ் எண்ணினார். இயேசு சிறுகுழந்தையாகப் பிறந்தபோது, அவரைச் சுற்றியிருந்த துர்நாற்றத்தையும், கரடுமுரடான சூழ்நிலையையும் நகரத்து மக்கள் உணர்ந்து அனுபவிக்கவேண்டும் என்று அவர் விரும்பினார்.

சிறந்த தயாரிப்புக்கான சிந்தனைக் கருத்துக்கள்:-

நம் இதயங்களில் ஏற்கனவே ஒளிர்கின்ற கிறிஸ்துவின் சுடரை நினைவூட்டும் விதமாக சிறிய நேர்ச்சை விளக்கு ஒன்றை வெறுமையாகவுள்ள தீவனத் தொட்டியில் வைக்கலாம். வெறுமையாகக் காட்சியளிக்கின்ற தொழுவத்தின் முன்னே அமர்ந்து, நமது வாழ்க்கையில் காணப்படுகின்ற வெற்றிடங்களை நமக்கு எடுத்துக் காட்டிட வேண்டுமென்று இயேசுவிடம் மன்றாடலாம். புதியதொரு எதிர்நோக்கும், மன அமைதியும் நமக்குள்ளே பிறப்பதற்கான வழிவகைகளை அவரிடம் கேட்கலாம்.

ஒரு பேனாவும் காகிதமும் எடுத்துக்கொண்டு, வெறுமையாகக் காட்சிதரும் தீவனத் தொட்டியின் முன்னே அமர்ந்து, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை எளிதாக்கும் வழிமுறைகளையும், அதற்கான செயல்திட்டங்களையும் கடவுளிடம் கேட்கலாம்.

ஒவ்வொரு நாளும் இறைவேண்டலுக்கு என்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை நீங்கள் இதுநாள் வரை ஒதுக்கியதில்லை என்றால், இந்தத் திருவருகைக் காலத்தில் அதற்கு முன்னுரிமைக் கொடுப்போம். வீடு அமைதியாக இருக்கின்ற காலைப்பொழுதில் துயில் களைந்து எழுவதில் ஆரம்பிக்கலாம்; அல்லது பயணம் செய்கின்ற நேரத்தில் வானொலியை நிறுத்திவிட்டு, ஜெபம் செய்யலாம். பணிநேரம் முடிந்த பின்னர், அமைதியான ஒரு இடத்தில் நின்றுகொண்டு அல்லது படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு, கடவுளோடு தனியாக சிறிது நேரத்தை செலவிடலாம். ஆண்டு முழுவதற்கும் உங்களுக்கு நீங்களே தர விரும்புகின்ற அமைதி பரிசு, இத்தகைய திருவருகைக் கால இறைவேண்டல் நேரம்தான் என்பதை நீங்கள் கண்டுணர்வீர்கள்.

நீங்கள் சில பணிகளை முன்னிட்டு காத்துக் கொண்டிருக்கின்ற நேரங்களில் படிப்பதற்கென்று, நற்செய்தி நூல்களில் ஒன்றை உங்களோடு வைத்திருங்கள்என்று திருத்தந்தை பிரான்சிஸ் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றார். இந்த அறிவுரையைக் கருத்தில் கொள்ளுங்கள்.

கிறிஸ்துமஸ் செயல்திட்டங்களின் பட்டியலைச் சரிபார்க்கவும். விருப்பம்” “தேவை” – இவற்றிற்கிடையேயான வேறுபாட்டை நினைவில் கொள்ளுங்கள். நமக்கு விருப்பமானவற்றை அதிகமாக கேட்பதில் ஆர்வம் காட்டும் அதே வேளையில், நாம் இயேசுவோடு நெருங்கி செல்வதற்குத் தேவையானவற்றைக் கேட்காமல் இருக்கின்றோமா? வீட்டில் அல்லது அலுவலகத்தில் வைப்பதற்கான ஒரு திருச்சுரூபம் அல்லது படம், நல்லதொரு ஆன்மீக நூல், எழுச்சியைத் தூண்டுகின்ற இறைஇசை அல்லது நம்பிக்கை சார்ந்த இதழுக்கு சந்தா அனுப்புதல் இது போன்ற ஏதாவது ஒன்று நம் நினைவுக்கு வருகிறதா? இயேசுவுக்கும், அவருடைய போதனைகளுக்கும் அதிகமாக இடம் ஒதுக்குவதற்கு உகந்த வகையில் நம்மை தயாரிப்பதற்கு, நம்முடைய கிறிஸ்துமஸ் செயல்திட்டங்களின் பட்டியல் அமைந்திருக்கின்றதா என்று சோதித்தறிவதற்கு சரியான நேரம் இதுவே.

மற்றவர்களுக்கு நீங்கள் கொடுக்கவிருக்கின்ற பரிசுகளைப் பற்றியும் சிந்தியுங்கள். பரிசுகளை எந்தக் கடையில் வாங்கப் போகிறீர்கள்? கிறிஸ்தவ மதம் சார்ந்த பரிசுப் பொருள்களை விற்கின்ற கடையிலா அல்லது மால்என்றழக்கப்படுகின்ற உயர்தர அங்காடிகளிலா? நம்முடைய ஆண்டவருக்கு அருகிலே நெருங்கி வருவதற்கு ஏதுவான பரிசுகளை நாம் மற்றவர்களுக்குத் தர முடியுமா?

திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு

இடையர்களும் அவர்களுடைய ஆடுகளும்


ஒதுக்கப்பட்டு, புறந்தள்ளப்பட்ட நிலையிலிருப்போருக்கு நாம் உதவிக்கரம் நீட்ட வேண்டும்என்று திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுகின்ற மக்களுக்கு எடுத்துக்காட்டு, அன்று ஊருக்கு வெளியே வயல்வெளியில் படுத்திருந்த ஆட்டு இடையர்களே. நம்முடைய வாழ்வில் நாம் இந்த இடையர்களைப் போல யாரை புறந்தள்ளி வைத்திருக்கின்றோம்? அந்நியப்படுத்திட அல்லது புறக்கணித்திட என்று நாம் தெரிவு செய்தவர்கள் யாவர்? நம்முடைய வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில், பணிதளத்தில், குடும்பத்தில், பங்கு சமூகத்தில் அல்லது நண்பர்கள் வட்டத்தில் யாரையெல்லாம் புறந்தள்ளப்பட்டவர்களாக நினைக்கிறோம்? இவர்கள் மீது கவனத்தை செலுத்துவதற்கு இந்த திருவருகைக் காலம் நமக்கு அழைப்பு விடுக்கிறது.

இவ்வாறு குறிப்பிட்ட சிலரை நமது தனிப்பட்ட வாழ்வில் நாம் புறந்தள்ளி வைப்பதல்லாமல், உலகளவில் ஒருசில கலாச்சார குழுக்களையும், இனங்களையும், நாடுகளையும் ஒட்டுமொத்தமாகப் புறந்தள்ளி வைப்பதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான மக்களை தேவையற்ற வகையில் கட்டாயப்படுத்தி வறுமையில் வாடவிடுகிறோம். தேவையில் இருப்போருக்கு இரக்கம் காட்டுவதற்கான காலமே திருவருகைக் காலம். இதைத் தான் எசாயா இறைவாக்கினர் (40:1, 3,4) "ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்" என்கிறார் உங்கள் கடவுள். பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்" என்று கூறுகிறார். இந்த வசனங்களிலே இறைவாக்கினர் எசாயா முன்வைக்கின்ற அறிவுரை என்ன? வறுமை என்னும் பள்ளத்தாக்கில் உழல்வோர், செல்வச் செழிப்பென்னும் மலைபோன்ற உயர்விடத்தில் வாழ்வோர் இவ்விரு வகையினரும் இணைகின்ற பொருளாதார ஆடுகளத்தை சமன்செய்வது பற்றியே அவர் குறிப்பிடுகிறார். நாம் மற்றவர்களுக்கு ஆறுதலளிக்க வேண்டும் என்றால், ‘வசதி-வாய்ப்புகள்என்னும் நம்முடைய பாதுகாப்பு வட்டத்திலிருந்து நாம் வெளியேற வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் சுட்டி காட்டுகிறார். இந்த திருவருகைக் காலத்தில் இத்தகைய மேலான இரக்கத்தை செயல்படுத்த நாம் தயாராக இருக்கிறோமா?


இரக்கத்தை வெளிப்படுத்த சில சீரிய சிந்தனைகள்

வீட்டிற்கு அருகில் இருப்பவர்களிடமிருந்து நாம் ஆரம்பிக்கலாம். நம் வாழ்க்கையில் நாம் புறக்கணிக்கின்ற நபர்களின் மீது ஏதாவதொரு வழியில் அதிகமான அன்பும், இரக்கமும் காட்டத் தயாரக இருக்கிறோமா? நமது வீட்டிலுள்ள குடிலில் இருக்கின்ற இடையர்களை உற்றுப் நோக்குங்கள். இந்த திருவருகைக் காலத்தில் ஒருசிலரிடத்தில் நமது அன்பை வெளிபடுத்திட கடவுள் நம்மைத் தூண்டுகின்றார், அல்லவா? அந்த ஒருசிலரில் யாரையேனும் குடிலில் இருக்கின்ற இடையர்கள் பிரதிபலிக்கின்றார்களா?

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது உங்களுடைய சொந்த குழந்தைகளுக்கு பரிசுகள்/புத்தாடைகள் வாங்கிட எவ்வளவு தொகை செலவிடுவீர்களோ, அதே அளவு தொகையை ஏழைகளுக்கு பரிசுகள்/புத்தாடைகள் வாங்கித் தருவதற்கு உங்களால் செலவு செய்திட முடியமா?

உதவி தேவைப்படுகின்ற எளியவர்களுக்கு எங்கே, எவ்வாறு உதவி செய்வது?” என்ற முடிவுகளை எடுப்பதில் உங்கள் குடும்பத்தில் இருக்கின்ற குழந்தைகளையும் ஈடுபடுத்துங்கள். கிறிஸ்துமஸ் விழாவின் உண்மையான பொருள் பகிர்தலேயன்றி, பெறுதல் அல்லஎன்பதை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்.

நல்ல ஆடுகளாக இருப்பதற்காக இயேசு கூறுகின்ற வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அந்த அறச்செயலை திருவருகைக் கால பக்திமுயற்சியின் நடைமுறையாக ஆக்கிடுங்கள்.

ஆட்டு இடையர்களை நீங்கள் பார்க்கின்ற நேரத்தில், நல்லாயனாகிய இயேசுவை நினைத்துப் பார்ப்பது அவசியமாகிறது. இந்தத் திருவருகைக் காலத்தில் கடவுளின் கனிவான அன்புக்காக ஏங்குகின்ற ஆடுகளைப் போல நீங்கள் உணர்ந்தால், “ஆண்டவர் என் ஆயன்என்று கூறுகின்ற 23-ஆம் திருப்பாடலை நினைவுகூர்ந்து, அதனை படித்து பாருங்கள்.

திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு

உன்னதத்தின் தூதர்கள்


திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறாகிய இன்று மிகவும் சிறப்பான முறையில் நாம் இறைவனில் மகிழ்கின்ற காரணத்தால், இந்த ஞாயிறு மகிழ்ச்சி ஞாயிறுஎன்று அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை கண்டடைவது எங்கே?

எப்போதும் மாறாத மகிழ்ச்சியோடு இருக்கின்ற காரணத்தால், திருத்தந்தை பிரான்சிஸ் உலகெங்கும் வெகுவாக பாராட்டப்படுகிறார். அவரது வார்த்தைகளாலும், எடுத்துக்காட்டுகளாலும் திருச்சபை மகிழ்ச்சியின் இடமாக இருக்க வேண்டும்என்று அவர் நமக்கு சொல்கிறார். இதன் தொடர்ச்சியாக, திருச்சபை உறுப்பினர்களாக இருக்கின்ற நாமும் மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்க வேண்டும். இயேசு பாலன் பிறந்திருந்த இடத்தைச் சூழ்ந்திருந்த வானதூதர்கள் மகிழ்ச்சியை வழங்கிடவே வந்தார்கள். புனித லூக்கா எழுதுவது போல, "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்" என்றே வானதூதர்கள் மொழிந்தார்கள். வானதூதர்களின் மகிழ்ச்சியான பாடலுக்கு செவிமடுக்க இயலாத அளவுக்கு நம் வாழ்க்கை ஆரவாரமும், இரைச்சலும் மிக்கதாக இருக்கிறதா? இரவு நேரத்தில் வானத்தை அண்ணாந்து பார்த்து, வானதூதரின் பாடலுக்கு செவிசாய்க்க முடியாதபடி நாம் வேறு காரியங்களில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறோமா?

கிறிஸ்து பிறப்பின் எல்லா மகிழ்ச்சியையும் நாம் இன்னும் உணரவில்லை என்றாலும், மகிழ்ச்சியின் பரிசை நாம் மற்றவர்களுக்கு கொடுக்க முடியும். வானதூதர்கள் தங்களுக்குள்ளே மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்பதை விட, உலகம் முழுவதற்கும் இந்த மகிழ்ச்சி செய்தியை அவர்கள் கொண்டுவந்தார்கள் என்பதில் தான் அந்த தூதர்களின் மகத்துவம் மேம்படுகிறது. முடிந்தவரையிலும் அதிகமானவர்களுக்கு மிகுதியான மகிழ்ச்சியை ஒரு கிறிஸ்தவர் கொடுத்து மகிழும் காலமாக இந்த நாள்கள் அமையவேண்டும். நற்செய்தியின் மகிழ்ச்சி அனைத்து மக்களுக்கும் உரியது; இதிலிருந்து யாரையும் தவிர்த்திட இயலாது. அன்று பெத்லகேமில் இடையர்களுக்கு வானதூதர்கள் அறிவித்தது இதைத் தான்என்று நற்செய்தியின் மகிழ்ச்சிஎன்ற தனது திருத்தூது மடலில் திருத்தந்தை பிரான்சிஸ் எழுதுகிறார்.


இரக்கத்தை வெளிப்படுத்த சில சீரிய சிந்தனைகள்

நன்றி சொல்தற்கும், நன்றியுணர்வைக் காட்டுவதற்கும் நேரம் ஒதுக்குங்கள். கிறிஸ்தவ வாழ்க்கைமுறைக்கான சூத்திரம் ஒன்றைதிருத்தூதர் புனித பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் (5:16-18) நமக்குத் தருகிறார்: "எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள்.. இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்.. எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்". இறைவேண்டல் செய்வதற்கும், நன்றியுணர்வோடு இருப்பதற்க்கும் நாம் நேரம் செலவழிக்கும் போது, மகிழ்ச்சி இயல்பாகவே நம்வாழ்வில் வெள்ளமென பாய்ந்தோடுகிறது. கிறிஸ்துமஸ் விழா தொடர்பான வணிக அம்சங்களை பெரிதாகக் கொண்டு நாம் செயல்படும்போது, மகிழ்ச்சி, இறைவேண்டல், நன்றிநவில்தல் ஆகியவற்றைக் குறித்த சிந்தனையே நமக்கு இருக்காது. ஆயினும், புனித பவுலடியாரின் அறிவுரையை பின்பற்றி, நன்றியுடன் கூடிய இறைவேண்டலை கடவுளுக்கு சமர்ப்பிக்கும்போது, மகிழ்ச்சியாக இருப்பதற்கான பல காரணங்களை நாம் கண்டுணர்வோம்.

திருவருகைக் காலத்தின் ஒவ்வொரு இரவிலும் படுக்கைக்குச் செல்லும் முன்பாக கடவுளுக்கு நன்றி சொல்லும் விதமாக ஒரு சிறிய நன்றி மன்றாட்டை எழுதிவைப்போம். நமது வாழ்வில் நாம் அடைந்துள்ள பல்வேறு ஆசீர்வாதங்களையும், மகிழ்ச்சிகளையும் நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்ள இது ஒரு அருமையான வழி. இதன் வாயிலாக, கடவுளுக்கு நன்றி செலுத்துவதற்கேற்ற வகையில் எவ்வளவோ நன்மைகளை நாம் பெற்றிருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்வோம்..

குடும்பங்களில் இரவு உணவிற்காக அனைவரும் ஒன்றாக அமரும்போது, கடவுளுக்கு நன்றி சொல்லும் விதமாக அன்றைய நாளின் நிகழ்வு ஒன்றை ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் எடுத்துச் சொல்லலாம். இதனை திருவருகைக் காலத்தின் மரபாகவே கடைபிடிக்கலாம். ஆண்டின் இந்த காலத்தில் நம் தலையில் சுமத்தப்படுகின்ற எண்ணற்ற விளம்பரங்களால் விளைகின்ற பொறாமை போன்ற சிக்கல்களிலிருந்து விடுபட்டு நம்மையே சமன் செய்வதற்கு, நன்றி நவிலும் பண்பை வளர்த்துக் கொள்ளுதல் சிறந்த ஒரு வழியாகும்.

இசையும், பாடல்களும் மேலான மகிழ்ச்சிக்கு அடிப்படை ஆதாரமாக இருக்கக்கூடும். எப்போதும் கிறிஸ்துமஸ் விழாவையொட்டிய இசை உங்களைச் சூழ்ந்திருக்கட்டும். ஒரு கிறிஸ்துமஸ் கேரல்ஸ்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யுங்கள். உங்கள் குரல் பிரமாதமாக இல்லையென்றாலும், கிறிஸ்து பிறப்பின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பாடல்களை நீங்கள் பாடுவதை உங்கள் நண்பர்களும் அக்கம்பக்கத்தாரும் கேட்கட்டுமே!..

நமது நண்பர்களுக்கும், நமக்கு முன்பின் தெரியாதவர்களுக்கும் நம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமல் சின்னச் சின்ன பரிசுகளை தருவது, வேடிக்கையாக மகிழ்ச்சியை பரவலாக்குவதற்கு சிறந்த வழியாகும். குழந்தை இயேசுவின் பிறப்பின் மகிழ்ச்சி உங்களோடு நிலைத்திட வாழ்த்துகிறேன்என்பது போன்ற வாழ்த்துச் செய்திகள் உங்கள் பரிசுகளோடு இணைந்திருக்கட்டும். மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்கான சில எளிய வழிகள்:
கிறிஸ்துமஸ் மரங்களில் அல்லது நீங்கள் சந்திக்கச் செல்கின்ற நண்பர்களின் வீடுகளில் கிறிஸ்துமஸ் அலங்கார அணிகலன்களை மறைத்து வைக்கலாம்.
உடன் உழைக்கும் பணியாளர்களின் மேசையில் அவ்ர்களுக்குத் தெரியாமல் அவர்கள் வியக்கும் வண்ணம் இனிப்புகளை விட்டு வைக்கலாம்.
புதிதாக குடிவந்து தனியாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டுவாசலில் உங்கள் பெயரை வெளிப்படுத்தாமல் ஒரு பரிசை விட்டு வைக்கலாம்.
இந்த கிறிஸ்துமஸ் விழாவின் போது மகிழ்ச்சியாக இல்லாத ஒருவருக்கு மலர்களை அனுப்பலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...