செயல்வீரர்களாய் வாழ்வோம்!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
"ஏழை எளியோரை நான் உன் நடுவில் விட்டு வைப்பேன்" என்ற முதல் வாசகத்தின் அடிப்படையில், இன்று நமது வாழ்வில் நம்முடன் இருக்கக்கூடிய ஏழை எளியவர்களை நினைவுகூர இன்று நாம் அழைக்கப்படுகிறோம்.
ஏழை எளியோரின் நலனுக்காக, அவர்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்துகிறேன் எனச் சொல்பவர்கள் பலர். ஆனால், செயல்படுபவர்கள் குறைவு. இதனை இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக எளிதாக உணர்ந்து கொள்ள முடியும்.
நம் ஆண்டவர் இயேசுவும் கூட என்னை நோக்கி,
ஆண்டவரே! ஆண்டவரே! என்று சொல்லிக் கொண்டு இருப்பவர் எல்லாம் விண்ணரசில் சேர மாட்டார். மாறாக இறைத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே இறைவனுக்கு ஏற்ற நபராவார், என்று கூறியதை நாம் விவிலியத்தில் வாசிக்கிறோம். நமது உடல் உறுப்புகளில் மிகச்சிறிய உறுப்புகளுள் ஒன்றான
நாக்கு, இந்த உலகத்தையே புரட்டி போடும் அளவிற்கு வல்லமை வாய்ந்தது.
அன்று தொடக்கத்தில், உண்டாகுக என்ற ஒரே ஒரு சொல்லால் இந்த உலகை படைத்த கடவுள், தனது வார்த்தைக்கு செயல் வடிவம் கொடுத்து, அதை நிறைவேற்றிய கடவுள், அவரைப் போல அவரை பின்பற்றி வாழ, சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாமல் வாழ நம்மை அழைக்கின்றார்.
நம் ஆண்டவர் இயேசுவைப் போல நாமும் நன்மையான காரியங்களை சிந்திக்கவும் பேசவும் அதனை செயல்படுத்தி எளியோரின் வாழ்வில் ஏற்றம் காணவும் இன்றைய நாளில் நம் ஆண்டவரின் ஆசியை வேண்டுவோம். அவரைப் போல செயல் வீரர்களாய் வாழ்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக