திங்கள், 28 டிசம்பர், 2020

நமது வாழ்வை இறை வார்த்தைகளின்படி அமைத்துக் கொள்வோம். (29.12.2020)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள்  வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 இன்றைய முதல் வாசகமானது நாம் எப்படி வாழவேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக சகோதர சகோதரிகளுக்கு இடையே இருக்கக்கூடிய உறவு பற்றி இன்றைய வாசகம் நமக்கு உணர்த்துகிறது. சகோதர சகோதரிகளை வெறுப்போர் இருளில் இருக்கக்கூடியவர்கள். அவர்கள் அனைவரும் இருளின் ஆட்சிக்குரிய செயல்களில் ஈடுபடுபவர்கள். எனவே அவர்கள் பொய்யர்கள் என்ற செய்தியினை இன்றைய முதல் வாசகம் வழங்குகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் சிமியோன் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைக் கண்டு கொள்கிறார். சிமியோன் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை கண்டு கொண்டு,  இந்த குழந்தை பலரின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக இருக்கும் என மரியாவிடம் கூறுகிறார். மேலும் உனது  உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவும் என்ற செய்தியையும் மரியாவினிடத்தில் கூறுகிறார்.

 இன்றைய வாசகங்கள் அனைத்தும் நமக்கு உணர்த்த கூடிய செய்தி எது என்ற மையக்கருத்தோடு சிந்திக்கும் பொழுது,  ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து அன்போடு உறவோடு நேர்மறையாக வாழவேண்டும் என்ற செய்தியினை இன்றைய வாசகங்கள் முன்னிறுத்துவதாக உணர்கின்றேன். சிமியோன், இந்த குழந்தை இஸ்ரயேலில் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும் என குறிப்பிடுகிறார். வீழ்ந்தவர்கள் எல்லாம் எதிரிகளும் அல்ல.  எழுந்தவர்கள் எல்லாம் எப்போதும் இயேசுவோடு உடன் இருந்தவர்களும் அல்ல. இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது சகோதரத்துவத்தையும் உறவையும் மையப்படுத்தி தனது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டார். மனிதனை மனிதன் மதிக்க வேண்டும். சுய விருப்பு வெறுப்பு காரணமாக ஒருவர் மற்றவரை அடிமைப்படுத்துவது என்பது தவறு என்பதை தனது செயலால் சுட்டிக்காட்டினார். அடிமையாக வைக்கப்பட்ட மக்களுக்கு அடிமை நிலையை ஏற்று நாம் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்து தொண்டு செய்து வாழ வேண்டும் என்ற பாடத்தை கற்பித்துச் சென்றார்.

 இன்றைய முதல் வாசகத்தில் கூறப்படுவது போல, சகோதர சகோதரிகளை வெறுப்போர் இருளில் நடப்பவர்கள் என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப, நாம் வாழாமல்  ஒளியின் மக்களாக வாழவேண்டும் என்ற செய்தியை நமக்கு இயேசு வழங்கிச் சென்றார். இயேசு வழங்கிச் சென்ற செய்தியை நாம் இன்றைய நாளில் உள்ளத்தில் சீர்தூக்கிப் பார்த்து சிந்தித்து, நமது வாழ்க்கையை நல்வழியில் அமைத்துக்கொள்ள அழைக்கப்படுகின்றோம். சிமியோன் ஆண்டவர் இயேசுவை தன் கரங்களில் பெற்றதும் என்னை அமைதியோடு போகச் செய்யும் என்று வேண்டுகிறார். நாமும் பல நேரங்களில் உறவுச் சிக்கல்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கும் போதும், உறவுகளிடத்தில் கோபங்கள் உருவாகும் போதும்,  அமைதியோடு இருக்க இறையருளை வேண்டுவோம். அதற்கு இன்றைய வாசகங்கள் நமக்கு உதவியாக அமைகின்றன.  அதிலும் குறிப்பாக சிமியோனின் செயல்பாடுகள் நமக்கு இந்த வாழ்க்கை பாடத்தை கற்பிக்கின்றன. சிமியோன் மரியாவை நோக்கி, உன் உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவும் என்று கூறுகிறார். நடக்கக்கூடிய நிகழ்வுகள் அனைத்தும் மிகவும் வியப்பாக இருந்தபோதிலும் அன்னை மரியா அனைத்தையும் தன் உள்ளத்தில் இருத்தி சிந்தித்துக்கொண்டே இருந்தார் என விவிலியத்தில் நாம் வாசிக்கின்றோம். நமது கற்பனைக்கு எட்டாத நிகழ்வுகள் நிகழும் பொழுது, நாம் பரபரப்பு அடையாளமும், வேகம் கொள்ளாமலும், நிதானமாக எதையும் சிந்தித்து பார்க்க அழைக்கப்படுகிறோம். பெரும்பாலும் சிந்திக்காமல் செயல்படக்கூடிய நேரங்களில்தான் உறவுகளிடையே சிக்கல்கள் உருவாகிறது. சகோதர சகோதரிகளின் உறவுகளுக்கு இடையே மனகசப்பு ஏற்படுகிறது. எனவே அது பழிவாங்கலுக்கு வழி வகுத்துக் கொடுக்கிறது.  இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும், நாம் அமைதியோடும், நேர்மையோடும், உண்மையோடும் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்யக் கூடியவர்களாக, உறவில் வாழக் கூடியவர்களாக எப்போதும் உறவை மட்டுமே மையப்படுத்தி நமது பணியினை செய்யக்கூடியவர்களாக இருப்பதற்கு, அழைப்பு தரப்படுகிறது. நம் வாழ்க்கையில் நாம் உறவோடு வாழ வழிகாட்டும் ஆண்டவரின் வார்த்தைகளுக்கு, திறந்த மனதோடு செவிகொடுத்தவர்களாக நமது வாழ்வை இறை வார்த்தைகளின்படி அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்றவர்களாய்,  இயேசுவின் பாதையில் அவரோடு இணைந்து பயணிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...