இருளை சபிப்பதை விட ஒளி ஏற்றுவோம்!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய முதல் வாசகத்தில் தீய வழிகளிலிருந்து, நல்ல வழிகளில் அதாவது இருளுக்குரிய செயல்களில் இருந்து, ஒளிக்குரிய செயல்களில் வாழக்கூடிய இளைஞர்கள், சிறுவர்கள் என ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு, அவர்களுக்கான வாழ்த்துச் செய்தியாக யோவான் இந்த கடிதத்தை எழுதுவதாக குறிப்பிடுகிறார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், அன்னா என்ற 84 வயது பெண்மணி, கணவனை இழந்த பிறகு ஆலயத்திலேயே தங்கி இருந்து ஆண்டவருக்கு திருப்பணி செய்யக்கூடியவராக இருந்து ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, பாலன் இயேசுவை கண்டு கொண்டு, அந்த பாலகனை பற்றிய செய்தியை சுற்றி இருந்தவர்களுக்கு அறிவித்துக் கொண்டிருந்தார், என வாசிக்கிறோம். குழந்தை இயேசுவும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்தவராய், இருந்தார் என விவிலியத்தில் கூறப்படுகிறது. இன்றைய வாசகங்கள் நாம் அனைவரும் இருளைச் சபிப்பதை விட ஒளியை ஏற்ற கூடியவர்களாக இருக்க அழைப்பு விடுக்கின்றன. ஆம்! வாழ்க்கையில் கணவன் இறந்த பிறகு ஒரு பெண்மணியின் வாழ்க்கை என்பது கேள்விக்குறியாகிறது. ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கக் கேட்ட, அன்னா என்ற பெண்மணி கணவனை இழந்த நிலையிலும், ஆண்டவருக்கு திருப்பணி செய்வதை, தலைமேற்கொண்டு அப்பணியை முழு ஈடுபாட்டோடு செய்து வந்தார். பல நேரங்களில் நாம் நமது வாழ்க்கையில் துன்பங்கள் நேரும் போது, அனைத்தும் முடிந்துவிட்டது. இனி வாழ்வே இல்லை என்ற எண்ணத்தோடு எந்த வேலையிலும் ஈடுபடாமல், முடங்கிப்போய் இருக்கின்றோம். அப்படியே முடங்கிப் போய் இருளுக்குள் நாம் இருப்பதை விட, ஒளி ஏற்றக் கூடிய அன்னாவாக நாமிருக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன. தீய வழிகளில் இருந்து தங்களை சரி செய்து கொண்டு வாழ்ந்த, இளைஞர்களையும் சிறுவர்களையும் யோவான் குறிப்பிட்டு, எழுதிய கடிதம் போலவே, யோவான் குறிப்பிட்டு அவர்களுக்காக எழுதிய இந்த மடல் நாமும் இருளுக்குரிய செயல்களான, தீமையை விட்டு விட்டு ஒளியை ஏற்றக் கூடிய ஒளிக்குரிய மக்களாக இருக்கும்போது, நாமும் முன்னுரிமைப்படுத்தப்படுவோம் என்ற செய்தியினை நமது இன்றைய முதல் வாசகம் நமக்கு உணர்த்துகிறது. இயேசு வளரும்போது வலிமை பெற்று, ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்தவராய், இருந்தார் என்ற வாசகப் பகுதிகள், நாமும் வளரும் போது, வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து, கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ்வதற்கு அழைப்பு தருகின்றன. இறைவார்த்தை வழியாக இறைவன் கொடுக்கக்கூடிய அழைப்பினை உணர்ந்து கொண்டவர்களாக, இருளை சபிப்பதை விட ஒளி ஏற்றக் கூடிய ஒளியின் மக்களாக இருந்து, பிறருக்கு ஒளி வீசிட இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்போம்.
நாம் எவ்வளவு தான் திட்டினாலும் கோபப்பட்டாலும் இருள் தான் இருக்கும் இடத்தை விட்டு விலகிச் செல்லாது. நமக்கு சோர்வு தரும் அத்தகைய காரியங்களையும் செய்வதைவிட சிறு புன்னகையோடு சிறு ஒளியை ஏற்றினால் இருள் தானாகவே மறைந்துவிடும்! தங்களின் மேலான கருத்துக்களுக்கு எங்களது வாழ்த்துக்களும்! பாராட்டுக்களும்!
பதிலளிநீக்கு