புதன், 30 டிசம்பர், 2020

மீட்புத்திட்டத்தில் இறைவனின் தாய் அன்னை மரியா! (01.01.2021)

மீட்புத்திட்டத்தில் இறைவனின் தாய் அன்னை மரியா! 
 
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  உங்கள் அனைவரோடும் இன்றைய வாசகங்களின் வழியாக இறைவார்த்தையினை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  
ஒருமுறை பள்ளியில் குழந்தைகள் இடத்தில் சென்று வாழ்க்கை என்றால் என்ன? என்ற கேள்வியை எழுப்பிய போது,

 ஒரு குழந்தை சொன்னது,  
பிறப்பும் இறப்பும் தான் வாழ்க்கை என்றது.
 
இன்னொரு மாணவன் கூறினான்,  

அறையில் இருந்து இன்னொரு அறைக்கு செல்வது தான் வாழ்க்கை என்றான். 
 விளக்கமாக கூற கேட்டேன் 
ஆறாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பிற்கு செல்வது தான் வாழ்க்கையா? என்றேன்.  
அதற்கு அவன் கூறினான்,  

நான் அந்த அறை இல்லை. கருவறையிலிருந்து கல்லறை செல்வது தான் வாழ்க்கை என்றான். 

இன்னும் ஒரு சிலரிடம் கேட்டபோது 

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலமே வாழ்க்கை என்றார்கள்.  

வாழ்க்கையை பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக புரிதல்களை கொண்டிருப்பதை உணர முடிந்தது.  

நாம் இன்று இம்மண்ணில் வாழ்கிறோம் என்றால், நம் ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டமானது இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளது. அத்திட்டத்தை நிறைவேற்றும்  கருவிகளாகத் தான் இவ்வுலகத்தில் நாம் இருக்கிறோம் என எண்ணலாம்.  அன்னை மரியாவின் பிறப்பு,  அன்னை மரியாவின் வாழ்வு, இறைவனின் மீட்புத் திட்டத்திற்கு வழிவகுத்தது என்றால் மிகையாகாது.   

பெண் என்றாலே பொதுவாக சமுதாயம்  ஆணுக்கு கீழாக கருதுகிறது.  ஆனால் வரலாற்றை சற்று ஆழமாக திருப்பி பார்க்கும் பொழுது, பெண்தான் முதலில் ஆதிக்கச் சக்தியாக இருந்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். 
ஆம்!  அன்புக்குரியவர்களே!
 நாடோடி சமூகமாக வாழ்ந்த போது பெண்கள்  குடும்பத்தை நடத்தக்கூடிய தலைவர்களாக இருந்தார்கள்.  நாகரீக வளர்ச்சி, ஆணை மையப்படுத்தி ஆணுக்கு கீழானவள் பெண் என்ற பார்வையை வளர்வதற்கு வித்திட்டது.  இன்று ஆணும் பெண்ணும் சமம் என்ற பார்வையானது நிலவிக் கொண்டிருக்கிறது.  

முதன்முதலில் ஆணுக்கு பெண்ணின் மீது வெறுப்பு வருவதற்கான காரணங்கள் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் , ஒரு பெண்ணால் ஒரு உயிரை சுமந்து பெற்று கொடுக்க முடிகிறது. தன்னால் இயலாத ஒன்றைச் செய்யக் கூடிய வலிமை வாய்ந்த பெண்ணின் மீது பொறாமை கொண்டான் ஆண். எனவேதான் பெண்ணை தனக்கு கீழாக என்ற அடக்குமுறையானது, நாகரிக வளர்ச்சியில் உதயம் ஆனது என்பது நாம் வரலாற்றிலிருந்து அறிந்து கொள்ளுகிறோம்.       

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் இந்த அன்னை மரியாவும் யூத சமூகத்தில்  வாழ்ந்து வந்தார். பெண் என்றால் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டியவள். ஆணுக்கு  இணையாக மதிக்கப்படாதவள்.  பெண் என்பவள் பிள்ளை பெற்றுக் கொடுக்கும் ஒரு கருவியாக மட்டுமே பார்க்கப்பட்ட ஒரு காலம் இப்படிப்பட்ட காலத்தில் ஆங்காங்கே சிலர் மட்டுமே பெண்ணுக்கு உரிமையும் நீதியும் கொடுத்திருந்தார்கள்.  இப்படிப்பட்ட சூழலில்  அன்னை மரியா ஆண்டவரின் திட்டத்திற்கு தன்னை ஆகட்டும் எனக்கூறி கையளிக்கின்றார்.  அன்னை மரியா தன்னை கையளித்ததன்  வெளிப்பாடுதான்,  ஆண்டவர் இயேசு கிறிஸ்து இம்மண்ணில்  உதயமாகிறார்.

 ஒரு பெண் திருமணத்திற்கு முன்பாக கருவுற்றால், அவளை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது யூதச் சமூகத்தில் மோசே வழியாக கொடுக்கப்பட்ட கட்டளை.  இதனை அங்கு இருந்த ஆண்கள் அறிந்திருக்கிறார்களோ இல்லையோ, பெண்ணானவள் நன்கு அறிந்திருந்தாள்.  இருந்தபோதும் திருமணத்திற்கு முன்பாக இறைவனுடைய தூதர் கூறிய வார்த்தைகளுக்கு ஏற்ப,  அவ்வார்த்தைகளை கடவுளிடமிருந்து வந்தது என்பதை கண்டு கொண்டதன் அடிப்படையில், நான் ஆண்டவரின் அடிமை உமது சொற்படியே எனக்கு ஆகட்டும் என கூறி, இறைவனின் திட்டத்திற்கு தன்னை கையளித்தார் அன்னை மரியா.  இறைவனின் திட்டத்திற்கு முழுமையாகக் கையளித்ததன் விளைவாக,  இறைவன் சூசை வழியாக அவரை காத்து வந்தார்.  இந்த அன்னையை கடவுளின் தாய் என திருஅவை அறிமுகப்படுத்தியது.  

தொடக்க காலத்தில் மரியா இயேசுவினுடைய தாய். ஏசு என்பவர் மனிதன் மட்டுமே. கடவுள் அல்ல. கடவுளுக்கு எப்படி ஒரு பெண் தாயாக இருக்க முடியும்?  என்ற தப்பரை கருத்துக்களை முன்வைத்து 
 இயேசுவின் மனித உடலுக்கே மரியா தாய்.  கடவுளுக்கு அல்ல என தப்பறை கொள்கைகள் பரவிய சூழலில்,  திருஅவை இணைந்து அமர்ந்து பேசி,   இயேசு  கடவுள் நிலையிலிருந்து மனிதனாக இந்த மண்ணிற்கு வந்தவர் என்பதை வெளிகாட்டும் வகையிலும், விவிலியத்தில் எலிசபெத்தம்மாளை அன்னை மரியாள் சந்தித்தபோது, என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? என்ற வார்த்தைகளின் அடிப்படையிலும், ஆண்டவரின் தாய் அன்னை மரியா என்பதை அதிகாரபூர்வமாக பிரகடனப்படுத்தியது தாய் திருஅவை. அதன் விளைவே ஒவ்வொரு வருடத்தின் முதல் நாளையும் மரியா கடவுளின் தாய் என்ற விழாவினை நாம் சிறப்பிக்கின்றோம்.  

மரியா கடவுளுக்கு மட்டும் தாய் அல்ல!  
மரியா கடவுளின் குழந்தைகளாகிய நம் ஒவ்வொருவருக்கும் தயாகிறார். அன்னை மரியாவின் வாழ்வு ஆயிரம் அர்த்தங்களை சொல்லக்கூடிய ஒரு வாழ்வு.  
அன்னை மரியா ஒரு வீரப்பெண் எனக் கூறலாம். 
அன்னை மரியாவை ஒரு தாழ்ச்சியின் வடிவம் எனக் கூறலாம்.  
அன்னை மரியாவை விடியற்காலத்தின் விண்மீன் எனக் கூறலாம். 

இன்னும் பல வழிகளில் , பல வார்த்தைகளால் அன்னை மரியாவை நாம் புகழ்ந்து பேசலாம். 

தாய்மை என்பது சாதாரண ஒரு செயல் அல்ல.  ஒரு பெண் தாய்மை நிலையை அடையும்போது,  அடையக்கூடிய மகிழ்ச்சி இவ்வுலகத்தில் எதற்கும் ஈடு செய்ய முடியாத ஒன்றாக கருதப்படுகிறது. வீடுகளில் பொதுவாக கூறுவார்கள்,  கடவுள் இந்த பூமிக்கு வருவதில்லை. மாறாக தாய்மார்களை அனுப்பி வைக்கிறார் என்று. ஒவ்வொரு தாயும் கடவுளின் மீட்புத் திட்டத்தில் பங்கெடுக்கிறார்கள்.  ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தை மீட்க வேண்டுமென்று மீட்புத் திட்டத்தில் முதன்முதலாக தன்னை கையளித்தவர் இந்த அன்னைமரியா.

 மீட்புத் திட்டமா? அப்படி என்றால் என்ன? என்ற கேள்வி எழலாம் உள்ளத்தில். ஆம்!  அடுத்தவருக்காக வாழ்வை அர்ப்பணிப்பதே மீட்பு திட்டமாக கருதப்படுகிறது. இயேசுவின் பிறப்புக்காக இன்னல்களுக்கு மத்தியிலும்,  சவால்களுக்கு மத்தியிலும்,  அன்னை மரியாள் தன்னை கையளித்தார்.  அவரிடமிருந்து பிறந்த ஆண்டவர் இயேசுவும் அடுத்தவரின் நலனுக்காக இச்சமூகத்தில் குரல் எழுப்பிக் கொண்டே இருந்தார். இறுதியில் பலரின் மீட்புக்காக அவர் கொல்லப்பட்ட போது கூட சாவை  இன்முகத்தோடு ஆண்டவரின் திட்டம் என்று ஏற்று,  நம் அனைவரையும் பாவத்தில் இருந்து விடுவித்தார். நாமும் இன்றைய நாளில் இறைவனது மீட்புத் திட்டத்தில் பங்கெடுக்க அழைக்கப்படுகிறோம்.  

பொதுவாக கூறுவார்கள், ஒரு குழந்தையைப் பெற்ற தாய்க்கு மட்டும் தான் தெரியும் வலியும் வேதனையும் என்பார்கள். ஆனால் இந்த நேரத்தில் நாம் நமது தந்தையர்களை மறந்து விடவும் கூடாது. அன்னை மரியாவுக்கும் இயேசுவுக்கும் பாதுகாப்பாய் நின்று,  அவர்களை காத்து வந்தவர்,  புனித சூசையப்பர்.  அதுபோல தான் இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் ஒவ்வொரு தந்தையரும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் பாதுகாப்புடன் வழி நடத்துவதற்கு பாதுகாப்புடன் இருப்பதற்கு பலவிதமான இன்னல்களை சுகமாக ஏற்றுக்கொள்கிறார்கள்.  பெற்றோர் செய்யும் தியாகத்தை நம்மால் வார்த்தைகளால் விவரிக்க இயலாது.  தாய்க்குத் தான் பிரசவ வலி தெரியும் என்று கூறுவார்கள். ஆம்!  ஒரு தந்தைக்கும் பிரசவ வலி தெரியும்.  அவர் குழந்தையை பெற்றெடுப்பது இல்லை. மாறாக தாயும் சேயும் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர் படக்கூடிய மனவேதனையை அவரை அன்றி வேறு எவராலும் அறிய இயலாது.

இன்று நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் இந்த புதிய வருடமானது அன்னை மரியாளை நமக்கு  கடவுளின் தாய் எனச் சுட்டிக் காட்டுவதன் நோக்கம், நாம் அனைவரும் அன்னை மரியாவை போல, நமது பெற்றோர்களைப் போல, ஒருவர் மற்றவருக்காக, ஒருவர் மற்றவரின் நலனுக்காக, நமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, இறைவனின் மீட்புத் திட்டத்தில் சிறந்த கருவிகளாக பயணிக்க வேண்டும், என்பதன்அடையாளம் ஆகும். எனவே அன்புக்குரியவர்களே!  பிறந்திருக்கும் இந்த புதிய ஆண்டில் நடந்தவைகளை எல்லாம் மறந்து கடந்த கசப்பான அனுபவங்களை எல்லாம் பாடமாக மனதில் இருத்தி,  அன்னை மரியாள் எப்படி நிகழ்ந்த அனைத்தையும் உள்ளத்தில் இருத்தி சிந்தித்துக்கொண்டே இருந்தார் என நாம் விவிலியத்தில் வாசிக்கின்றோமோ,  அவ்வார்த்தைகளுக்கு ஏற்ப நாமும் கடந்த வருட அனுபவங்களில் நமக்கு கிடைத்த அனுபவங்களை எல்லாம் மனதில் பதிய வைத்து அதனை பாடமாகக் கொண்டு,  பிறந்திருக்கும் இந்த புதிய ஆண்டில்,  ஒருவர் மற்றவரின் நலனை முன்னுரிமைப்படுத்தி, ஒருவர் மற்றவருக்காக உழைக்கவும், ஒருவர் மற்றவருக்காக வாழவும்,  ஒருவர் மற்றவரை புரிந்து கொள்ளவும்,  பிறந்திருக்கும் இப்புதிய நாளில் செயலாற்றிட இறையருளை வேண்டி, தொடர்ந்து இணைவோம் இந்த திருப்பலியில்,  இறை ஆசிர் பெற்றுக் கொள்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...