செவ்வாய், 29 டிசம்பர், 2020

புத்தாண்டு திருப்பலி - 2 (1.1.2021)

 புத்தாண்டு திருப்பலி 


முன்னுரை


குழந்தை இயேசுவின் அன்பில் இறை சமூகமாய் ஒன்று கூடியிருக்கும் சகோதர, சகோதரிகளே!

பழையன கழிதலும், புதியன புகுதலும் நம் வாழ்வின் தவிர்க்க முடியாத எதார்த்தமாகி விட்டன. எதை எடுத்துக் கொண்டாலும் புதுமையை நாடி ஓடிக்கொண்டிருக்கின்றது இந்த உலகம். மாற்றம் மட்டுமே மாறாத இந்த உலகில் நாமும் மாறிக்கொண்டு தான் இருக்கிறோம். மனித உறவுகளையும் மாற்றிக் கொண்டேதான் இருக்கின்றோம். இத்தகைய சூழலில் இன்னும் சில மணித்துளிகளில் நாம் 2021 என்னும் புதிய வருடத்தில் காலடி வைக்க போகின்றோம். பத்தோடு ஒன்று பதினொன்றாய் இந்த வருடத்தையும் நாம் எதிர்நோக்குகின்றோமா? அல்லது நமது வாழ்வில் மாற்றம் வேண்டும், அந்த மாற்றம் நம்மை முன்னேற்;றத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் எதிர்நோக்கி இங்கே வந்திருகின்றோமா? சிந்தித்துப் பார்க்க அழைக்கின்றது இப்பெருவிழாத் திருப்பலி…

வண்ண ஆடை, அணிகலன்களை மட்டும் புதிதாக மாற்றிக் கொண்ட நாம், நமது உள்ளத்தையும் புதிதாக மாற்றி அமைத்து, தந்தையாம் இறைவனுக்கு நன்றிச் செலுத்திடவும், இறைவனின் தாயான கன்னி மரியாளின் பரிந்துரைச் செபத்தைக் கேட்டிட, இன்றைய வழிபாடு நம்மை அழைக்கிறது. வெளி ஆடம்பரங்களை மட்டும் விரும்பும் நமக்கு “ஆண்டவர் முகத்தை அல்ல, அகத்தைப் பார்க்கிறார்” (1சாமு 16:7) என்கிற இறைவார்த்தை நம்மை புதிய மனிதர்களாய் வாழவும் நமது பழைய பாவநிலையை அகற்றி, இறைவன் தங்கும் ஆலயமாக வாழவும் பணிக்கிறது.

புலரவிருக்கிற இந்த புதிய ஆண்டிலே நாமும் நம்முடைய பழைய வாழ்க்கையின் குறைகளை அகற்றுவோம். நமது உறவுகளிலே புரிதலும், உண்மையும் கொண்டு புது உலகம் படைத்திட விழைவோம். நமது செயல்பாடுகள் பிறருக்கு ஊக்கம் தருகிற உரமாக அமைய முற்படுவோம். புனித பவுலடியார் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் சொல்வது போல நம்மிடையே எந்த வேறுபாடும், பாகுபாடும் இல்லாமல் இறைவனின் அன்பைச் சுவைக்கும் மக்களாய் வாழ முயலுவோம். புது மனிதர்களாய் புது பிறப்படைந்த கிறிஸ்தவர்களாய் வாழ இறைவனின் அருளை இத் திருப்பலியில் மன்றாடுவோம்.

ஒருவர் மற்றவருக்காய் செபிப்போம்!


முதல் வாசக முன்னுரை 

எண் 6:22-27

கடவுளின் சேவர்கள் மக்களுக்கு எவ்வாறு ஆசி வழங்க வேண்டும் என்று முதல் வாசகம் நமக்கு கூறுகிறது. அவர்கள் ஆசி வழங்கும் போது ஆண்டவர் மக்களை காக்கின்றார் என்றும், ஆண்டவருடைய திருமுகம் என்றென்றைக்கும் மக்கள் மேல் ஒளிர்கிறது என்று கூற வேண்டும் என கூறும் இவ்வாசகத்திற்கு செவி மடுப்போம்.


இரண்டாம் வாசக முன்னுரை 

கலா 4:4-7

உலக மீட்பர் இயேசு கிறிஸ்து வழியாக ஆண்டவருடைய ஆவி நம்மில் குடிகொண்டிருக்கிறது. அந்த ஆவி கடவுளை அப்பா தந்தையே என அழைக்கும் உரிமையை கொடுத்துள்ளது. ஆக இனி நாம் அனைவரும் அடிமைகளல்ல. மாறாக இறைவனின் பிள்ளைகள் என கூறும் பவுல் அடிகளாரின் மடலுக்கு செவிமடுப்போம்.


மன்றாட்டுகள்:

1. அன்பே உருவான இறைவா! திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரையும் இப்புதிய ஆண்டில் ஆசீர்வதித்து, அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலும் நீர் உம்முடைய உடனிருப்பைத் தந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


2. அன்பால் ஆளுகை செய்யும் இறைவா! எம் நாட்டுத் தலைவர்கள், அரசு பணியாளர்கள், அனைவரும் தங்கள் கடமைகளை உணர்ந்து ஊழல், லஞ்சம் தவிர்த்து உண்மையான பிறநல எண்ணத்தோடு பணியாற்றிடவும், மக்களின் நலனில் அக்கறைக் கொள்ளவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



3. வளங்களின் நாயகனே எம் இறைவா! எம் பங்குத் தந்தையையும், பங்கு மக்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து இப்புதிய ஆண்டில் நாங்கள் அனைவரும் அன்பின் சமூகமாக வாழவும், நற்செய்தியின் விழுமியங்களை எங்கள் வாழ்வின்மைக்காகவும் கொண்டு புது சமூகத்தை உருவாக்க எங்கள் அனைவருக்கும் நல் மனதினை தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


4. நிறைவாழ்வு வழங்கும் இறைவா! எம் பங்கில் உள்ள குழந்தைகளுக்கு நல்ல ஞானத்தையும், இளையோருக்கு வேலை வாய்ப்பையும், உடல் நலமற்றோருக்கு நல்ல உடல் சுகத்தையும், மேலும் பல்வேறு கனவுகளை இதயத்தில் சுமந்து நிற்கும் உம் பிள்ளைகளாகிய எங்களின் வேண்டுதல் கேட்டு அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...